மாகாண சபைத் தேர்தல்களில் வெற்றியீட்டிக் கொண்ட இறுமாப்பில் ஜே.வி.பி.யை அழித்து விடலாமென அரசு எண்ணி விடக் கூடாது. ஐ.தே.க.வுக்கும் ஜே.வி.பி.க்கும் அரசியல் வேறுபாடிருந்தாலும் நாட்டு மக்களின் நலன்கருதிய செயற்பாடுகள், நிலைப்பாடுகள் நன்மையளிப்பனவாக இருந்தால் அதனை நாம் ஏற்றுக் கொள்வோமென ஜே.வி.பி. எம்.பி. ரணவீர பத்திரன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான இறக்குமதித் தீர்வை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான இறக்குமதித் தீர்வை குறித்த ஐ.தே.க.வின் நிலைப்பாடுகள் வரவேற்கக் கூடியவை, ஐ.தே.க.வுக்கும் ஜே.வி.பி.க்குமிடையே அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும், நாட்டு மக்களின் நலன் கருதிய செயற்பாடுகள் நிலைப்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்வோம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் படையினர் வெற்றி பெற்று வருவதைப் பயன்படுத்தி தேர்தல்களை நடத்தி அதில் அரசு வெற்றி கண்டுள்ளது. இந்த வெற்றியானது அரசுக்குக் கிடைத்த தேர்தல் வெற்றி என்பதை விட படையினரின் வெற்றிக்குக் கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும். இந்த வெற்றியை வைத்துக் கொண்டு ஜே.வி.பி.யை ஓரம்கட்டி விடலாம் அல்லது அழித்து விடலாம் என்று அரசு நினைத்து விடக் கூடாது.
தேர்தல்களில் வெற்றி தோல்வி என்பது பொதுவான விடயம். பிரதேச சபை மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை வரையறுத்து ஜே.வி.பி. பற்றிக் கணக்குப் போடுவது அரசுக்கு ஏற்புடையதல்ல அவ்வாறு செய்ய அரசுக்கு அருகதையும் இல்லை. யுத்தம், தேர்தல், மிஹின் எயார் போன்றவற்றுக்கு நிதி வீண்விரயம் செய்யப்படுவதால் எமது நாட்டின் நிதி நிலைவரம் மோசமடைந்து செல்கின்றது. நாட்டிலுள்ள சகல இனத்தவரும் ஒரே மக்கள் என்ற நிலை ஏற்படாதவரையில் எதனையும் சாதித்துவிட முடியாது