விஸ்வா

விஸ்வா

”போரின்போது பொதுமக்கள் சந்தித்த பெரும் அவலங்களுக்கு போரில் ஈடுபட்ட இருதரப்பும் காரணமாக இருந்தன” ஆணைக்குழுவின் முன் சாட்சியம்!

Wanni_War_Mullivaykkal”போரின்போது பொதுமக்கள் சந்தித்த பெரும் அவலங்களுக்கு போரில் ஈடுபட்ட இருதரப்பும் காரணமாக இருந்தன. இறுதிக்கட்டப் போரில் படையினர் தடைசெய்யப்பட்ட குண்டுகளைப் பயன்படுத்தினர் நாளொன்றுக்கு 400 பேர் வரையில் பலியாகினர்”’ நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம்!

போரின் இறுதிக் கட்டங்களில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கிளிநொச்சியில் தற்போது நடைபெற்றுவரும் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணக்குழுவின் முன்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துக்களையும் சாட்சியங்களையும்  தெரிவித்து வருகின்றனர். இவ்வகையில் படையினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் மற்றும் இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியமை குறித்தும் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூனகரி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற விசாரணைகளின் போது  கமநல உத்தியோகத்தரான ந. சுந்தரமூர்த்தி என்பவர் தனது சாட்சியத்தில் இவ்விடயங்கள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் படைத்தரப்பு புதுமாத்தளன் பகுதியில் கொத்துக்குண்டுகளையும், பொஸ்பரஸ் இரசாயனக் குண்டுகளையும் பயன்படுத்தியதெனவும் இதனால் பொதுமக்ளுக்கு பெரும் உயிரிழப்புகள் எற்பட்டதெனவும், நாளொன்றுக்கு 400 பேர் வரையில் பலியாகியதுடன் 1000பேர் வரை காயமுற்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலிகளுக்கெதிராக இக்குண்டுகளை படையினர் பயன்படுத்தியிருந்தாலும் அவை அப்பாவி பொதுமக்கள் மீதே வீழ்ந்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போர் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதியிலிருந்து பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் மக்களை தடுப்பதற்காக புலிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து மக்களை அச்சுறுத்தியுறுத்தியதாகவும், இவ்வாறு செல்ல முயலும் பொதுமக்களை பச்சைமட்டையால் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

போரின்போது பொதுமக்கள் சந்தித்த பெரும் அவலங்களுக்கு போரில் ஈடுபட்ட இருதரப்பும் காரணமாக இருந்தன எனவும் அவர் தெரிவித்தார்.

._._._._._.

மீள்பிரசுரம்: கிளிநொச்சி மக்கள் சாட்சியமளித்தனர் – பிபிசி தமிழோசை (செப்ரம்பர் 19 2010)

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம்-கண்டாவளை பிரதேச செயலகத்தில் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இரண்டாவது நாளாக விசாரணைகளை நடத்தியது.
ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பெரும் எண்ணிக்கையிலான பெண்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் காணாமல் போயுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும் கோரினர்.

இங்கு சாட்சியமளித்த 58 வயதான கந்தசாமி பொன்னம்மா என்ற தாய், இறுதிப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினராகிய தனது மருமகனும் தனது மகளும் அவர்களது இரண்டு குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக பிபிசியிடம் கூறினார்.

அத்துடன் மல்லாவி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிய தனது மகன் ஒருவர், 2006 ஆம் ஆண்டில் வவுனியாவுக்குச் சென்றிருந்த போது காணாமல் போனதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கண்டாவளையைச் சேர்ந்த காசிப்பிள்ளை பாலேஸ்வரன் என்பவர் ஆணைக்குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பார்வை இழந்துள்ள இவர், போரினால் பாதிக்கப்பட்டு, உடல் வலுவிழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, திங்கட்கிழமை முல்லைத்தீவு நகருக்குச் சென்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வீடமைப்புப்பணிகள் தாமதமாகும் என்ற அரசஅதிபரின் செய்தியினால் மீள்குடியமர்ந்த மக்கள் கவலை!

