சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

ஆயுதங்களை கீழே வைத்து சரணடையுமாறு புலிகளுக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு

mahi-raja.jpgஆயுதங் களைக் கீழே வைத்துவிட்டுப் படையினரிடம் சரணடையுமாறு நான் மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுக்கின்றேன். இதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

எக்காரணத்தைக் கொண்டும் படைநடவடிக்கை நிறுத்தப் படமாட்டாது. அப்பாவித் தமிழ் மக்களை மீட்பதற்காக புலிகள் ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு சரணடைய வேண்டுமெனவும் ஜனாதிபதி உறுதியாகத் தெரிவித்தார்.

புலிகளை கடலில் தள்ளவும் முடியாத சூழலே தற்போது தோன்றியுள்ளது. அவர்களைக் களப்பில்தான் தள்ளி விட வேண்டியுள்ளது. எனினும் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சரணடைய மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யுத்தத்தையோ வேறு எதனையோ காரணம் காட்டி மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை மீள அபகரிக்க ஒருபோதும் அரசு முற்படவில்லை என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடமேல் மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலை மையில்  தேர்தல் பிரசாரக் கூட்ட மொன்று நேற்றுக் குருநாகல் மாளிகா பிடிய மைதானத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி இங்கு மேலும் கூறிய தாவது:-

முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இலங்கையை ஒரே நாடாகவே ஜே.ஆர். ஜயவர்தனவிடம் பாரம் கொடுத்தார். எனினும் நாம் நாட்டைப் பொறுப் பேற்கையில் புத்தளம் வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்கள் புலிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டிருந்தது.

2005 ஆம் ஆண்டு இந்த நாட்டை என்னிடம் ஒப்படைத்த மக்கள் ஒரே ஒரு ஆணையை மட்டுமே எனக்கு வழங்கினர். பயங்கரவாதத்திடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதே அந்த ஆணையாகும். அதனை நான் உறுதியுடன் நிறைவேற்றியுள்ளேன்.

முல்லைத்தீவில் இப்போது இறுதி யுத்தம் நடக்கிறது. புலிகள் போக்கிடமின்றி தற்போது சிவிலியன்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் ஒழிந்து கொண்டுள்ளனர்.

நான் குருநாகல் மாவட்டத்திற்கு வருகை தரும்போது பெருமைப்பட முடிகிறது. வட க்கு யுத்தத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான படைவீரர்கள் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே அந்தப் பெருமைக்குக் காரணமாகும். இப்பிரதேச மக்களும் என்னைப் போன்றே பெருமைப்படுவீர்கள் என்பது உறுதி என்றார்.

மத்திய மாகாண சபைக்கு 58 உறுப்பினர்களை தெரிவுசெய்ய 17 இலட்சத்து 46 ஆயிரம் வாக்காளர்கள் தகுதி

ballot-box.jpgஎதிர் வரும் மத்திய மாகாணசபை தேர்தலில் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலிருந்து 56 உறுப்பினர்கள் தெரிவுசெய்வதற்காக 17 இலட்சத்து 46 ஆயிரத்து 449 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளார்கள். இதில் கண்டி மாவட்டத்தில் 30 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 9 இலட்சத்து 55 ஆயிரத்து 108 வாக்காளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 16 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 4 இலட்சத்து 52 ஆயிரத்து 395 வாக்காளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 3 இலட்சத்து 38 ஆயிரத்து 946 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளார்கள்.

நுவரெலியா மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகள் 10 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 456 வேட்பாளர்களும், கண்டி மாவட்டத்தில் 10 அரசியல் கட்சிகள் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 594 வேட்பாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகள் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 260 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இம்மூன்று மாவட்டங்களிலுமிருந்து வாக்காளர்களின் வாக்குகள் மூலம் 56 உறுப்பினர்களும் போனஸாக 2 உறுப்பினர்களுமாக மொத்தம் 58 உறுப்பினர்கள் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 22 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பில் 9 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 7 உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் 2 உறுப்பினர்களும், மலையக மக்கள் முன்னணி 2 உறுப்பினர்களுமாக 58 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை நியமனத்தில் தவறு: ஒப்புக்கொண்டார் பராக் ஒபாமா

obama-2001.jpgஅமைச் சர்கள் நியமனத்தில் தவறு நடந்துவிட்டது உண்மையே. இனி இதுபோல் நடக்காது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு வாரமாகிறது.

