கைது செய்யப்பட்டுள்ள 11 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களில் சுமார் 8 ஆயிரம் பேர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், இவர்களுக்கு தொழில் பயிற்சிகள், தகவல் தொழிலநுட்பக் கல்வி, ஆங்கில மொழி அறிவு, ஆகியவற்றைப் போதித்து கொடுத்துள்ளதாகவும், யுத்தத்தின் இறுதி நாட்களில் இப் பதினோராயிரம் புலி உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மூவாயிரம் பேர் வரையிலானோர் தீவிரமான புலிகள் எனவும், எனையோர் விரைவில் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை, புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் 20 ‘சோடிகளுக்கு’ எதிர்வரும் யூன் மாதம் திருமணம் செய்து வைக்கப்படவுள்ளதாகவும் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அவர்களுடைய உறவுகள் யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே ஏற்பட்டிருந்ததாகவும், அவர்களுக்கிடையே வாய்மொழி உறுதிப்பாடு மட்டும் இருந்ததாகவும், சட்டபூர்வமாக திருமணம் செய்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் அவர்களில் அநேகமானோர் திருமணம் செய்து கொள்ள விரும்பவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.