விஸ்வா

விஸ்வா

தர்சிகாவின் இல்லத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்! தர்சிகா அடக்கம் செய்யப்பட்ட மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு!

Douglas Devanandaவேலணை மருத்தவமாது செல்வி ச.தர்சிகாவின் சடலத்தை எதிர்வரும் 28ம் திகதி தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனப்பிவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தர்சிகாவின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள கைதடி ஊற்றல் மயானத்திற்கு பொலிஸ் காவல் போடப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி இரவு தொடக்கம் இப்பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதே வேளை, நேற்றும் (21-07-2010) ஊர்காவற்றுறை நீதிமன்றில் தர்சிகாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, பலரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகலில் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தர்சிகாவின் இல்லத்திற்கு விஜயம் செய்து அவரது உறவினர்களிடம் துக்கம் விசாரித்துள்ளதோடு, தர்சிகாவின் மரணம் தொடர்பாக நீதியான விசாரணைகள் நடைபெற தான் ஜனாதிபதியிடம் பேச்சுவார்ததை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும்  உறுதியளித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கிளிநொச்சி பாடசாலைகளுக்கு தொலைபேசிகளை வழங்கியுள்ளார்.

Sritharan_SivagnamTNA_MPதமிழ்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கிளிநொச்சியிலுள்ள பாடசாலைகளுக்கு சி.டி.எம்.ஏ தொலைபேசிகளை வழங்கியுள்ளதுடன் போரிலே பாதிக்கப்பட்ட சிலருக்கு சைக்கிள்களையும், ஊனமுற்றவர்களுக்கு மூன்று சில்லு சைக்கிள்களையும் வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி கல்வி வலயத்தின் 50 பாடசாலைகளுக்கும், பளை. கண்டாவளை கோட்டக்கல்வி அலுவலகங்களுக்குமாக 52 சி.டி.எம்.ஏ தொலைபேசிகளை அவர் வழங்கியுள்ளார்.

 ரிஎன் பா உ சிவஞானம் சிறிதரன் இலங்கைப் பாராளுமன்றத்தில் வழங்கிய கன்னி உரை:

”நாம் இரு சுதந்திரமான தேசிய இனங்களாக ஒரு நாட்டின் மக்களாக ஒன்றினைந்து நம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்!” : சிவஞானம் சிறிதரன் பா உ (ரிஎன்ஏ)

திருடர்களிடமிருந்து தங்கள் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு படையினர் ஒலிபெருக்கியில் அறிவிப்பு!

Kilinochi Signகிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் திருடர்களின் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் தங்கள் உடமைகளைப் பாதுகாப்பாக வைக்குமாறு படையினர் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்து வருகின்றனர். வட்டக்கச்சி, இராமநாதபுரம் பகுதிகளில் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் இவ்வாறான அறிவித்தலை படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 அதிகமான வீடுகள் அழிவடைந்த நிலையிலும், சில வீடுகள் கூரைகள், கதவுகள், யன்னல்களற்ற நிலையில் வெறும் கட்டங்களாக மட்டும் காணப்படும் நிலையிலும், மக்கள் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத நிலையிலேயே திருடர்கள் தங்களது கைவரிசைகளை காட்டி வருகின்றனர் இந்நிலையில் மிள்குடியேற்றப்பட்ட மக்கள் இரவு நேரங்களில் திருடர்கள் பயம் காரணமாக கண்விழத்திருந்து தங்கள் நித்திரையை இழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலிருந்து யாழ். வந்து கொண்டிருந்த பஸ் மீது கல்வீச்சு!

நேற்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. அதிகாலை மூன்று மணியளவில் அநுராதபுரம் மகாஇலுப்பளம என்ற இடத்திலேயே இக்கல்வீச்சு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், குறித்த பஸ்ஸின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

போர் நடைபெற்ற காலங்களில் யாழ்ப்பாணத்தை நோக்கி வரும் பஸ்களுக்கு சிங்களப்பகுதிகளில் வைத்து சிலரால் கல்வீச்சு நடத்தப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அப்போது அவ்வாறு வரும் பஸ்களில் கூடுதலாக தமிழர்கள் மட்டுமே பயணித்தனர்.  போர் முடிவிற்கு வந்த பின் தற்போது தென்பகுதிகளிலிருந்து அதிகளவிலான சிங்களப் பயணிகள் யாழ்ப்பாணம் நோக்கி வருகை தருகின்றனர். இந்நிலையில், இக்கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் போராளிகளை கண்ணி வெடியகற்றும் பணிகளில் ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்.

LandMine_Signகண்ணி வெடியகற்றும் பணிகளில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை ஈடுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 30 பெண் போராளிகளை ஈடுபடுத்தவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு திர்மானித்துள்ளது. ஆறு தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் ஊடாக விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் அதிகளவிலான இராணுவத்தினர் தற்போது கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதே வேளை, வன்னியில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பல பெண்கள் தற்போது கண்ணிவெடி மற்றும் வெடிபொருட்கள் அகற்றுவது குறித்து பயிற்சியளிக்கப்பட்டு தொண்டு நிறுவனங்க@டாக பணிபுரிந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வன்னியில் பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்களின் உதிரிப்பாகங்களை வைத்திருந்த ஐவர் கைது!