இந்நிலையில் அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட டாம் டேசஸ் மற்றும் வெள்ளை மாளிகை தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட நான்சி சில்லிபெர், தங்களின் வரிகளை செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் பதவி விலகினர். இந்த விஷயத்தில் தான் தவறு செய்துவிட்டதை ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “டாம் டேசஸ் மற்றும் நான்சி சில்லிபெர் நியமனத்தில் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு செயல்பட்டு விட்டேன். செய்த தவறுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன். சாதாரண மக்களுக்கு ஒரு விதி, பிரபலமானவர்களுக்கு ஒரு விதி என்ற இரு விதமான விதிமுறைகளை எனது நிர்வாகம் கடைபிடிப்பது போன்ற தவறான செய்தி மக்களை சென்றடைய நான் அனுமதிக்க மாட்டேன்” என்றார்.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாதென்பதால் படையினரின் நடவடிக்கைகளில் தாமதம் – விமல்வீரவன்ச

parliament2301.jpgபொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதனாலேயே படையினரின் நடவடிக்கைகள் குறைவான வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி., இல்லாவிட்டால் படையினரின் நடவடிக்கைகள் இன்னும் வேகமாக முடிந்திருக்கும் என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜே.வி.பி.க்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை திருத்தம் செய்யப்பட வேண்டும். நோர்வேயின் அனுசரணை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளே இருந்தன. ஆனால், இன்றோ அரசாங்கம் போர் நிறுத்தத்தையே முடிவுக்கு கொண்டு வந்து, நோர்வேயின் பாத்திரத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது மட்டுமன்றி, அதற்கு அப்பால் சென்று விடுதலைப் புலிகளை தடையும் செய்துள்ளது.

எனவே, 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணை இன்று உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் அதைப் பெற உரைத்தவர்கள் என்ற வகையில் நாம் சந்தோஷமடைய வேண்டும். படையினர் இன்று புலிகளை இறுதி நிலைக்குக் கொண்டு சென்று சிக்க வைத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புலிகளுக்கு நேரடியாகவே தூதுபோகும் ஒரு சில உறுப்பினர்கள் படையினருக்கு கடலுக்குள் குதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்கள். ஆனால் இன்றோ புலிகளுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இன்று இராணுவ வெற்றிகளை பாராட்டும் நிலைக்கு வந்துள்ளார். எனினும் படையினர் கிளிநொச்சியை கைப்பற்றிய போது கூட இதை அவர் கூறவில்லை. அதன் போது எரிபொருட்களின் விலைகளை குறைக்குமாறே கூறினார். ஆனால், படையினர் முல்லைத்தீவையும் கைப்பற்றி இறுதி வெற்றிக்குச் செல்லும் நிலையில் ரணில் விக்கிரமசிங்கவும் படையினர் வெற்றிகளை பாராட்டத் தொடங்கியுள்ளார்.

இதேநேரம், போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்துமாறு அமெரிக்காவும் பிரிட்டனும் வலியுறுத்தியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எந்தவொரு வெளிநாட்டு அழுத்தத்திற்கும் உட்பட்டு, இறுதித் தோல்வி நிலையில் இருக்கும் விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் ஒட்சிசன் வழங்க மீண்டுமொரு போர் நிறுத்தத்தை அரசாங்கம் ஏற்படுத்தாது.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமென்பதற்காகவே படையினர் தங்களது மனிதாபிமான நடவடிக்கைகளை மெதுவாக மேற்கொண்டு வருகின்றனர். இல்லாவிட்டால் படையினரினர் நடவடிக்கைகள் இன்னும் வேகமாக இருக்கும், ஈராக்கில் அமெரிக்கப் படையினர் போன்றோ அல்லது காஸாவில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்டது போன்றோ பொதுமக்களின் நலன் குறித்து கருதாமல் இலங்கைப் படையினர் தாக்குதல்களை நடத்தவில்லை. இவ்வாறான நிலைமையில் அமெரிக்காவுக்கும் சரி, பிரிட்டனுக்கும் சரி இலங்கைப் படையினரின் நடவடிக்கைகள் பற்றி மதிப்பீடு செய்ய எந்த உரிமையும் கிடையாது, புலிகள் மீண்டும் புத்துணர்ச்சி பெற ஒட்சிசன் வழங்குவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்றார்.

