எந்த வொரு நாட்டைச் சேர்ந்த எந்தப் பிரமுகரும் இங்கு வரலாம் அதற்குத் தடையில்லை. அவர்களை அரசாங்கம் வரவேற்கத் தயாராக இருக்கிறது. எனினும் அவர்களின் வருகையின் நோக்கம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் உயர்ஸ்தானிகர் ஒருவர் இருக்கும் போது அதே நாட்டைச் சேர்ந்த விசேட பிரதிநிதி ஒருவரின் அவசியம் இல்லை. அவ்வாறு ஒருவரை நியமிப்பதாயின் அது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடி இணக்கம் காணப்பட வேண்டும்.
எவருக்கும் இங்கு வந்து சகல விடயங்களையும் பார்வையிடலாம். இங்கு எதுவும் மூடி மறைக்கப்படவில்லை . அனைத்தும் பகிரங்கமாகவே உள்ளன. எனினும் நாட்டின் அபிமானத்துக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பபு ஏற்படும் வகையிலான விசேட பிரதிநிதி நியமனங்களை அங்கீகரிக்க முடியாது.
யுத்தம் ஒன்றுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் வரவேற்கத் தக்க வகையில் உள்ளது. மேல் மகாணத்தின் பொருளாதார வளர்ச்சி 14 வீதமாக கடந்த வருடம் அதிகரித்துள்ளது. இது சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒத்ததாக உள்ளது. முழு நாட்டினதும் பொருளாதார வளர்ச்சி 6.4 வீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏற்றுமதித் துறையை முன்னேற்றம் அடையச் செய்ய அரசாங்கம் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. ஏற்றுமதியை ஊக்குவிப்பதும் தேசிய உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையிலேயே ஏற்றுமதி அபிவிருத்திக் கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் சிறந்த வெற்றியை அளித்து வருவதாக அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.