சப்ரகமுவ மாகாண ஆளுநர் மொஹான் சாலிய எல்லா வெல (61வயது) நேற்று (12) கொழும்பில் காலமானார். நோய் வாய்ப் பட்டு நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று பகல் (12) மரணமடைந்ததாக ஆளுநரின் உதவிச் செயலாளர் விஜேவர்தன தெரிவித்தார்.
இவர் கடந்த 2008 அக்டோபர் மாதம் 2ம் திகதி சப்ரகமுவ மாகாண ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார். சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினராக அமைச்சராக, சபை தலைவராக மற்றும் மாகாண முதலமைச்சராக கடமையாற்றியுள்ள இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவராவர். 1976ம் ஆண்டு விவசாய அமைச்சர் ஹெக்டர் கொப்பேகடுவவின் பிரத்தியேக செயலாளராகவும் கடமையாற்றியுள்ள இவர் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் நந்தன எல்லாவெலயின் சகோதரரும் மொஹான் எல்லாவெலயின் சிறிய தந்தையுமாவார். இவர் 1991ம் ஆண்டு முதல் பலாங்கொடை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராக பணியாற்றினார். இரு பிள்ளைகளின் தந்தையான மொஹான் சாலிய எல்லாவெலயின் இறுதிக்கிரியைகள் பலாங்கொடை நகரில் இடம்பெற உள்ளதோடு இறுதிக்கிரியை தொடர்பான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என உதவிச் செயலாளர் விஜேவர்தன கூறினார்.