சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

நாடு பூராவும் டெங்கு காய்ச்சல் தீவிரம்

14052009.jpgநாடெங்கிலும் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவுகையைக் கட்டுப்படுத்துவதற்காக நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களை ஒழித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க முன்வரவேண்டும் என்றும் அமைச்சு மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

டெங்கு காய்ச்சல் காரணமாக இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 63 பேர் உயிரிழந்திருப்பதுடன், 4600 பேர் நோயாளர்களாக இனம் காணப்பட்டிருப்பதாக அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவின் சமூக நோயியல் ஆலோசகர் டாக்டர் ஹசித திசேரா நேற்று தெரிவித்தார்.

கண்டி, கொழும்பு, கேகாலை, மட்டக்களப்பு, திருமலை, கம்பஹா, குருணாகல், ஹம்பாந்தோட்டை உட்பட பல மாவட்டங்களில் இக்காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாகவும் அவர் கூறினார்.

அண்மைக்கால அவதானிப்புக்களின்படி, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகள் வெயில் காலத்திலும் பல்கிப் பெருகி இக் காய்ச்சலைப் பரப்பக் கூடிய வகையில் வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எவருக்காவது மூன்று நாட்களுக்குத் தீவிர காய்ச்சல் காணப்படுமாயின் தாமதியாது அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருத்துவ நிபுணர்களை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் : இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மே மாதம் 12ம் திகதி வரையும் டெங்கு காய்ச்சல் காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளனர். 4600 பேர் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இக்காய்ச்சல் காரணமாக இக்காலப் பகுதியில் கேகாலை மாவட்டத்தில் தான் அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் கண்டி மாவட்டத்தில் தான் அதிகளவானோர் இக்காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் காரணமாக கேகாலை மாவட்டத்தில் 11 பேரும், கண்டி மாவட்டத்தில் 9 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 8 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 7 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 5 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 5 பேரும் இக்காலப் பகுதியில் உயிரிழந்திருக்கிறார்கள்.

இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களிலேயே 63 பேர் உயிரிழந்து விட்டனர். ஆனால் கடந்த வருடத்தில் 27 பேரே இக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர்.

இதன்படி டெங்கு காய்ச்சல் இப்போது மிகவும் தீவிரமடைந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகின்றது.

அதேநேரம் தற்போது வெயில் கால நிலை நிலவிய போதிலும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்திருக்கின்றது. ஆகவே டெங்கு காய்ச்சலைப் பரப்பப் கூடிய நுளம்புகள் வெயில் காலத்திலும் பல்கிப் பெருகக் கூடிய வகையில் முதிர்ச்சி அடைந்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

நுளம்புகள் பெருக முடியாதபடி சுற்றாடலை சுத்தமாகவும், உலர் நிலையிலும் வைத்திருப்பதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதேவேளை எவருக்காவது மூன்று நாட்களுக்குத் தீவிர காய்ச்சல் காணப்பட்டால் தாமதியாது மருத்துவ நிபுணர்களை அணுகி சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். இது உயிரிழப்பைத் தவிர்ப்பதற்குப் பெரிதும் உதவும் என்றார்.

வெண்மூட்டுப் பூச்சி நோயை ஒழிக்க அமெரிக்காவிலிருந்து ஒட்டுண்ணி

நாடு பூராவும் பப்பாசி, இறப்பர் அடங்கலான பெருமளவு தாவரங்களில் பரவி மரங்களை அழித்துவரும் வெண் மூட்டுப் பூச்சி நோயை ஒழிப்பதற்கு அமெரிக்காவின் விவசாயத் திணைக்களத்திலிருந்து ஒட்டுண்ணி வகையொன்றை தருவிக்க விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த ஒட்டுண்ணி நாளை இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளதோடு நாளை மறுதினம் முதல் இந்த ஒட்டுண்ணி மூலம் வெண்மூட்டுப் பூச்சியை ஒழிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக தாவரபரிசோதனை மற்றும் அபிவிருத்தி நிறுவனப் பணிப்பாளர் ஜினதாச த சொய்சா கூறினார்.

இது தொடர்டபாக விளக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்றது. இந்த மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :-

இதற்கு முன்னரும் இலங்கையில் இவ்வாறான வெண்மூட்டுப் பூச்சிகள் பரவிய போதும் அவை கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் கடந்த 2008 மார்ச் மாதம் முதல் நாட்டின் பல்வேறு பகுதியிலும் பரவி வரும் வெண்மூட்டுப் பூச்சி வேகமாகப் பரவக் கூடியது.  இதனை இரசாயனப் பொருட்கள் மூலம் ஒழிப்பது கடினம். இந்தியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளிலும் இந்த நோய் பரவியுள்ளது.

