அமைச் சர்கள் நியமனத்தில் தவறு நடந்துவிட்டது உண்மையே. இனி இதுபோல் நடக்காது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு வாரமாகிறது.
இந்நிலையில் அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட டாம் டேசஸ் மற்றும் வெள்ளை மாளிகை தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட நான்சி சில்லிபெர், தங்களின் வரிகளை செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் பதவி விலகினர். இந்த விஷயத்தில் தான் தவறு செய்துவிட்டதை ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “டாம் டேசஸ் மற்றும் நான்சி சில்லிபெர் நியமனத்தில் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு செயல்பட்டு விட்டேன். செய்த தவறுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன். சாதாரண மக்களுக்கு ஒரு விதி, பிரபலமானவர்களுக்கு ஒரு விதி என்ற இரு விதமான விதிமுறைகளை எனது நிர்வாகம் கடைபிடிப்பது போன்ற தவறான செய்தி மக்களை சென்றடைய நான் அனுமதிக்க மாட்டேன்” என்றார்.