விஸ்வா

விஸ்வா

இறுதிப் போரில் தவறவிடப்பட்ட சிறுவர்களை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!

வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது மக்கள் இடம்பெயர்கையில் தவறவிடப்பட்ட சிறுவர்கள்  தற்போது வவுனியா சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இச்சிறுவர்களை அடையாளம் காண உதவமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தின் போது அதிகளவிலான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் பெற்றோரால் தவறவிடப்பட்ட சிறுவர்களும் சிகிச்சைக்காக வைத்தயசாலைகளில் சேர்க்கப்பட்டு, பெற்றோர் உறிவினர்களை இழந்த சிறுவர்களும் தற்போது வவுனியா சிறுவர் இல்லங்களில் சிறுவர் நன்னடத்தை பாராமரிப்பு திணக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இச்சிறுவர்களை அடையாளம் காண உதவுமாறு பெற்றோர்கள், உறவினர்கள் கேட்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான சிறுவர்கள் பலர் நீதிமன்றக் கட்டளையின் படி சிறுவர் இல்லங்களில் பாராமரிக்கப்பட்டு வரும் நிலையில், ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 26 பேரிடம் அவர்களது விவரங்கள் எதனையும் பெற முடியவில்லை. இதனால் அவர்களின் எதிர்காலம் குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்கள் உள்ளதாக சிறுவர் நன்னடத்தைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களை அடையாளம் கண்டு, பெற்றோர் தொடர்பான தகவல்களை வழங்கும் போது அச்சிறுவர்களின் எதிர்கால நடவடிக்கைகளை  முறையாக மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள சிறுவர் நன்னடத்தைப் பராமரிப்புத் திணைக்களம் இச்சிறுவர்களைத் தவறவிட்ட பெற்றோர்கள் அல்லது, பெற்றோரை இழந்த நிலையில் குழந்தைகளைத் தவறவிட்ட உறவினர்கள் வவுனியா மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த தாராகுளம் மக்களுக்கு 18 வருடங்களின் பின் குடியமர அனுமதி!

18 வருடங்களின் பின்னர் குடியமர அனுமதிக்கப்பட்ட தாராகுளம் மக்கள். தங்கள் பிரச்சனைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளனர். யாழ்.நகரத்தின் மத்தியில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த தாராகுளம் மக்கள் தற்போது அப்பகுதியில் குடியேறி வாழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் நேற்று (24-05-2010) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைச்சரின் யாழ பணிமனையில் நடைபெற்ற சந்திப்பில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். தொடர்ந்து சுமார் பதினெட்டு வருடங்கள் அப்பகுதியில் வசிக்காத நிலையில். வீட்டு உறுதிகளை இழந்த குடியேற்றத்திட்ட உரிமையாளர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கும், சேதமடைந்துள்ள தங்கள் வீடுகளை புனரமைப்பதற்கும் உரிய உதவிகளை செய்து தருமாறு அம்மக்கள்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டனர்.

இது தொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர் யாழ்.பிரதேசச் செயலர் மற்றும், வீடமைப்பு அதிகாரசபையின் யாழ்.பிராந்திய உதவிப் பொது முகாமையாளர் அகியோருடன் தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டறிந்து கொண்டதுடன், தாராகுளம் குடியேற்றத்திட்ட மக்களின் கோரிக்கைகள் விரைவில் தீர்த்து வைக்கப்படும எனவும் உறுதியளித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 ஆயிரம் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்படவுள்ளனர். – புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க

கைது செய்யப்பட்டுள்ள 11 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களில் சுமார் 8 ஆயிரம் பேர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், இவர்களுக்கு தொழில் பயிற்சிகள், தகவல் தொழிலநுட்பக் கல்வி, ஆங்கில மொழி அறிவு, ஆகியவற்றைப் போதித்து கொடுத்துள்ளதாகவும், யுத்தத்தின் இறுதி நாட்களில் இப் பதினோராயிரம் புலி உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மூவாயிரம் பேர் வரையிலானோர் தீவிரமான புலிகள் எனவும், எனையோர் விரைவில் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் 20 ‘சோடிகளுக்கு’ எதிர்வரும் யூன் மாதம் திருமணம் செய்து வைக்கப்படவுள்ளதாகவும் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அவர்களுடைய உறவுகள் யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே ஏற்பட்டிருந்ததாகவும், அவர்களுக்கிடையே வாய்மொழி உறுதிப்பாடு மட்டும் இருந்ததாகவும், சட்டபூர்வமாக திருமணம் செய்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் அவர்களில் அநேகமானோர் திருமணம் செய்து கொள்ள விரும்பவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக அமுல் நடத்துமாறு யாழ். அரச அதிபர் பொலிஸாரிடம் கேட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக அமுல் நடத்துவதுடன் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாக செயற்படுமாறு பொலிஸாரிடம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே.கணேஸ் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ். சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி டி சில்வா, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மதேவ ஆகியோரை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்து கலந்துரையாடிய போது யாழ்.அரச அதிபர் பொலிஸாருக்கு பின்வரும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் சகலரும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வகையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல்,தலைக் கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் செலுத்துவது, வயது குறைந்தவர்கள் வாகனம் செலுத்துவது போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போக்குவரத்து விதிகளை சகல சாரதிகளும் ஒரே மாதிரியாக பின்பற்றும் வகையில் பொலிஸார் நடந்து கொள்ள வேண்டும். யாழ்.நகர வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகளை யாழ்.மாநகரசபையுடன் கலந்துரையாடி அமுல் படுத்தப்படவேண்டும். யாழ மாவட்டத்திலுள்ள சட்டவிரோத மது பாவனையைத் தடுத்து, அதற்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு எட்டு மணி வரையாவது வீதிப் போக்கு வரத்துக் கடமைகளில் பொலிஸார் ஈடுபட வேண்டும். – இவ்வாறு சிரேஸ்ட பொலிஸ் மாஅதிபரிடம் யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, தற்போது யாழ்.மாவட்டத்தில் வீதிப்போக்குவரத்து நடவடிக்கைகளில் அதிகளவான பொலிஸார் ஈடுபட்டு வருவதைக் காண முடிகிறது.  கடந்த சில காலமாக யாழ்.குடாநாட்டில் நடைபெற்று வந்த கடத்தல் மற்றும், குற்றச் செயல்களும் அண்மைய சில தினங்களாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவுப் பிரதேசத்திலேயே அதிகளவு மிதிவெடிகள் புலிகளால் புதைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது!

