நாடு பூராவும் பப்பாசி, இறப்பர் அடங்கலான பெருமளவு தாவரங்களில் பரவி மரங்களை அழித்துவரும் வெண் மூட்டுப் பூச்சி நோயை ஒழிப்பதற்கு அமெரிக்காவின் விவசாயத் திணைக்களத்திலிருந்து ஒட்டுண்ணி வகையொன்றை தருவிக்க விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த ஒட்டுண்ணி நாளை இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளதோடு நாளை மறுதினம் முதல் இந்த ஒட்டுண்ணி மூலம் வெண்மூட்டுப் பூச்சியை ஒழிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக தாவரபரிசோதனை மற்றும் அபிவிருத்தி நிறுவனப் பணிப்பாளர் ஜினதாச த சொய்சா கூறினார்.
இது தொடர்டபாக விளக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்றது. இந்த மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :-
இதற்கு முன்னரும் இலங்கையில் இவ்வாறான வெண்மூட்டுப் பூச்சிகள் பரவிய போதும் அவை கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் கடந்த 2008 மார்ச் மாதம் முதல் நாட்டின் பல்வேறு பகுதியிலும் பரவி வரும் வெண்மூட்டுப் பூச்சி வேகமாகப் பரவக் கூடியது. இதனை இரசாயனப் பொருட்கள் மூலம் ஒழிப்பது கடினம். இந்தியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளிலும் இந்த நோய் பரவியுள்ளது.
இலங்கையில் 28 வகையான தாவரங்களில் இந்த நோய் பரவியுள்ளது. நுவரெலியா மாவட்டம் தவிர சகல பகுதிகளிலும் இந்த நோய் பரவியுள்ளது. வடக்கு கிழக்கு நிலமை குறித்து தகவல் கிடைக்கவில்லை. பப்பாசி மரத்திலேயே இந்த நோய் கூடுதலாக பரவுகிறது. தற்பொழுது இறப்பர் மரங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இந்த நோயை தடுப்பது குறித்து விவசாய அமைச்சின் கீழுள்ள பல்வேறு பிரிவுகள் ஆய்வுகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டன. மெக்சிகோவில் இருந்தே இந்த நோய் இலங்கைக்கு பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த வெண்மூட்டுப் பூச்சியை ஒழிப்பதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஒட்டுண்ணி வகையொன்றை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளன. அவ்வகையான ஓட்டுண்ணிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்க அமெரிக்க விவசாயத் திணைக்களம் முன்வந்துள்ளது.
இலங்கைக்கு எடுத்துவரப்படும் இந்த ஒட்டுண்ணி 16ஆம் திகதி வைபவ ரீதியாக பொலன்னறுவையில் வைத்து விடுவிக்கப்படும். அடுத்து மேலும் 10 பிரதேசங்களில் இந்த ஒட்டுண்ணிகள், வெண்மூட்டுப் பூச்சியை ஒழிக்கப் பயன்படுத்தப்படும். இவ்வாறான ஒட்டுண்ணிகளை இலங்கையில் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒட்டுண்ணிகள் மூலம் 6 மாத காலத்தில் வெண்மூட்டுப் பூச்சிகள் அழிந்துவிடும். வெண்மூட்டுப் பூச்சி நோய் பரவிய மரங்களை அழித்துவிட வேண்டும். இன்றேல் அந்த மரங்களில் இருந்து ஏனைய மரங்களுக்கும் இந்த நோய் தொற்றும் என்றார்.