Damaged_Houseகிளி நொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும்,  சேதமுற்ற வீடுகளை திருத்திக் கொடுப்பதற்கும் தாமதமாகும் எனவும் இது இது அடுத்த வருடமே ஆரம்பிக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதையடுத்து கூடாரங்களிலும் கூரைகளற்ற உடைந்த வீடுகளிலும் தங்கியுள்ள மக்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக இவ்வேலைத் திட்டங்கள் நடைபெறும் என இம்மக்கள் எதிர்பார்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Damaged_Houseஇது தொடர்பாக பொதுமக்கள் சிலர் தேசம்நெற் க்கு கருத்துத் தெரிவிக்கையில் கிளிநொச்சியில் இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்த மக்களின் காணிகள் பலவற்றிற்கு உறுதி, அல்லது அனுமதிப் பத்திரங்கள் இல்லாமை  வீடமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்படாமல் லுள்ளமைக்காண காரணமாக கூறப்படுககின்றது. ஆனால், காணி அனுமதிப் பதிரங்கள் உள்ளவர்களின் காணிகளில் வீடுகளை அமைத்துக் கொடுப்பதிலும் உடைந்த, சேதமுற்ற  வீடுகளை திருத்திக் கொடுப்பதிலும் கூட தாமதம் நிலவுகின்றமையை அவர்கள் சுட்டடிக்காட்டுகின்றனர்.

புதிதாக விடுகளை அமைத்துக் கொடுக்கும் நிறுவனங்கள் கட்டம் கட்டமாகவே அதற்கான பணத்தை வழங்கி வருகின்றன. மக்கள் தங்கள் வீடுகளை அமைக்கும் பணிகளில் வேகமாக செயற்படுகின்ற போதும் குறித்த நிறுவனங்கள் மிக மந்த கதியில் செயற்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் சேதமுற்ற வீடுகளை திருத்துவதற்காகன பதிவுகள் மேற்கொல்லப்பட்டுள்ள போதும் அதற்கான கொடுப்பனவுக்ள வழங்குவதிலும் தாமதங்கள் காட்டப்படுகின்றன.

அத்துடன் குறைந்த தொகைப் பணத்தில் ஓட்டுக்கூரைகள் அமைத்து வீடுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறித்த நிறுவனங்களால் உத்தரவிடப்படுகின்றன. உடைந்த, கூரைகளற்ற வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் நகைகளை விற்றோ, அல்லது கடன் வாங்கியோ தங்கள் வீடுகளைத் தாங்களே திருத்தியமைத்தால் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படமாட்டாது எனவும், அவர்கள் வசதியுள்ளவர்களாக கணிக்கப்படுவார்கள் எனவும்  உதவி வழங்கும் நிறுவனங்ளைச் சேர்ந்தவர்கள் மக்களை அச்சறுத்தியும் வருகின்றனர். இதனால், மக்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் தொடர்ந்தும் அவல வாழ்விற்குள்ளேயே தள்ளப்படும் நிலை எற்பட்டுள்ளது எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

”கிளிநொச்சியில் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு அடுத்த வருடமே வீடுகள் கட்டுவது சாத்தியமாகும்” அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்

Rubavathy_Ketheeswaran_GAகிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் சாத்தியம் உடனடியாக இல்லை எனவும், அது ஜனவரி மாதத்தின் பின்னரே சாத்தியப்படும் எனவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரவித்துள்ளார். கிளிநொச்சி அரச செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது  தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அரச அதிபர் இவ்வாறு கூறினார். எதிர்வரும் மழைக்காலத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்க அதிபரிடம் விளக்கினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் இல்லை. பலர் வேறு நபர்களின் காணிகளில் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. குறித்த காலத்தில் காணிகளின் உரிமையாளர்கள் தங்கள் காணிகளை பொறுப்பேற்காமல் விட்டால் அக்காணிகளில் வசிக்கும் மக்களுக்கு அக்காணிகளிலேயே வீடுகளை அமைத்துக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்களுக்கு டிசெம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

கத்திக்குத்தில் கொல்லப்பட்ட பெண்ணின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

கத்திக்குத்து சம்பவத்தில் கொல்லப்பட்ட இளம் பெண்ணொருவரின் கண்கள் அவரது தாயாரினால் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி சிறிபாகம என்ற இடத்தைச் சேர்ந்த சமீலா என்ற பெண் அவரது காதலனால் குறித்த பெண்ணின் தாயாருக்கு முன்பாக வைத்து கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார். இதன் பின்னர் குறித்த காதலன் பொலிஸில் சரணடைந்தார். இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயாரான மல்காந்தி குணவர்தன தனது மகளின் இரு கண்களையும் தானமாக வழங்கியுள்ளார்.