வன்னியில் இறுதி யுத்தத்தின்போது பொது மக்களால் கைவிடப்பட்ட வாகனங்களின் உதிரிப்பாகங்களை கழற்றி வைத்திருந்த ஐந்து பேர் கிளிநொச்சியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வன்னியில் கைவிடப்பட்ட கனரக வாகனங்கள், உழவு இயந்திரங்கள், ஆகியவற்றின் உதிரிப்பாகங்களை வைத்திருந்த மூவரும், அவர்களிடமிருந்து அப்பொருட்களை கொள்வனவு செய்த இருவருமாக ஐவர் பொலிஸாரிடம் பிடிபட்டனர். இவர்கள் நேற்று (20-07-2010) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். எதிர்வரும் 3ம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இறுதிப்போரின் போது பொதுமக்களால் கைவிடப்பட்ட பல வாகனங்கள் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களிடம் அவற்றைக் கையளிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் அதிகளவிலானவை மோட்டார் சைக்கிள்களாகும் ஏனைய வாகனங்கள் சிறிதளவிலேயே கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் உதிரிப்பாகங்கள் பல கழற்றப்பட்ட நிலையிலேயே பெரும்பாலான வாகனங்கள் காணப்படுகின்றன என்பது  குறிப்பிடத்தக்கது.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட தாய்க்கும் அவரது இரு மகன்களுக்கும் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது!

கொலை குற்றச்சாட்டு காரணமாக ஒரு தாய் அவரது மகன்கள் இருவர் ஆகியோருக்கு மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2004ம் ஆண்டு ஒலுவில் பிரதேசத்தில் வைத்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்தததான குற்றச்சாட்டில் எஸ்.உம்மா(வயது45) என்ற பெண்ணுக்கும், அவரது மகன்களான எம்.பைஸால் (வயது 26) ஐ.றிசான் வயது (24) ஆகிய மூவருக்குமே நேற்று (21-07-2010) கல்முனை நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீhப்பளித்தது.

தர்சிகாவின் சடலத்தை தோண்டியெடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவமாது ச.தர்சிகாவின் சடலத்தை தோண்டியெடுத்து வைத்தியப் பரிசோதனை செய்ய ஊர்காவற்றுறை நீதவான் ஆர். வசந்தசேனன் நேற்று (July 20 2010) உத்தரவிட்டுள்ளார். தர்சிகாவின் தாயார் கொடுத்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதவான் தர்சிகாவின் சடலத்தை எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் தோண்டியெடுத்து கொழும்பிற்கு அனுப்பி சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கு நேற்று முன்தினம் (July 19 2010) நடைபெற்ற போது தர்சிகாவின் தாயார் தனது மகள் தற்கொலை செய்யவில்லை அவரது சடலம் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என நீதவானிடம் மனுவொன்றை கைளித்திருந்தார். அதனைப் பரிசீலித்த நீதவான் சடலத்தை பொலிசார் முன்னிலையில் தோண்டியெடுத்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார். இவ்வழக்கு விசாரண மீண்டும் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ளது.

“எனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரின் சடலத்தை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும்” தர்சிகாவின் தாயார் நீதி மன்றில் மனு!

வேலணை வைத்தியசாலை மருத்துவமாது ச.தர்சிகாவின் மரணத்தில் சந்தேகமிருப்பதாகவும், அவரின் சடலத்தைத் தோண்டியெடுத்து மீண்டும் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் எனவும் அவரது தாயார் July 21 2010 நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் நீதிமன்றில் இது குறித்த கோரிக்கை மனுவொன்றை கையளித்துள்ளார். இம்மரணம் தொடர்பான விசாரணைக்கு எவரும் செல்லக்கூடாது என்று தம்மை சிலர் அச்சுறுத்தியதாகவும், அவர் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனது மகளான தர்சிகா தற்கொலை செய்யவில்லை அவர் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தர்சிகாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று ஊர்காவற்றுறை நீதவான் ஆர்.வசந்தசேனன் முன்னிலையில் விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் பிரியந்த செனவிரட்ணவும் மன்றில் முற்படுத்தப்பட்டிருந்தார்.

கள் அருந்தியவர்களில் ஒருவர் மரணம். அறுவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சாவகச்சேரியில் சம்பவம்!

Thavaranaiயாழ். தென்மராட்சிப் பகுதியிலுள்ள தவறணை ஒன்றில் கள் அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஆறு பேர் மயக்கமுற்ற நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மராட்சியிலுள்ள சாவகச்சேரிப் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணை ஒன்றில் July 21 2010 கள்ளருந்திய ஒருவர் மயக்கமுற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவர் சாவகச்சேரியைச் சேர்ந்த சின்னையா செல்வராசா (வயது 50) என்பவராவார். ஏனைய ஆறு பேர் மயக்கமுற்ற நிலையில் கொண்டுவரப்பட்டு யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள் நஞ்சாகியிருக்கலாம் அல்லது கள் வைத்திருக்கும் கொள்கலனுக்குள் ஏதும் கலந்திருக்கலாம்  என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

 யாழ். குடாநாட்டிற்கு வரும் பெரும்பான்மை இனத்தவர்களும் யாழப்பாணத்து கள் மீது அலாதிப் பிரியம் உள்ளவர்களாக காணப்படுகின்ற நிலையில், இவ்வாறான அசம்பாவிதங்களைத் தவிர்க்க கள்ளுத் தவறணைகளில் தினசரி பரிசோதனைகளை நடத்தவது முக்கியமானது என சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.