தற்போது மீளக்குடியமர்த்தப் படுவதற்காக எஞ்சியுள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் முல்லைத்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகள் தம்மிடமிருந்த அனைத்து மிதி வெடிகளையும் இப்பகுதியிலேயெ புதைத்துள்ளனர் எனவும். இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தள்ளார். இதன் காரணமாகவே மக்களை அப்பகுதிகளில் மீள் குடியமர்த்துவது தாமதமாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு 1200 இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும்,  முழுமையாக மதிவெடிகள் அகற்றப்படாமல் மக்கள் அங்கு மீள்குடியமர்த்தப்பட மாட்டார்கள் எனவும் ஊடகவியலார்கள் எவருக்கும் அப்பகுதிகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாதெனவும் தெரிவித்தள்ள அவர்,  நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களை ஊடகவியலாளர்கள் சென்று பார்வையிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முகாம்களிலுள்ள மக்களை பார்க்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அனுமதி மறுப்பு! : விஸ்வா

Wanni_IDP_Campவவனியா ‘மெனிக் பாம்’ முகாமிலிருக்கும் மக்களை பார்வையிட தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். நேற்றுக் காலை (22-05-2010) கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அதன் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் செட்டிக்குளம் ‘மெனிக்  பாம்’ முகாமிற்குச் சென்ற போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை எனவும், சுமார் ஒரு மணி நேரம் முகாம் நுழைவாயிலில் காத்திருந்து விட்டு திரும்பிச்செல்ல நேரிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகதிகளுக்குச் சென்று அம்மக்களுடன் நேரடியாக உரையாடி பிரச்சினைகளை  அவதானித்தும் வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று வவுனியாவில்  இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களிலுள்ள மக்களைப் பார்வையிட அங்கு சென்றனர். ஆனால், முகாமின் உள்ளே செல்ல பாதுகாப்புத்தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டது.

தாங்கள் கொழும்பிலிருந்த புறப்படுவதற்கு முன்பாகவே வவுனியா முகாம்களைப் பார்வையிடுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதுடன், ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவிடம் தொலைபேசியில் உரையாடியதாகவும் குறிப்பிட்ட சம்பந்தன் தாங்கள் அங்கு செல்வதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என லலித் வீரதுங்க தங்களிடம் வாய்மொழியாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.  வவுனியா முகாமிலுள்ள அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதி மறுத்தயடுத்து சம்பந்தர் உடனே ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபொது, அரை மணிநேரத்தில் தாம் பதிலளிப்பதாகக் கூறினார். அரை மணி நேரத்திற்குப் பின்னர் அவருடன் தொடர்பு கொண்ட போது, தொலை பேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதை லலித் வீரதுங்க தவிர்த்ததாகவும் கூட்டமைப்பினர் தெரித்துள்ளனர்.

இதே வேளை, இது குறித்து ஊடகத்துறை அமைச்சர் கருத்தத் தெரிவிக்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நலன்புரி முகாம்களுக்குச் செல்லும் போது முன்னனுமதி பெற வேண்டும் எனவும், ஆனால், கூட்டமைப்பினர் அவ்வாறு எதனையும் பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். முகாமிற்குள் செல்வது குறித்து ஏற்கனவே ஒரு நடைமுறை உள்ளது. பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவித்து அது தொடர்பான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.மேயரும் அவரது செயலரும் நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.!

