விஸ்வா

விஸ்வா

யசூசி அகாசி கிளிநொச்சிக்கு விஜயம்!

acasi.jpgஇலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசிஅகாசி June 18 2010 கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார். அவரோடு அமைச்சர் பசில் ராஜபக்சவும் சென்றுள்ளார். இன்று இவர்களின் வருகையை முன்னிட்டு கிளிநொச்சிப் பகுதிகளில் கடும் பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆறு நாள் விஜயமாக திரு. யசூசி அகாசி இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

”போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நேக்கிலேயே வழக்குகள் பதிவு செய்யப்படாமல் உள்ளது” யாழ்ப்பாணத்தில் பிரதி அமைச்சர் முரளிதரன்

Muralitharan_Vயாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டொவும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று அவர்களைச் சந்தித்தனர். வடபகுதி மீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கென இவ்விரு அமைச்சர்களும் வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (June 17 2010) யாழ். செயலகத்தில் ஊடகவியலர்களிடம் கருத்தத் தெரிவித்த பிரதி அமைச்சர் முரளிதரன் தடுப்பு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நேக்கிலேயே அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாமலுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போத யாழ்ப்பாணம் அபிவிருத்தியடைந்திருப்பதகவும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், குடாநாட்டிலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் கட்டம் கட்டமாக அகற்றப்படும் எனவும், தடுப்பு முகாம்களிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகள் வழங்கி சுமார் 200 யுவதிகளுக்கு முதற்கட்டமாக கொழும்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்த அவர், மகிந்த அரசோ, அதன் அமைச்சர்களோ இனவாதமற்றவர்கள் எனவும், இந்த அரசின் காலத்திலேயே தமிழ் மக்களுக்கான சகல பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஒஸ்மானியா கல்லூரியில்  அம்மக்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, யாழ்ப்பாண முஸ்லிம் பகுதிகளில் வீடுகள் கட்டங்களின் இடிபாடுகளை தாம் நேரில் பார்வையிட்டுள்ளதாகவும் அம்மக்களின் புனர்வாழ்வு, அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்தாலோசித்து முஸ்லிம் நாடுகளின் உதவிகளைப் பெற முடியும் எனவும் தெரிவித்தார். வடபகுதி முஸ்லிம் மக்களுக்கான உதவிகள் யாவும் அபிவிருத்தியடைந்த முஸ்லிம் நாடுகளின் உதவிகளைப் பெற்று மேற்கொள்ளப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்துள்ளார்.

”வன்னி மக்களுக்கு வீடமைக்கும் உதவி நேரடியாக வழங்கப்படும்” ப சிதம்பரம் – ”அது இலங்கையின் இறமையைப் பாதிக்கும் ஹெகலிய ரம்புக்வல”

Chidambaram_PKeheliya_Rambukwellaபோரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நிதி நேரடியாக சம்பந்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்ற இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூற்றை இலங்கை அரசு மறுத்துள்ளது. இவ்வாறு நேரடியாக வழங்கப்படுவது நாட்டின் இறைமையை பாதிக்கும் செயல் என சிறிலங்காவின் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி மூன்று நாள் பயணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருந்த வேளையில், அங்கு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது வடக்கில் இடம்பெயர்ந்தோருக்கு 50 ஆயிரம் விடுகளை அமைத்துக் கொடுக்க ஆயிரம் கோடி ரூபாவை உதவியாக வழங்குவதற்கு இந்தியா இணங்கியிருந்தது. இதன்பின் இந்திய அமைச்சர் ப.சிதம்பரம் இவ்வுதவி நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிடப்படும் எனத் தெரிவித்திருந்தார். 0

எனினும், இதனை சிறிலங்கா அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல நேற்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் பேசும் போது மறுத்துள்ளார். இந்தியாவோ வேறெந்த நாடுகளோ அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு தனிப்பட்ட முறையில் நிதியுதவிகளை வழங்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கை கட்டியெழுப்ப இந்தியா உட்பட சர்வதேச நாடுகளிடம் உதவிகளைக் கோரியுள்ளோம். அவர்களது உதவிகள் அரசாங்கத்தினுடாகவே பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளை இடம்பெறும் போர் வெற்றிவிழாவில் ஒன்பதினாயிரம் படையினர் கலந்து கொள்வர்.