இலங்கை கண்தானச் சங்கத்தின் சார்பில் இரத்தினபுரி மாவட்ட வைத்திய நிபுணர்களால் கண்கள் அகற்றப்பட்டு பாதுக்கப்பட்டுள்ளன.

கால்களை இழந்த 20 பேருக்கு செயற்கைக் கால்களை மக்கள் வங்கியின் இந்து மாமன்றம் வழங்குகின்றது.

போரினாலும் விபத்துக்களாலும் தமது கால்களை இழந்த 20 பேருக்கு மக்கள் வங்கியின் இந்து மாமன்றம் செயற்கைக் கால்களை வழங்குகின்றது. இன்று திங்கள் கிழமை பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள ஜெயப்பூர் புனர்வாழ்வு நிலையத்தில இந்நிகழ்வு இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வில் மக்கள் வங்கயின் தலைமையக இந்துமாமன்றத்தின் உபதலைவர், செயலாளர், யாழ்.மாவட்ட மக்கள் வங்கி உத்தியோகத்தர்கள் ஆகியோர் மற்றும், ஜெய்ப்பூர் நிறுவனப் பணியாளர்களும்  கலந்து கொண்டு கால்களை இழந்த 20 பேருக்கு செயற்கை கால்களை வழங்கி வைக்கவுள்ளனர்.

புதுவித காய்ச்சலினால் கொடிகாமத்தில் பெண் மரணம்!

கொடிகாமத்தில் இனம் காணப்படாத புதுவித காய்ச்சலினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று 17ம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மரணமாகியுள்ளார்.

கொடிகாமம் கச்சாய் வீதியில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் தாயான இப்பெண் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் ஒருவிதமான மூளைக்காய்ச்சலாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவரின் கொடிகாமம் வீட்டிற்கு விரைந்த சுகாதார மருத்துவக் குழுவினர் தடுப்பு மருந்துகளை அப்பகுதிகளில் விசிறினர்.

இதேவேளை இவரது வீட்டில் தங்கியிருந்த ஆறு பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகன்றனர்.

முள்ளிவாய்க்கால் வட்டுவாகலில் 110 குடும்பங்கள் மீள்குடியேற அனுமதி.

முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் கிராம அலுவலர் பிரிவில்  110 குடும்பங்கள் மீள்குடியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திஙகள் கிழமை இக்குடும்பங்களச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் குடியமர்த்தப்படுவர் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

செட்டிக்குளம் இடைத்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களே இவ்வாறு அவர்களின் சொந்த இடத்தில் மீள்குடியமர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் கிளிநொச்சியில்!

Kilinochiநல்லிணக்க ஆணைக்குழு இன்று அதன் விசாரணைகளை கிளிநொச்சியில் நடத்துகின்றது. இன்றும் நாளையும் இந்த விசாரணைகள் கிளிநொச்சியில் நடைபெறும் என தெரவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு இன்றும் நாளையும் கிளிநொச்சியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை கேட்டறியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழ கடந்த சில வாரங்களாக அதன் விசாரணைகளையும் பல்வேறு தரப்பினரது சாட்சியங்ளையும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற சபைக்கான பிரதிநிதியாக TNA MP சுமந்திரனை ரணில் விக்கரமசிங்க தெரிவு செய்ய TNA அதனை நிராகரித்துள்ளது.

Sumanthiran_MP_TNAதற்போது கொண்டு வரப்பட்டுள்ள 18வது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற சபைக்கான பிரதிநிதியாக தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமித்த போதிலும் அதனை கூட்டமைப்பபு நிராகரித்தள்ளது. 18 வது அரசமைப்பத் திருத்தச் சட்டத்தை கூட்டமைப்பு எதிர்ப்பதால் ரணில் விக்கிரமசிங்க சுமந்திரனை நியமித்ததை தாம் நிராகரித்ததாக கூட்டமைப்பு தெரிவித்தள்ளது.