Jaffna_Mayor_Yogeswari_Patkunamநீதி மன்றத்தை அவமதித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக நேற்று (May 21 2010) விசாரணைகளுக் குட்படுத்தப்பட்ட யாழ். மேயர் திருமதி ப. யோகேஸ்வரி மற்றும் அவரது செயலாளர் திரு கு.பற்கணராசா இருவரும் நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவர் மீதான வழக்குகள் தனித்தனியே யாழ். நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன. நீதவானின் சமாதான அறையில் மேயருக்கெதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது.

மேயரின் செயலாளர் மீதான வழக்கு திறந்த நீதி மன்றத்தில் நடைபெற்றது.

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பாக வழக்கைத் தொடர்ந்து நடத்தி குற்றவாளியாகக் காணப்பட்டால் 7 வருடங்களுக்கு சிவில் உரிமையை இழக்க  வேண்டி வரும் என தெரிவித்த நீதவான்  மன்னிப்புக் கேட்டு வழக்கிலிருந்து விடுபடப்போகிறிர்களா அல்லது வழக்கினைத் தொடர்ந்து நடத்தப் போகிறீர்களா என கேட்ட போது வழக்கிலிருந்து விடுபடவிரும்பவதாகத்  தெரிவித்த மேயர் நீதிமன்றத்திடம் பகிரங்க மன்னிப்பைக் கோரினார். இதனையடுத்து அவரை வழக்கிலிருந்து விடுவிடுவிக்க நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

மேயருக்குத் தெரிவித்த அதே கருத்தை மேயரின் செயலாளருக்கும் நீதவான் தெரிவித்தார். அவரும் மன்னிப்புக் கோரியதன் பின்னர் எச்சரிக்கை செய்யப்பட்டு வழக்கிலிருந்து அவரும்  விடுவிக்கப்படுவதாக நிதவான் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து கண்காணிப்புப் பணிகளில் அதிகளவு பொலிஸார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து கண்காணிப்பு நடைமுறைகள் தற்போது கடுமையாக நடைமுறைப் படுத்தப்படுகின்றன. வழமையை விடவும் அதிகளவிலான பொலிஸார் கடமையிலீபடுத்தப்பட்டு.  யாழ்.நகரின் வீதிகள் அனைத்திலும் வீதி ஒழுங்கு நடவடிக்கைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்தப்பட்டு அதன் ஆவணங்கள் பரிசோனைக்குட்படுத்தப்படுவதோடு, போக்குவரத்து வீதி ஒழுங்ககளைக் கவனத்தில் கொள்ளாத சாரதிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டப்பணமும் அறவிடப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் தலைக் கவசத்திற்குள் கைத்தொலைபேசியை செருகிய படி உரையாடிக்கொண்டு செல்வது யாழ்ப்பாணத்தில் வழக்கமாகவுள்ளது. தற்பொது அவ்வாறு செல்பவர்களுக்கு தண்டம் அறிவிடப்படும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கடத்தல் சம்பவங்களையடுத்து வான் முதலான வாகனங்களும் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்படத்தக்கது.

கிளிநொச்சியில் கண்டாவளை, கரைச்சி பிரதேச மக்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்!

வவுனியா ‘மெனிக்பாம்’ நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 62.810 இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 7,350 பேர் எதிர்வரும் 11 நாட்களில் அவர்களின் சொந்த ஊர்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும், கண்டாவளை முதலான பிரதேச மக்களே இவ்வாறு மீள் குடியேற்றப்படவுள்ளனர். நேற்று 20ஆம் திகதி ஆரம்பமான இந்நடவடிக்கை 31ஆம் திகதி வரை நடைபெறும் என இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான  இணைப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

 ‘மெனிக்பாம்’ முகாமில் 11 வரையான நிலையங்களில் தங்கியுள்ள மக்களில் ஒரு தொகையினரே இவ்வாறு மீள்குடியேற்றப்படவுள்ளனர். இதனையடுத்து நலன்புரி நலையங்களின் எண்ணிக்கை ஆறாகக் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்முகாம்களில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கையும் 55,460 அக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மேயரையும் அவரது செயலாளரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்றத்தை அவமதித்ததான குற்றச்சாட்டு தொடர்பாக யாழ்ப்பாண மேயர் திருமதி ப.யோகேஸ்வரி, மேயரின் செயலாளரான திரு. கு.பற்குணரஜா ஆகியோரை இன்று (21.05.2010) நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ்.குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் உள்ளுர் பத்திரிகைகளில் விளம்பரங்களைப் பிரசுரித்தமை தொடர்பாக யாழ்.குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகள் குறித்த அறிக்கை யாழ். நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வறிக்கையை ஆராயந்த  நீதிமன்றம் யாழ். மேயரையும் அவரது செயலரையும் இன்று யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் குறித்த விளம்பரங்களை பிரசுரித்த, யாழ். குடாநாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளான ‘உதயன்’ ‘யாழ்.தினக்குரல்’ ‘வலம்புரி’ ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை பத்திரிகைகளில் வெளியான விளம்பரங்களின் மூலப்பிரதிகளுடன் நீதிமன்றில் பிரசன்னமாக இருக்கமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.