விஸ்வா

விஸ்வா

படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தீபாவளி கலை நிகழ்வு.

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் தீபாவளியை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தின் 51வது படைப்பிரிவினால் நடத்த ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்விற்கு யாழ்.மாநகரசபை இறுதி நேரத்தில் அனுமதி மறுத்து விட்டதாக படைத்தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்நிகழ்வு இன்று மாலை 6.30 மணிக்கு யாழ். தபால் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபறவுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வையொட்டி 10 ஆயிரம் பெரிய மின்குமிழ்கள் மற்றும், 75 ஆயிரம் மின்குமிழ்களைக் கொண்டு யாழ். வேம்படிச் சந்தியிலிருந்து நிகழ்ச்சி இடம்பெறும் பகுதிவரை அலங்கரிக்கப்படவுள்ளதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பு தமிழரசுக் கட்சியினர் சாட்சியமளிக்கவுள்ளனர்.

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நான்கு தினங்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் தமிழசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், துணைச் செயலாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் சாட்சியமளிக்கவுள்ளனர்.

எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வின் போது அவர்கள் சாட்சியமளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரகக்கிளை இம்மாதம் திறக்கப்படவுள்ளது.

இந்தியத் தூதரகத்தின் யாழ்ப்பாணக் கிளை இம்மாதம் 26ஆம் திகதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் அம்பாந்தோட்டையிலும் இந்தியத் தூதரகத்தின் கிளையொன்று திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி கொழம்பில் நடைபெறவுள்ள இலங்கை -இந்திய பொருளாதார அபிவிருத்தி மாநாட்டில் கலந்து கொள்ளவரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா இந்தக் கிளைகளைத் திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அவர் இந்தியாவின் உதவியோடு மேற்கொள்ளப்படவிருக்கும் காங்கேசன்துறைக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் பாதைப் புனரமைப்பு பணிகளையும், ஓமந்தையில் ஆரம்பித்து வைக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மூன்று தினங்கள் இலங்கையில் தங்கியிருப்பார் எனவும், இலங்கையிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார் எனவும், இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மக்களுக்காக ஜேர்மன் தொடர்ந்தும் உதவிகளை வழங்குமாம்.

யாழ்.மக்களின் நலன்களுக்காக ஜேர்மன் நாடு தொடர்ந்தும் உதவிகளை வழங்கவுள்ளதாக யாழ்ப்பாணம் வந்துள்ள ஜேர்மன் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இத்தூதுக்குழுவினருக்கும் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று யாழ். மாகநரசபை கேட்போர் கூட்டத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ் மாநகரசபைக்கான புதிய கட்டடங்களை நிர்மானிப்பதற்கும், யாழ்.நகருக்கான குடிநீர் விநியோகத்திட்டத்திற்கும் ஜேர்மன் அரசு உதவி வேண்டும் என மாநகரசபை உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

யாழ். மக்களுக்காக ஜேர்மன் அரசாங்கம் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றதெனவும், கடந்த 20 வருடங்களில் 1.6 மில்லியன் யூரோ பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் எனவும் ஜேர்மன் நாட்டு நாடாளுமன்றத் தூதுக்குழுவின் தலைவர் ஏனஸ்பேகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கில் ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிலையம் ஒன்று நிறுவப்பட ஜேர்மன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஏற்கனவே கொழும்பு, மட்டக்களப்பு மாவட்டங்களில் இவ்வாறான தொழில்நுட்ப பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருவதாகவும் ஜேர்மன் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சிக் கிழக்கில் ஆறு வீதிகளை புனரமைப்பு செய்ய இராணுவம் அனுமதி!

வடமராட்சிக் கிழக்கில் ஆறு வீதிகளைப் புனரமைக்க இரணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த ஆறு வீதிகளும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ளவையாகும். இவ்வீதிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘வடக்கின் வந்தம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 40.2 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

நாகர்கோவில் பஸ் போக்குவரத்து வீதி, கயட்டை பஸ் போக்குவரத்து வீதி, யவுக்காநகர் வீதி, நாகதம்பிரான் கோவில் வீதி, முருகன் கோவில் வீதி, நாகதம்பிரான் கடற்கரை வீதி, ஆகிய ஆறு வீதிகளுமே புனரமைக்கப்படவுள்ளன. இப்பிரதேசத்தில் அண்மைக் காலத்திலேயே மீள் குடியேற்றம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வன்னியில் மரக்கன்றுகள் உள்ளிட்ட பொருட்கள் வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு வன்னிச் சந்தைகளில் விற்பனை.