Victory_Celebrationவிடுதலைப் புலிகளுடனான போர் வெற்றியின் ஒரு வருட பூர்த்தி விழா நாளை வெள்ளிக்கிழமை (June 18 2010) கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக கொழும்பில் விசேட போக்கு வரத்து வசதிகள் எற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக நாளைக் காலை 5மணி முதல் விழா நிறைவடையும் வரை போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விழா நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பின் சில வீதிகள் பாதுகாப்பு நடைமுறைக்காக மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போர் வெற்றிவிழா நிகழ்வில் ஒன்பதினாயிரம் படையினர் பங்கேற்கவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.  போர் வெற்றியின் முதலாம் ஆண்டு வெற்றிவிழா கடந்த மேமாதம் அரசாங்கத்தால் கொண்டாடப்படவிருந்த நிலையில் தென்பகுதியில் பெய்த கடும் மழை, வெள்ள அழிவு காரணமாக அது பிற்போட்டப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் மீளகுடியமர்ந்துள்ள மக்களின் குறைகளை லியாம் பொஸ்கோ நேரில் கேட்டறிந்தர்.

lio.jpgமுல்லைத் தீவிற்கு பயணமான ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் லியாம் பொஸ்கோ நேற்று  (June 16 2010) பிற்பகல் இங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களைப் பார்வையிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை சந்தித்து மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வரும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

அம்மக்களுக்கான நிவாரண உதவிகள், அவர்களின் தொழில்களுக்கான உதவிகள் தொடர்பாக அவர் கேட்டறிந்துள்ளார். வற்றாப்பளை கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்துள்ளதோடு, ஐ.நாவின் உலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற நிவாரண விநியோகத்தையும் அவர் பார்வையிட்டுள்ளார். தொழில் வாய்ப்பு, அழிவடைந்த வீடுகளை மீளக்கட்டியமைப்பதற்கான உதவிகள் குறித்து மக்கள் லியாம் பொஸ்கோடம் கோரிக்கை விடுத்துள்ள்னர்.

பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த அவர் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்ப ஐ.நா உதவும் எனவும், அரசாங்கத்தினூடாக பாதிக்கபட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத்தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்பகுதிகளில் இடம்பெற்று வரும் கண்ணி வெடியகற்றும் பணிகளையும் லியாம் பொஸ்கோ பார்வையிட்டுள்ளார்.

விடத்தல் தீவு முஸ்லிம்கள் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அப்பகுதியில் குடியேறி வருகின்றனர்.

Rishad_Bathiyutheen20 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னார் விடத்தல் தீவு  முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். யுத்தம் முடிவடைந்ததையடுத்து சுமார் நூறு வரையிலான குடும்பங்கள் அப்பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இம்மக்கள் தங்கள் காணிகளையும் பள்ளிவாசல்களையும் துப்பரவாக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்வரும் 25ம் திகதி புனரமைக்க்கபட்டுள்ள ஜும்மாப் பள்ளிவாசலும் தொழுகையும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வன்னி நடாளுமன்ற உறுப்பினர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிச்சாட் பிதியுதீன் உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்து கொள்வா என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லை மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்காக குழுக்கள் நியமனம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்காக ஐந்து உறுப்பினர்கள் அடங்கியதாக ஆறு குழுக்கள் நியமிக்கபட்டுள்ளன. திட்டமிடல், வீடமைப்பு, மின்பிடி, உள்@ராட்சி, நீர் வழங்கல், மின்சாரம், உட்கட்டமைப்பு, வீதி அபிவிருத்தி, விவசாயம் முதலான துறைகளை உள்ளடக்கியதாக இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதே வேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் பெரும் போகத்தின் போது 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையும் 9620 ஏக்கர் நிலப்பரப்பில் உபஉணவுப் பயிர் செய்கையும் மேற்கொள்ளப்படவிருப்பதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

பாம்பு கடிக்குள்ளாகி படைவீரர் உயிரிழப்பு!

