எதிர்வரும் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டக்களப்பு நகரில் நடைபெறவிருக்கும் முதலமைச்சர்கள் மாநாட்டை முன்னிட்டு நகர் மற்றும் புறநகர் பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த வருடம் பதுளையில் ஊவா மாகாண முதலமைச்சர் விஜயமுனி சொய்சா தலைமையில் முதலமைச்சர் மாநாடு நடைபெற்றது. அவ்வேளை, 2008 -2009 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர்கள் மாநாட்டுத் தலைவராக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவானார்.
அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பேரில் 2009 ஆம் ஆண்டுக்கான மாநாடு மட்டக்களப்பில் நடை பெறுகின்றது. மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் 8 மாகாணங்களையும் சேர்ந்த முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். மேல் மாகாண முதலமைச்சராக பதவியேற்றுள்ள பிரசன்னா ரணதுங்க கலந்து கொள்ளும் முதலாவது முதலமைச்சர்கள் மாநாடு இதுவாகும் .
இம்மாநாட்டை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கையின் பிரகாரம் நகர பிரதேசத்திலுள்ள 7 பாடசாலைகள் வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மூடப்படுகின்றன. இதனைத் தவிர நகரிலுள்ள வியாபார நிலையங்களில் சேவையாற்றும் சிப்பந்திகள் பற்றிய விபரங்களும், அங்கு தங்கியிருப்பவர்கள் விபரங்களையும் பொலிஸார் திரட்டி வருகின்றனர்.
மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிற மாவட்டங்களிலிருந்து பொலிஸார் விசேட கடமையின் நிமித்தம் வருகை தரவிருப்பதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.மாநாடு நடை பெறும் நாட்களில் அரச மற்றும் தனியார் பஸ் நிலையங்கள்,ஆட்டோ தரிப்பிடங்கள் ஆகியவற்றை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.