வன்னிப் பிரதேசங்களில் அனைத்து பயிர்வகைகளும் அழிவடைந்துள்ளதால் மரக் கன்றுகள் உட்பட பலதும் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை மற்றும், தென்னிலங்கைப் பகுதிகளிலிருந்து கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக வன்னியில் அதிகளவில் காணப்பட்ட வாழை மரங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதால் வாழைப்பழங்கள் யாவும் யாழ்ப்பாணத்திலிருந்தே வன்னிக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. நடுகைக்காக வாழைக் கன்றுகளும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதே போல, மரவள்ளித்தடிகள், தென்னங்கன்றுகள், பல வகையான மரக்கன்றுகள் போன்றவையும் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

வன்னியில் கோழிகள் முற்றாக அழிவடைந்துள்ள நிலையில், திருகோணமலை கின்னியா பகுதிகளிலிருந்து இவை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னிப் பாடசாலைகளுக்கு இந்திய அரசாங்கம் உதவி.

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் புனரமைப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. இதனையடுத்து புனரமைப்பிற்குத் தெரிவான பாடசாலைகளின் விபரப் பட்டியலை மீளாய்வு செய்யுமாறு வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவன் வலயக் கல்விப்பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை புனரமைத்துத் தருமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் பிரகாரம் இந்திய அரசாங்கம் பாடசாலைகளைப் புனரமைக்க முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்கள் அம்மக்களுக்கு சரியான முறையில் சென்றடையவில்லை- தமிழ் கட்சிகளின் அரங்கம்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்கள் அம்மக்களுக்கு சரியான முறையில் சென்றடையவில்லை என தமிழ் கட்சிகளின் அரங்கம் தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளும். வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களும் வழங்கும் உதவிகள் முறையாக அம்மக்களுக்கு சென்றடைவதில்லை எனவும், இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தமிழ் கட்சிகளின் அரங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் ஒன்பதாவது கூட்டம் கொழும்பில் ஈ.பி.டி.பி தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 வரை இக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பாகவும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களது பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் உதவிகளில் அரைவாசியே சென்றடைவதாகவும் இப்பிரச்சனை தொடர்பாக ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடுவதெனவும், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட முடியாவிட்டால் சாத்வீக ரீதியாக போராட்டங்களை நடத்துவதெனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒழங்குகளை மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

இதே வேளை, தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் மூன்று பிரதிநிதிகள் நேற்று புதன் கிழமை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பாகவும், தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் ஒரு தீர்வினைக் காண ஒத்துழைக்க வேண்டுமென இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைவது தொடர்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொடர்பு கொண்டு அறிவிப்பதாக இரா.சம்பந்தன் தெரிவித்ததாக இச்சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் செயலாளரும், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவருமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இரா. சம்பந்தனுடனான சந்திப்பில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் தலைவர் எம்.கே சிவரிலிங்கம், புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜேர்மன் நாடமாளுமன்றக் குழுவினர் நாளை யாழ். வருகின்றனர்.

Jens_Plotnerஜேர்மன் நாடாளுமன்றக் குழுவினர் நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். இக்குழுவினரோடு இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜேன்ஸ் புளொட்னரும் வருகை தரவுள்ளார். இக்குழுவினர் நாளை யாழ்.மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளனர். வடமாகாண அளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தலைமையில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் மாவட்டச்செயலகத்தின் சார்பில் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், அபிவிருத்திப்பணிகள், பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இக்கலந்துரையாடலில் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் யாழப்பாணம் வருகை தந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடலில் யாழ்ப்பாண சிவில் சமூகப்பிரதிநிதிகள் பல்வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலக விஞ்ஞான தினத்தில் விருது பெறும் யாழ். மாணவன்!

St_Patricks_College_Jaffnaஇம்மாதம் 12ஆம் திகதி இடம்பெறும் உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு புதுடில்லி இந்திராகாந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகம் யுனெஸ்கோவுடன் இணைந்து சார்க் நாடுகளிடையே நடத்திய விஞ்ஞானப் போட்டியில் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் சி.செல்வநித்திலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சார்க் நாடுகளிடையே நடைபெற்ற இப்போட்டியில் நான்காயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் கட்டப்போடடிக்கு இவர்களில் 41பேர் மட்டுமே தெரிவாகியுள்ளனர். இவர்களில் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் மூவராகும். எதிர்வரும் 13ஆம் திகதியன்று புதடில்லியில் நடைபெறும் இரண்டாம் கட்டப்போட்டியின் பின்னர் முதலாம் கட்டத்தில் தெரிவான 41 பேருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதில் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் மாணவன் செல்வநித்திலனும் ஒருவர்.

St_Patricks_College_Jaffnaஇம்மாணவன் இலங்கைப் பௌதிகவியற் கழகம் நடாளாவிய ரீதியில் நடத்திய ‘இலங்கை பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டி’யிலும் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று தேசிய விஞ்ஞான மன்றத்தின் உலக விஞ்ஞான தின விழாவில் தங்கப்பதக்கம் பெறவுள்ளார். இவ்விழா நவம்பர் 12ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இத் தங்கப்பதக்கத்தை தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகளுக்கான அமைச்சர் பேராசியரியர் திஸ்ஸவிதாரண வழங்கவுள்ளார்.