இலங்கையில் 28 வகையான தாவரங்களில் இந்த நோய் பரவியுள்ளது. நுவரெலியா மாவட்டம் தவிர சகல பகுதிகளிலும் இந்த நோய் பரவியுள்ளது. வடக்கு கிழக்கு நிலமை குறித்து தகவல் கிடைக்கவில்லை. பப்பாசி மரத்திலேயே இந்த நோய் கூடுதலாக பரவுகிறது. தற்பொழுது இறப்பர் மரங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது.

இந்த நோயை தடுப்பது குறித்து விவசாய அமைச்சின் கீழுள்ள பல்வேறு பிரிவுகள் ஆய்வுகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டன. மெக்சிகோவில் இருந்தே இந்த நோய் இலங்கைக்கு பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த வெண்மூட்டுப் பூச்சியை ஒழிப்பதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஒட்டுண்ணி வகையொன்றை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளன. அவ்வகையான ஓட்டுண்ணிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்க அமெரிக்க விவசாயத் திணைக்களம் முன்வந்துள்ளது.

இலங்கைக்கு எடுத்துவரப்படும் இந்த ஒட்டுண்ணி 16ஆம் திகதி வைபவ ரீதியாக பொலன்னறுவையில் வைத்து விடுவிக்கப்படும். அடுத்து மேலும் 10 பிரதேசங்களில் இந்த ஒட்டுண்ணிகள், வெண்மூட்டுப் பூச்சியை ஒழிக்கப் பயன்படுத்தப்படும். இவ்வாறான ஒட்டுண்ணிகளை இலங்கையில் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒட்டுண்ணிகள் மூலம் 6 மாத காலத்தில் வெண்மூட்டுப் பூச்சிகள் அழிந்துவிடும். வெண்மூட்டுப் பூச்சி நோய் பரவிய மரங்களை அழித்துவிட வேண்டும். இன்றேல் அந்த மரங்களில் இருந்து ஏனைய மரங்களுக்கும் இந்த நோய் தொற்றும் என்றார்.

அமைச்சர் நிமல் ஜெனீவா பயணம்

nimal-siriiii.jpgஉலக சுகாதார ஸ்தாபனத்தின் 62வது வருடாந்த மாநாட்டில் பங்கு பற்றுவதற்காக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (13ம் திகதி) ஜெனீவா பயணமானார். இதேவேளை சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை பதிலமைச்சராக சுகாதார மேம்பாட்டு அமைச்சர் ஜயரத்ன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

62வது உலக சுகாதார மாநாடு எதிர்வரும் 18ம் திகதி முதல் 27ம் திகதிவரையும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் 28ம் திகதி முதல் 30ம் திகதி வரையும் ஜெனீவாவில் நடைபெறவிருக்கின்றது. இம்மாநாட்டில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விசேட உரையாற்றவுள்ளார்.

சப்ரகமுவ ஆளுநர் மொஹான் எல்லாவெலயின் இறுதிக் கிரியைகள் 16ஆம் திகதி

ellawala.jpgகாலஞ் சென்ற சப்ரகமுவ மாகாண ஆளுநர் மொஹான் சாலிய எல்லாவெலயின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 16ஆம் திகதி பலாங்கொடை நகரில் நடைபெறவுள்ளதாக ஆளுநரின் உதவிச் செயலாளர் விஜேவர்தன தெரிவித்தார்.61 வயதான மொஹான் சாலிய எல்லாவெல சுகயீனமுற்ற நிலையில் கொழும்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம்  பகல் காலமானார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான  இவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி சப்ரகமுவ மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். இரு பிள்ளைகளின் தந்தையான மொஹான் சாலிய எல்லாவெல 1991ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலாங்கொடை அமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

வாகன விபத்தில் ரூபவாஹினி தொ.நு. ஊழியர் இருவர் பலி

வாகன விபத்து ஒன்றில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். பஸ்யால – மீரிகம வீதியிலுள்ள ஹங்வான எனும் இடத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த இரு உத்தியோகத்தர்களே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து சென்றுகொண்டிருந்த இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனவான் மற்றொருவானுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக வத்துபிட்டிவெல அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ரூபவாஹினி தொழில்நுட்ப பிரிவு உத்தியோகத்தர்களான ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எம். குணவர்தன, ஹோமாகமையைச் சேர்ந்த டி.ஆர்.எம். ஹிரிபிட்டிய ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இருவரது மரணச் சடங்குகளுக்கான செலவை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஏற்றுள்ளது.

