எந்த வொரு சந்தர்ப்பத்திலும் தோட்டத்தொழிலாளர்களை அரசாங்கம் தனிமைப்படுத்தவில்லை. தொழிலாளரின் பிள்ளைகள் பொலிஸ், பாதுகாப்பு படையில் சேர முடியும். அனைவரும் ஒருதாயின் பிள்ளைகளே என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
நோர்வூட் நகரில் போட்டியிடும் இ.தொ.கா.வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார். இ.தொ.கா.பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இக்கூட்டம் ஆரம்பமானது. குண்டு துளைக்காத கண்ணாடி பெட்டியில் பலத்த பாதுகாப்பின் மத்தியலேயே ஜனாதிபதி உரைநிகழ்த்தினார்.
இந்நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தோட்டத் தொழிலாளர்களே விளங்குகின்றனர். இந்நாட்டிலுள்ள ஏனைய மக்களுக்குக் கிடைக்கும் சகல வசதி வாய்ப்புகளும் தோட்டப்புற மக்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்படும். மலையக மக்களுக்கு இன்னும் வசதி வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற வேண்டுமெனின் உங்கள் மத்தியிலிருந்து தமிழ் பிரதிநிதியொருவரை தெரிவு செய்ய வேண்டும். இது வரைகாலமும், எந்தவொரு அரசாங்கத்தினாலும் முன்னெக்கப்படாத பெருமளவான அபிவிருத்தி வேலைத்திட்டங்களையே எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மலையக மக்களுக்கு எமது அரசாங்கமே சிறந்த சேவைகளை வழங்கியுள்ளது. உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களை தனிமைப்படுத்த வில்லை. நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். பயங்கரவாதத்திலிருந்து இந்நாட்டை மீட்டெடுத்து அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வை வழங்குவதே எமது நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.