091009.jpgபளைப் பகுதியில் பாதுகாப்புக் கடமையிலீபட்டு வந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் பாம்புக் கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.  இவரது சடலம் நேற்றிரவு (June 15 2010) யாழ்ப்பாண மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு, மரண விசாரணையின் பின் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

பளை இராணுவ முகாமில் ஆறாவது படைப்பிரிவில் கடமையாற்றிய பதுளையைச் சேர்ந்த ரட்ணாயக்க முதியான்சிலாகே புஸ்பகுமார (வயது 35) என்ற இராணுவ வீரரே உயிரிழந்தவராவார்.  தற்போது மக்கள் மீள்குடியற்றப்பட்டு வரும் பளைப் பகுதியில் பல பொதுமக்களும் பாம்புக்கடிக்கு இலக்காகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இலங்கையில் வருடம் ஒன்றிற்கு 60 ஆயிரம் பேர் பாம்புக்கடிக்கு உள்ளாகின்றனர் என்றும் அவர்களில் 20 ஆயிரம் பேர் மட்டுமே வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனர் என்றும், வருடம் ஒன்றில் 100 பேர் வரையிலானோர் பாம்புக்கடியினால் உயிரிழக்கின்றனர் என்றும் பேராதெனிய மருத்துவபீடத்தின் பேராசியர் எஸ்.ஏ.எச். குலரத்ன தெரிவித்துள்ளார்.

வி~சப்பாம்புகள் கடிப்பதனால் எற்படும் மரணங்களைத் தவிர்க்கும் வகையில் தேசிய செயற்திட்டமொன்றைச் செயற்படுத்த சகாதார அமைச்சும், மட்டுப்படுத்தப்பட்ட சூழல் மன்றமும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் நாடு முழுவதும் விழிப்பணர்வு கருத்தரங்குகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. பாம்புக் கடிக்குள்ளானவர்களை உடனடியாக அரசாங்க மருத்துவமனைகளில் சேர்ப்பதன் மூலம் உயிரழப்புக்களைத் தவிர்க்க முடியும் என சுகாhதர அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related News:

வன்னியில் மீள்குடியேறும் மக்கள் பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

பாவம் பார்த்த பாலகியையும் விட்டு வைக்காத பாம்பு – ஆனமடுவயில் நேர்ந்த பரிதாபம்

பாம்புக்கடியால் இலங்கையில் 33 ஆயிரம் பேர் பாதிப்பு

கிளிநொச்சி நகரில் கட்டங்கள் அமைத்தல், வீதியோர வியாபாரம் போன்றவற்றிற்கு பிரதேச சபை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கிளிநொச்சியில் கடை, வீடு முதலான கட்டடங்களை அமைப்பதற்கு பிரதேச சபையின் முன்னனுமதி அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிளிநொச்சி ஏ-9 பாதையில் சிறு கடைகள் மற்றும் அனுமதியற்ற வீதியோர வியாபாரங்கள் மேற்கொள்வது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

தற்போது மீள்குடியேற்றம் நடைபெற்று வரும் நிலையில், கிளிநொச்சி நகரில் சனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால், வீதி விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. இதனைத்தடுக்கும் வகையிலேயே கரைச்சிப் பிரதேச சபை சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

பளைப் பிரதேச கிராமங்களில் அதிகளவில் வெடிப்பொருட்கள் காணப்படுவதால் மீள்குடியேற்றம் தாமதமாகின்றது.

LandMine_Signகிளி நொச்சி மாவட்டத்திலுள்ள பளைப்பிரதேசம் அதிகளவு மிதிவெடிகள், கண்ணிவெடிகள் காணப்படும் பிரதேசமாகவுள்ளது. இவ்வெடிப்பொருட்கள் முற்றாக இன்னும் அகற்றப்படாத காரணத்தினால் பளைப் பிரதேசத்தின் பல கிராமங்களில் மக்களை மீள்குடியேற்ற முடியாத நிலையும் எற்பட்டுள்ளது.

பளைப்பிரதேசத்திலுள்ள அரசர்கேணி, கச்சாய்வெளி, அல்லிப்பளை, கிளாலி, முகமாலை, வேம்பொடுகெணி, இத்தாவில், முதலான பகுதிகளிலேயே அதிகளவு வெடிபொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பகுதிகள் பல கடந்தகால போர் நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்திற்கும் சிறிலங்காப் படையினரின்  கட்டப்பாட்டுப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளாக காணப்பட்டமையும் இதற்குக் காரணமாகும். தற்போதும் இப்குதிகளில் படையினர் வெடிபொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.