கிழக்கு மாகாணஅபிவிருத்திக்காக ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி

abdul-majeed.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாண அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இம்மாகாண அபிவிருத்திக்காக இதுவரையில் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்தார். சின்னக் கிண்ணியா கோப் சிற்றி திறப்பு விழா கடந்த சனிக்கிழமை கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பணிப்பாளர் சபைத் தலைவர் எஸ்.ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஜீ. ராஜினி மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம். நஸீர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்

தெற்காசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி மாநாடு இன்று சீனாவில் ஆரம்பம்

anura_priyadarshana_yapa.jpgதெற்காசியப் பிராந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி மாநாடு இன்று சீனாவில் ஆரம்பமாகிறது. சார்க் பிராந்தியத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்தல் எனும் தொனிப் பொருளில் நடைபெறவுள்ள இம்மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி முடிவடையும்.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் இன்றைய முதல் நாள் அமர்வில் இலங்கை சார்பாகக் கலந்துகொள்ளும் தகல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா உரையாற்றவுள்ளார்.

சார்க் நாடுகளுடன் இணைந்து சீனா ஏற்பாடு செய்துள்ள இம்மாநாட்டில் இலங்கை சார்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஹட்சன் சமரசிங்கவும் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரானிய அமெரிக்க செய்தியாளர் விடுதலை

rokchana.jpgஇரானில் சிறையிடப்பட்டிருந்த இரானிய அமெரிக்க பத்திரிகையாளரான ரோக்ஸானா சபேரியின் தண்டனைக் காலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால், எட்டு ஆண்டுகளிலிருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்டதும் இரானை விட்டு வெளியேற அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறுகிறார் அவரது வழக்கறிஞர். மேலும் ஐந்து வருடங்களுக்கு அவர் இரானில் பத்திரிகையாளராக பணியாற்றக் கூடாது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரானிய அமெரிக்க உறவுகளை சீராக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முனைந்திருந்த நேரத்தில், இந்த வழக்கு இரு நாடுகளுக்கும் இடையில், பதற்ற நிலையை அதிகரித்தது என்று நிருபர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சப்ரகமுவ ஆளுநர் மொஹான் எல்லாவெல நேற்று காலமானார்

ellawala.jpgசப்ரகமுவ மாகாண ஆளுநர் மொஹான் சாலிய எல்லா வெல (61வயது) நேற்று (12) கொழும்பில் காலமானார். நோய் வாய்ப் பட்டு நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று பகல் (12) மரணமடைந்ததாக ஆளுநரின் உதவிச் செயலாளர் விஜேவர்தன தெரிவித்தார்.

இவர் கடந்த 2008 அக்டோபர் மாதம் 2ம் திகதி சப்ரகமுவ மாகாண ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார். சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினராக அமைச்சராக, சபை தலைவராக மற்றும் மாகாண முதலமைச்சராக கடமையாற்றியுள்ள இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவராவர். 1976ம் ஆண்டு விவசாய அமைச்சர் ஹெக்டர் கொப்பேகடுவவின் பிரத்தியேக செயலாளராகவும் கடமையாற்றியுள்ள இவர் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் நந்தன எல்லாவெலயின் சகோதரரும் மொஹான் எல்லாவெலயின் சிறிய தந்தையுமாவார். இவர் 1991ம் ஆண்டு முதல் பலாங்கொடை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராக பணியாற்றினார். இரு பிள்ளைகளின் தந்தையான மொஹான் சாலிய எல்லாவெலயின் இறுதிக்கிரியைகள் பலாங்கொடை நகரில் இடம்பெற உள்ளதோடு இறுதிக்கிரியை தொடர்பான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என உதவிச் செயலாளர் விஜேவர்தன கூறினார்.

இந்தியாவிலிருந்து புதிய ரயில் என்ஜின்கள் விரைவில் இறக்குமதி – போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை

dalas.jpgரயில் சேவையின் மேம்பாட்டுக்காக மேலும் புதிய ரயில் என்ஜின்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இந்த வருட இறுதிக்குள் 20 பவர்செட் ரயில்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

இவற்றின் முதலாவது ரயில் தொகுதி 4 மாதங்களுக்குள் இலங்கை வந்தடையும் என் எதிர்பார்க்கப்படுகிறது. மலசலகூடவசதி, சொகுசு ஆசன வசதி என்பன இவற்றில் உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவை இரண்டு கட்டங்களாக கப்பல் மூலம் கொழும்பை வந்தடைய உள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டுள்ளதாகவும் தூர இடங்களில் சேவையில் ஈடுபடுத்தக்கூடிய பவர்வெட் ரயில்களையே இம்முறை தருவிக்க உள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.

மேற்படி ரயில்கள் கரையோரப் பாதை மற்றும் களனிவெளிப் பாதை என்பவற்றில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்திய உதவியுடன் தென்பகுதிக்கான ரயில் சேவையை மேம்படுத்தும் திட்டத்துடன் இணைந்ததாகவே மேற்படி ரயில் என்ஜின்கள் தருவிக்கப்படுகின்றன. புதிய ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதன் மூலம் ரயில் சேவையிலுள்ள தாமதம் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.