விஸ்வா

விஸ்வா

யாழ் – கொழும்பு தனியார் பஸ்கள் பயணிகளிடம் பல்வேறு கட்டணங்களை அறவிடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

bus.jpgயுத்தம் முடிவடைந்து ஏ-9 பாதை திறந்து விடப்பட்டதும் கொழும்பு – யாழப்பாண தனியார் போக்குவரத்து பஸ்களின் தொகை அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போக்குவரத்து பஸ்கள் பயணிகளிடம் பல்வேறு விதமான கட்டணங்களை அறவிட்டு வருகின்றன. சொகுசு பஸ்கள். அரை சொகுசு பஸ்கள் என போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் யாழ்ப்பாத்திலிருந்து கொழும்பிற்கு 600ரூபா தொடக்கம் 1500 ரூபா வரை கட்டணமாக அறவிடுகின்றன.  இது தொடர்பாக தற்போது பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Jaffna_to_Colombo_Bus_Servicesஇது பற்றி பஸ் உரிமையாளாகள் சிலர் கருத்துத் தெரிவிக்கையில்  பயணச்சீட்டை விநியோகம் செய்யும் முகவர்களே இவ்வாறு அதிக கட்டணங்களை அறவிடுவதாக கூறுகின்றனர். இதே வேளை, பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிடும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணைக்குழு எச்சரிக்கை செய்துள்ளது.

நாகர்கோவில் விநாயகர் ஆலய விக்கிரகங்கள் பாதுகாப்பு கருதி நீதிமன்றில் ஒப்படைப்பு.

வடமராட்சிக் கிழக்கிலுள்ள விநாயகர் ஆலயத்தின் பெறுமதி வாய்ந்த விக்கிரகங்கள் சில பருத்தித்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட விநாயகர் ஆலயம் ஒன்றிலிருந்தே பழமை வாய்ந்ததும். பெறுமதி வாய்ந்ததுமான இரு விநாயகர் விக்கிரகங்கள் மற்றும், வேல் போன்றவை அவற்றின் பாதுகாப்பு கருதி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வடமராட்சி கிழக்குப் பகுதிகள்  யுத்தத்தினால் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றன. அப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும் வன்னியிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். வன்னியில் இடம்பெயர்ந்திருந்தவர்கள் தற்போது வவுனியா முகாம்களிலும் வேறு பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் மீள்குடியேற்றம் இன்னமும் நடைபெறவில்லை. எனவே, குறிப்பிட்ட ஆலயத்தின் விக்கிரகங்கள் பாதுகாப்பு கருதி பருத்தித்துறை நீதிமன்றத்தில் வைக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் குறித்த ஆலயத்திடம் ஒப்படைக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

யாழ். மருத்துவமனையில் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு!

Jaffna_Hospitalயாழ் போதனா வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக இத்தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை நோயாளிகள் தெரிவிக்கின்றனர். இம்மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

முன்றாம் ஆண்டு காலாண்டுக்கான மருந்துப் பொருட்கள் இது வரை வராத காரணத்தினாலேயே இத்தட்டுப்பாடு நிலவுவதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை, யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கான இரத்தப் பரிசோதனைகள் உட்பட்ட  மருத்துவ பரிசோதனைகள் அங்கு செய்யப்படுவதில்லை எனவும் தனியார் மருத்துவ ஆய்வு கூடங்களிலேயே இப்பரிசோதனைகளை மேற்கொள்ள  நோயாளிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தின் வீடமைப்புப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

வன்னியில், கிளிநொச்சி மாவட்டத்திலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி. துணுக்காய் பிரதேசங்களில் மீள் குடியேற்றப்பட்ட குறிப்பிட்ட சில மக்களுக்கு வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முற்றாக வீடுகளை இழந்தோருக்கான கொடுப்பனவான மூன்னறரை இலட்சம் ரூபா வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இத்திட்டத்தின் அடிப்படையில் சில வீடுகள் அமைக்கப்படும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் மீளக்குடியமர்ந்த குடும்பங்களில் சிலவற்றிற்கான வீடமைப்பு கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வழங்கபட்டு  வருகின்றமையும் குறிப்படத்தக்கதாகும்.

