எதிர்க் கட்சித் தலைவர் கிளிநொச்சிக்கு பின் முல்லைத்தீவு மீட்கப்பட்டதன் பின்பே நன்றி தெரிவித்தது போன்று மேல் மாகாண சபைத் தேர்தலிலும் தோல்வி கண்டதன் பின்பே மக்கள் ஜனநாயக முறையில் வாக்களித்து எம்மை தோல்வியடையச் செய்துள்ளனரென கூறுவாரென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் மாகாண சபைத் தேர்தல் வெற்றி தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும், பேசுகையில்;
2005 ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் பிரிவினை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றைத் தோற்கடித்து நாட்டை ஒரு கொடியின் கீழ் கொண்டு வருவதற்கே வாக்களித்தனர். கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அரசு தேர்தலை நடத்தியது. வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் மக்கள் நம்பிக்கை வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். அந்த நம்பிக்கை வீண்போகாது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மீட்கப்பட்ட நிலையில் வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் அதிகமான விசுவாசத்தை வைத்து மக்கள் வாக்களித்து கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளான ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் யுத்தத்தை தடுப்பதற்கு வெளிநாட்டினருடனும் அதன் முகவர்களுடனும் சதிசெய்து ஊழல் மோசடி என பொய்களைக் கூறிய போதிலும் மக்கள் அதனை ஏற்காது கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர். தேர்தல் தொடர்பில் எஸ்.பி.திஸாநாயக்க தோல்வியை ஏற்பதாகக் கூறும் அதேநேரம் ஐ.தே.க. செயலாளர் முறையற்ற விதத்தில் தேர்தல் இடம்பெற்றதாகக் கூறுகின்றார். இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் என்ன சொல்வதென்று தெரியாதுள்ளார்.
கிளிநொச்சி மீட்கப்பட்ட போது எதனையும் தெரிவிக்காது தேசியக் கொடியினை கட்சி பேதமின்றி உயர்த்தி வெற்றியையும் கொண்டாடாது முல்லைத்தீவு மீட்கப்பட்டதன் பின்னரே நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் மேல்மாகாணத்தில் தோல்விகண்ட பின்னரே மக்கள் ஜனநாயக முறையில் வாக்களித்துள்ளனர் எனக் கூறுவார். எமது தேசிய சுதந்திர முன்னணி உருவாக்கப்பட்டு 9 மாதம் ஆகின்ற நிலையில் மத்திய மாகாணசபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிட்டு எமது உறுப்பினர் 5 ஆவது இடத்தினை அடைந்துள்ளார். இந்நிலையில், 45 வருட கட்சியான ஜே.வி.பி. ஒரு ஆசனத்தையும் பெறவில்லை. மேல்மாகாணசபைத் தேர்தலில் எமது கட்சி மேலும் முன்நோக்கிச் செல்லும் என்றார்