இந்திய உதவியுடன் யாழ். ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முயற்சி! -அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

daglasdevananada.jpgசுமார் மூன்று தசாப்த காலமாக செயலிழந்துபோயுள்ள யாழ் குடாநாட்டுக்கான ரயில் சேவையை இந்தியவின் உதவியுடன் மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சிகளில்; சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
   
இவ்விடயம் தொடர்பாக அனைத்து உரிய தரப்பினருடனும் கலந்துரையாடி வரும் அமைச்சர் இதற்காக இந்தியாவின் உதவிகளையும் நாடியுள்ளார்.

வெகுவிரைவில் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் இதன் மூலம் யாழ் குடாநாட்டு மக்களும் ஏனைய பிரதேச மக்களும்  பாரிய நன்மைகளை அடையவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்

வவுனியா நகர சபையின் கலாசார மண்டபம் இன்று திறந்து வைக்கப்படும்!

risard.jpgபுதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வவுனியா நகர சபையின் கலாசார மண்டபம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக நகர சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிக்கோட் திட்டத்தின் கீழ் 500 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த கலாசார மண்டபத்தை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்ற அமைச்சருமான றிஷாத் பதியுதீன் திறந்து வைக்கவுள்ளார்.

இந்த வைபவத்தில் வட மாகாண ஆளுநர் டிக்சன் சரத் சந்திரடிலா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாக். விஞ்ஞானி: வீட்டுக் காவலில் இருந்து விடுவிப்பு

world-news.jpgபாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர்கான் நாட்டின் அணுசக்தி தொழில்நுட்பத்தை வடகொரியாவுக்கு ரகசியமாக விற்றதால் 2004-ல் கைது செய்யப்பட்டார்.

தனது குற்றத்தைக் கான், ஒப்புக்கொண்டதால் அப்போதைய அதிபர் முஷாரப், கானுக்கு மன்னிப்பு வழங்கினார். எனினும், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டிருந்தார்.  அவர் நேற்று வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அவர் இனிமேல் நாட்டின் எந்த பகுதிக்கும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாகச் செல்லலாம் என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக, கானின் வழக்கறிஞர் இக்பால் தெரிவித்தார். ஆனால், பாகிஸ்தான் அரசோ, கான் நினைத்தபடி சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாது. அவருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அவரது பாதுகாப்பு நலன் கருதிதான் இந்த நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கட் அணி ஜனாதிபதியுடன் சந்திப்பு!

indian_cricket.jpgஇந்திய கிரிக்கட் அணி வீரர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடடியுள்ளனர்.  கிரிக்கட் சுற்றுலா மேற்கொண்டு தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய அணி வீரர்கள் (04) அலரி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்.

இந்த கிரிக்கட் சுற்றுலாவின்போது இரு அணிகளுக்குமிடையில் 5 ஒரு நாள் சர்வதேச போட்டிகளும் ஒரு ருவன்டி-20 போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வயம்ப சேவை இன்று ஆரம்பம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ‘வயம்ப சேவை’ என்ற பெயரில் பிரா ந்திய ஒலிபரப்பொன்றை இன்று குருநாகலில் இருந்து ஆரம்பிக்கின்றது. 99.6 எப்.எம். அலை வரிசையினூடாக இவ் ஒலிபரப்பு இடம்பெறவுள்ளது.

தகவல் ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பாவின் வேண்டுகோளின் பேரில் இச்சேவை ஆரம்பிக்கப்படுகின்றது. இதன் முதல் ஒலிபரப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று குருநாகலில் இடம்பெறும் பொதுக்கூட்டத்தில் நிகழ்த்தும் உரை ஒலிபரப்பப்படவுள்ளது.

தினமும் அதிகாலை 5 மணிமுதல் இரவு 10 மணி வரை இடம்பெறும் இப்பிராந்திய சேவை குருநாகல்-நீர்கொழும்பு வீதியில் உள்ள பிராந்திய சேவை கட்டிடத்தில் இருந்து ஒலிபரப்பப்படவுள்ளது.

களனி பல்கலைக்கழக மோதலில் 21 பேர் காயம்

kelani_.jpgகளனி பல்கலைக்கழகத்தின் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட மோதலில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 3 மாணவர்களும் 3 பொலிஸாரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டதுடன், சம்பவம் தொடர்பில் 9 மாணவர்களும் இரு விரிவுரையாளர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ரஞ்சித் குணசேகர கூறினார்