நேற்று முன்தினம் சனிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்த ஜப்பானிய விசேட தூதர் யசூசி அகாசி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் கலந்துரையாடினார். கிழக்கு மாகாணத்தில் உருவாகியுள்ள ஜனநாயக சூழலை மேலும் வலுப்படுத்தவும் அபிவிருத்தி வேலைகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் ஜப்பான் அரசாங்கத்தின் பயங்களிப்பு காத்திரமானதாக அமைய வேண்டும் என்று முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஜப்பானிய தூதரிடம் தெரிவித்தார்.
ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியுள்ள கிழக்கு மாகாணத்தில் குறிப்பிடப்பட்ட அபிவிருத்திகளில் முன்னேற்றங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றது. எனினும் ஒரு சல சம்பவங்கள் அவற்றை மூடி மறைக்கும் முயற்சியாக மேற்கொள்ளப்படுவதாகவும் முதலமைச்சர் ஜப்பானிய தூதரிடம் குறிப்பிட்டார்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். விடுவிக்கப்படும் வடக்கு மாகாணத்தில் ஜனநாயக சூழல் ஏற்படவும் அபிவிருத்தியில் முன்னேற்றம் காணவும் ஜப்பானிய அரசாங்கத்தின் பங்களிப்பு அத்தியாவசியம் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜப்பான் அளித்து வந்துள்ள நிதி உதவிகளுக்கு ஜப்பானிய தூதரிடம் முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். பதினாறு தடவைகளுக்கு மேல் இலங்கை வந்துள்ள தமக்கு தற்போதைய வருகை வித்தியாசமானதொன்றாக அமைவதாக ஜப்பானிய தூதர் அகாசி குறிப்பிட்டார். ஜனநாயக வழிக்குத் திரும்பியுள்ள கிழக்கு மாகாணத்தின் மாகாண நிர்வாகத்துக்குப் பொறுப்பான முதலமைச்சர் மற்றும் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பிரதி நிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பை தற்போதைய விஜயம் தமக்குத் தந்திருப்பதாகவும் அகாசி கூறினார்.கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக சூழல் நிலவுவது, அதனூடாக சமாதானத்தை வலுவானதாக ஏற்படுத்துவதற்கு உதவும் என்றும் அகாசி கூறினார். 13 ஆவது சரத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதன் அவசியம் பற்றிய கோரிக்கையை கொழும்பில் அரச தலைமைப்பீடத்துடன் நடத்தும் பேச்சுகளின் போது முன்வைப்பதாகவும் அகாசி கூறினார். அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலருடன் ஜப்பானிய தூதர் அகாசி கலந்துரையாடினார். இச்சந்திப்பு 10 நிமிடங்கள் நீடித்தது.