அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற ஒபாமா பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் .இதன் ஒரு பகுதியாக குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை அவர் தீவிரப்படுத்தி வருகிறார். மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் கருக்கலைப்பு, செய்து கொள்ள ஏற்பாடு செய்யும் அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்கான உத்தரவில் ஒபாமா கையெழுத்திட்டார்.
புஷ் ஆட்சி காலத்தில் கருக்கலைப்பு செய்ய உதவும் அமைப்புகளுக்கு நிதி உதவி அளிப்பது தடை செய்யப்பட்டு இருந்தது. இப்போது அந்த தடை நீக்கப்பட்டு விட்டது. ஒபாமாவின் இந்த முடிவுக்கு போப் ஆண்டவர் பெனடிக்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போப் ஆண்டவர் சார்பில் வாடிகன் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது. இது வாழ்வு பிரச்சினை. உயிர் பிரச்சினை அனைத்து தரப்பினரின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும். இத் திட்டம் கத்தோலிக்க மத ஈடுபாடு உள்ளவர்களின் முதுகில் குத்துவதாகும். படைக்கப்படும் உயிர்களை முளையிலேயே கிள்ளி எறியும் இந்த படுகொலைக்கு ஆதரவு தெரிவிப்பது வேதனை தரும் விஷயம். இவ்வாறு வாடிகன் தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.