18வ அரசமைப்பு திருத்தச்சட்டமானது ஏற்கனவே நடைமுறையில் இருந்த 17வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்கிறது. அத்துடன். தேர்தல் ஆணையாளர். மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுச்சேவை, பொலிஸ் சேவை ஆகியவற்றிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு பொறுப்பாக இருந்து வந்த அரசியல் அமைப்பு சபைக்கு  பதிலாக நடாளுமன்ற சபை என்கிற அமைப்பை நியமிப்பதறகு 18வது அரசமைப்புத் திருத்தசட்டம் வழிவகுத்துள்ளது.  இந்த நாடாளுமன்ற சபையில் பிரதமர். எதிர்க்கட்சித் தலைவர், மற்றும்,சபாநாயகர் ஆகியோர் அங்கம் வகிப்பர். அத்துடன் பிரதமரும் எதிர்கட்சித் தலைவரும் தமக்கு விருப்பமான  வேறு இனக் குழுமத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களை நியமிப்பதற்கு அதிகாரம் பெற்றுள்ளனர்.  இவ்வாறு நியமிக்கப்படுகின்ற இருவர் உட்பட ஐவர் கொண்டதாக அப்பாராளுமன்ற சபை இருக்கும்

இச்சபையே நீதிச்சேவை, பொதுச்சேவை, தகவல்துறை, தேர்தல் ஆணையகம், மனித உரிமை போன்ற துறைகளுக்கான பெயர்களையும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான பெயர்களையும் ஜனாதிபதிக்கு சிபார்சு செய்யும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. இவ்வாறு சிபார்சு செய்யப்படுகின்றவர்களை ஜனாதிபதி ஏற்க வேண்டும் என்கிற கட்டாயம் 18வது அரசமைப்பத்திருத்தச் சட்டத்தில் இல்லை.

இந்த அடிப்படையிலேயே நாடாளுமன்ற சபையின் உறுப்பினராக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் பரிந்துரைக்கப்பட்டார். எனினும் கூட்டமைப்பு இந்த நியமனத்தை நிராகரித்துள்ளது.

இதே வேளை, கூட்டமைப்பு இதனை நிராகரிக்கும் எனத்தெரிந்து கொண்டே தான் தாம் சுமந்திரனை நாடாளுமன்ற சபைக்குழுத் தலைவாராக பிரேரித்ததாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 18 வது அரசமைப்புத் திருத்தச்சட்டம் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் எதிர்ப்பினை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை சிக்கலில் மாட்டிவிடும் வகையிலேயே தாம் நகர்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு 6 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டப்பட்டு கின்னஸ் சாதனை படைக்க தீர்மானம்!

Tree_Planting_Campaignஎதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதியின் மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாளை  முன்னிட்டு நாடு முழுவதும் 6 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டி கின்னஸ் சாதனை படைக்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தானில் ஒரே நாளில் 5லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டப்பட்டு சாதனை ஏற்படுத்தப்பட்டது. இச்சாதனையை பின்னர் 6லட்சத்து 11 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டி இந்தியா முறியடித்தது. ஜனாதிபதியின் பிறந்த நாளன்று இலங்கை 6லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டி அதனை முறியடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சிக் கிழக்கு பாடசாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன.

இடம்பெயர்ந்த மக்கள் வடமராட்சிக் கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் நிலையில் அப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. சில பாடசாலைகள் முன்பிருந்த அதன் சொந்தக் கட்டடங்கிளிலேயே இயங்க ஆரம்பித்துள்ளன.

செம்பியன்பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை கடந்த செவ்வாய் கிழமை தொடக்கம் இயங்க ஆரமபித்துள்ளது. உடுத்துறை மகாவித்தியாலயம், மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலை ஆகியன எதிர்வரும் வாரத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆழியவளை சி.சி.த.க.பாடசாலை, மாமுனை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, எனபனவும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.