கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவிலுள்ள நகைக்கடைகளில் இடம் பெற்ற தேடுதல் நடவடிக்கைகளின் போது வேலைக்கமர்த்தப்பட்டிருந்த ஒன்பது சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரும் தொழில் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிமுதல் 2 மணிவரை நடத்திய தேடுதலின் போது குறிப்பிட்ட இந்த சிறுவர்கள் மீட்கப்பட்டதாக கொழும்பு மத்திய குற்றப்பிரிவின் பொலிஸ் அதிகாரியான ஜயவர்த்தன தெரிவித்தார். இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவர்களை மாளிகாவத்தை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ததாக தெரிவித்த அவர், இச்சிறுவர்களின் பெற்றோருக்கு இச்சம்பவம் தொடர்பாக அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த தேடுதலை கொழும்பு மத்திய குற்றப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தயா சமரவீர, பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜயவர்த்தன, பொலிஸ் காண்டபிள்களான திஸாநாயக்க, வாஹித் மற்றும் இணவர்த்தன ஆகியோர் மேற்கொண்டனர்