ஓகஸ்ட் முதல் வெளிமாவட்டங்களில் வசித்தவர்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில வவனியா நிவாரண முகாம்களிலுள்ள மக்களில் ஒரு தொகுதியினர் எதிர்வரும் 26ம் 27ம் திகதிகளில் மீள்குடியேற்றப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்களிலிருந்து வெளியேறி வன்னிக்கு வெளியே வேறு மாவட்டங்களில் உறவினர் நண்பர்கள் வீடுகிளில் தங்கியிருக்கும் மக்களுக்கான மீள் குடியேற்ற நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட மாதம் 4ம் திகதியிலிருந்து அம்மாதம் மழுவதும் மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி மாவட்ட செயலக வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாக  இம்மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக பொலிஸாரின் செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் சட்ட விரோதமான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்கள், கள்ளச்சாராய விற்பனை, கசிப்பு கஞ்சா விற்பனை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் என்கிற வகையில் 29 பேரும், மது போதையில் வாகனம் செலுத்திய 15 பேரும், வீதி ஒழுங்கு மீறப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களான 62 பேரும் மற்றும் 7பேருமாக மொத்தம் 113 பேர் பொலிஸாரிடம் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்.நகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் விசேட பொலிஸ் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்விசேட நடவடிக்கைகளில் ஒன்பது பொலிஸ் நிலையங்களிலிருந்து 200 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ் சட்டத்தரணியின் வாதத்திறமையாலேயே தர்சிகா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். – தவிசகூ குற்றச்சாட்டு

வேலணை வைத்தியசாலை மருத்துவமாது மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியருக்கு தமிழ் சட்டத்தரணி ஒருவரே அதி தீவிரமாக வாதாடி பிணையில் செல்ல வழிசமைத்துள்ளமை வேதனைக்குரியது என தமிழர்விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பொன்றை தமிழர்விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் இரா. சங்கையா வெளியிட்டுள்ளார்.

மருத்துவமாது ச.தர்சிகாவின் மரணத்தின் சோகமும். அது குறித்த செய்திகளின் சூடும் தணியுமுன் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியருக்கு பிணை வழங்க வேண்டுமென யாழ்.மேல் நீதிமன்றத்தில் அதி தீவிரமாக வாதாடியுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியாகாத நிலையில் தமிழ் சட்டத்தரணியான இவர் கொலை சந்தேக நபரான வைத்தியருக்காக வாதாடி பிணை பெற்றுக் கொடுத்துள்ளார் என்றால் அவரின் சட்டவாதத்திறமையை எண்ணி பெருமைப்படுவதா வேதனைப்படுவதா அல்லது வெற்கித் தலை குனிவதா என்று தெரியவில்லை. எத்தனையோ அப்பாவித் தமிழர்கள் விசாரணைகள் எதுமின்றி சிறைகளில் வருடக்கணக்கில் வாடும்போது அவர்களுக்காக இந்த சட்டத்தரணி ஏன் தனது வாதத்திறமையை பயன்படுத்தக் கூடாது?

தர்சிகாவின் மரணம் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என தொலைபேசி மூலமும், நேரடியாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக  தர்சிகாவின் தாயார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே சம்பந்தப்பட்ட வைத்தியர் தமிழ் சட்டத்தரணியின் வாதத்திறமையால் பிணையில் சென்றுள்ளார்.

இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லை நீதிமன்றம் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது

முல்லைத்தீவு நீதிமன்றம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. 23 வருடங்களின் பின்னர் முலலைத்தீவு நீதிமன்றம் இயங்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முல்லை அரச செயலக கட்டடத்தொகுதியில் தற்காலிகமாக நீதிமன்றம் இயங்கத் தொடங்கியுள்ளது.  வாரந்தொறும் புதன் கிழமைகளில் இந்நீதிமன்றம் முல்லைத்திவில் நடைபெறும் எனவும், ஏனைய தினங்களில் வவனியாவில் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இந்நீதிமன்றம் மழுமையாக முல்லைத்தீவிலெயே செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

கிளிநொச்சி நகருக்கே இன்னமும் முழுமையாக மின்சாரம் வழங்கப்படவில்லை!

ceb.jpgமுதற் கட்டமாக கிளிநொச்சி நகரத்திற்கும் நகரத்தை அண்டியுள்ள சில கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதும், இன்னமும் குறிப்பிட்டவாறு மின்சாரம் வழங்கப்படவில்லை என்பதை கிளிநொச்சிப் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்த்த போது புரிந்து கொள்ளக்கூடிதாகவுள்ளது. கிளிநொச்சி நகரில் ஏ-9 பாதைக்கு அண்மையாகவுள்ள வணிக நிறுவனங்கள் சிலவற்றிக்கே தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளுக்குள் மின்சார இணைப்புகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றதே தவிர இன்னமும் மின்சாரம் வழங்கப்படவில்லை.  ஒரு பிரதேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான தேவை மின்சாரம் என்பது தெரிந்த விடயமே. ஆனால், அதற்கான  நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது மிக முக்கியமானது என்பதும்   பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“போரினால் கொல்லப்பட்டவர்கள், ஊனமுற்றவர்கள், சொத்துக்களை இழந்தோர் ஆகியோருக்கு இழப்பீடுகள் வழங்கப்படும்” அமைச்சர் டியூ குணசேகர

due.jpgபோர் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட பொதுமக்கள், ஊனமுற்றோர். சொத்துக்களை இழந்தோர் ஆகியோருக்கான இழப்பீடுகள் வழங்கப்படும் என புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். போரிலே கொல்லப்பட்டவர்கள், ஊனமுற்றோர், சொத்துக்களை இழந்தோர் அகியோருக்கு இழப்பீடுகள் வழங்க 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என நேற்று  அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், ஆட்கள், ஆதனங்கள் மற்றும், கைத்தொழில்களை புனரமைப்பு செய்யும் அதிகாரசபையிடமும் நிதி உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கிளிநொச்சி. வவுனியா அகிய இடங்களில் நடைபெற்ற நடமாடும் சேவைகளில் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவை கிராமசேவகர். பிரதேசச் செயலாளர்கள் உறுதியளித்ததன் பின்னர் இழப்பீடுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பட்டார்.

அமைச்சர் தொடர்ந்து கூறுகையில்- “எமது நடமாடும் சேவையில் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் உதவி கோரி வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இளம் விதவைகள். இளம் பெண்கள் விடுதலைப்புலிகளால் பலவந்தமாக போராட்டத்தில் இணைத்து விடுவார்கள் என்கிற அச்சத்தில் பெற்றோரினால் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள்.  இவர்களில் 21-22 வயது இளம் விதவைகள், இரண்டு மூன்று குழந்தைகளுடன்  அநாதரவாக உள்ளனர்.  இது மாபெரும் சமூகப்பிரச்சினை ஆகும். புலிகளின் தலைவர்களான பாலகுமார், யோகி ஆகியோரது மனைவிமாரும், எம்மிடம் உதவி கோரி வந்தனர். இந்த விதவைகள் அனைவரும் சமூகத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கி வருமானம் ஈட்டிக்கொள்ள வழி செய்து கொடுக்கப்படும்” எனக் கூறினார்.

அமைச்சர் டியூ குணசேகர  அவரது நடமாடும் சேவையூடாக போரின் பின்னான பொதுமக்களின் நிலைமைகளை யதார்த்தமாக விளங்கிக் கொண்டுள்ளார் என்பது அவரது இக்கருத்துக்களிலிருந்து தெரிய வருகின்றது. ஆனாலும், ஏனைய அமைச்சர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும், இழப்பீடுகள் வழங்கப்படுவது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இவை தற்போது வன்னியில் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.