யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக அமுல் நடத்துவதுடன் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாக செயற்படுமாறு பொலிஸாரிடம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே.கணேஸ் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ். சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி டி சில்வா, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மதேவ ஆகியோரை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்து கலந்துரையாடிய போது யாழ்.அரச அதிபர் பொலிஸாருக்கு பின்வரும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் சகலரும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வகையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல்,தலைக் கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் செலுத்துவது, வயது குறைந்தவர்கள் வாகனம் செலுத்துவது போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போக்குவரத்து விதிகளை சகல சாரதிகளும் ஒரே மாதிரியாக பின்பற்றும் வகையில் பொலிஸார் நடந்து கொள்ள வேண்டும். யாழ்.நகர வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகளை யாழ்.மாநகரசபையுடன் கலந்துரையாடி அமுல் படுத்தப்படவேண்டும். யாழ மாவட்டத்திலுள்ள சட்டவிரோத மது பாவனையைத் தடுத்து, அதற்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு எட்டு மணி வரையாவது வீதிப் போக்கு வரத்துக் கடமைகளில் பொலிஸார் ஈடுபட வேண்டும். – இவ்வாறு சிரேஸ்ட பொலிஸ் மாஅதிபரிடம் யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை, தற்போது யாழ்.மாவட்டத்தில் வீதிப்போக்குவரத்து நடவடிக்கைகளில் அதிகளவான பொலிஸார் ஈடுபட்டு வருவதைக் காண முடிகிறது. கடந்த சில காலமாக யாழ்.குடாநாட்டில் நடைபெற்று வந்த கடத்தல் மற்றும், குற்றச் செயல்களும் அண்மைய சில தினங்களாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.