பி.பி.சி. தமிழோசை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டதன் மூலம் இலங்கை அரசு மக்களின் தகவலறியும் உரிமையை பறித்துள்ளதாக ஊடக அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் உட்பட ஐந்து ஊடக அமைப்புகள் விடுத்துள்ள அறிக்கையில்; பி.பி.சி. தனது நாளாந்த தமிழ், சிங்கள, ஆங்கில நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்புவதை இடை நிறுத்தியுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலுள்ள அரச அதிகாரிகளால் இந்த நிகழ்ச்சி தொடர்ந்தும் தணிக்கை செய்யப்பட்டு வந்ததால் பி.பி.சி. இந்த முடிவை எடுத்துள்ளது.
பி.பி.சி. நிகழ்ச்சியை தணிக்கை செய்தது மக்களின் தகவல் அறிந்து கொள்ளும் உரிமையைப் பறிப்பதாகும். பி.பி.சி. நிறுவனம் இணையத்தளம் மூலம் உலகெங்கும் வாழும் எந்தவொருவருக்கும் நேரடியாக செவிமடுக்கக் கூடிய இந்த பி.பி.சி. நிகழ்ச்சி ஒப்பந்தத்தின் படி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவைகளிலும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த சிலரால் நிகழ்ச்சியின் சில பகுதிகளை தணிக்கை செய்து ஒலிபரப்பாக்குவது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலுள்ள அரச “கோமாளிகளின்’ கோமாளித்தனமான செயற்பாடாகும்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூலம் பி.பி.சி. நிகழ்ச்சியை ஒலிபரப்ப இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும் பி.பி.சி. நிறுவனத்துக்குமிடையிலான ஒப்பந்தத்தின் படி அந்த நிகழ்ச்சி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூலம் உள்ளபடியே ஒலிபரப்பப்பட வேண்டும். பி.பி.சி. இலங்கை அரசின் வானொலிச் சேவையின் வளர்ச்சிக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களில் பங்களிப்புச் செய்வதென்பதே ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடாகும். அந்த நிகழ்ச்சியை தணிக்கை செய்து ஒலிபரப்புவது ஒப்பந்தத்தை மீறுவதாகும். மக்களது தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையைப் பறிக்கும் ஜனநாயக விரோத செயற்பாடாகும்.
பி.பி.சி. நிகழ்ச்சி குறித்து ஏதாவது பிரச்சினை அரசுக்கு இருந்தால் இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாட்டை மேற்கொள்ளாது பி.பி.சி.க்கும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் படி பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாட்டுக்கு வந்து இலங்கை மக்களுக்கு இலங்கை ஒலிபரப்புச் சேவையின் மூலம் முன்னரைப் போல் செவிமடுக்க வசதி செய்யும் படி இலங்கை மக்களுக்கு தகவல் அறிந்து கொள்வதற்கு அரசமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமையை வழங்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.