::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

450 பேர் கிறீன் ஓசியன் கப்பல் மூலமாக புல்மோட்டை வைத்தியசாலைக்கு

taking-to-green-ocean.jpgபுது மாத்தளன் வைத்தியசாலையில் இருந்து போர்க்காயமடைந்தவர்கள் உட்பட்ட நோயாளர்களை அரச கட்டுப்பாட்டில் உள்ள வைத்திய சாலைகளுக்கு ஐ.சி.ஆர்.சியின் மனிதாபிமான சேவையின் மூலம் கொண்டு செல்லுகின்ற நடவடிக்கையில் மேலும் 450 பேர் இன்று புல்மோட்டை வைத்தியசாலைக்கு கிறீன் ஓசியன் கப்பல் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் இருந்து புதுமாத்தளனுக்கு இன்று காலை சென்றடைந்த கிறீன் ஓசியன் கப்பல் மூலமாகவே இந்த நோயாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கப்பல் நாளையும் நோயாளர்களை ஏற்றிச் செல்லும் சேவையில் ஈடுபடும் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடாநாட்டில் தங்கியுள்ள அகதிகள் மாற்று உடைகளின்றி பெரும் அவதி

_mullai_1.jpgயாழ். மாவட்ட நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள வன்னி அகதிகள் மாற்று உடையில்லாமல் அவதியுறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு மாற்று உடைகளை கொண்டுவரும் உடைகளின் பார்சல்களை சிலர் வீசி எறிவதாகவும் அகதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.குறிப்பாக உடைகளை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் அலுவலர்களுக்கு ஒரு சாரம் அல்லது சேட்டும்,பெண்களுக்கு கவுன் ஒன்றை வழங்குவதால், ஒன்றுமேயில்லாமல் உடுத்த உடையுடன் வந்த அகதிகள் பெரும் இன்னல்களை எதிர் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
யாழ். மாவட்ட இந்து அமைப்புக்கள்,வணிகர் கழகங்கள்,பொது அமைப்புக் கள் இந்த அகதிகளுக்கு உணவுப்பொருட்களையே சேகரித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்து வருகின்றனர். இம் மக்கள் உணவுப்பொருட்கள் வேண்டாம்,மனமுகந்து மாற்று உடையாக ஆடைகளை தாராளமாக தந்து உதவுங்கள் என வேண்டுகின்றனர்.

130 மி.மீ. ரக பீரங்கி உபகரணங்கள், கனரக ஆயுதங்கள் பெருமளவு மீட்பு

udaya_nanayakkara_brigediars.jpg முள்ளியவளை, விசுவமடு பிரதேசங்களிலிருந்து 130 மி. மீ. ரக பீரங்கி உபகரணங்கள், கனரக ஆயுதங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களைப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

முழுமையாக கிரீஸ் பூசப்பட்டு பொலித்தீன்களால் சுற்றப்பட்ட நிலையிலேயே புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கனரக ஆயுதங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

முள்ளியவளை, விசுவமடு பிரதேசங்களில் பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாது காப்புப் படையினர் நிலத்தின் கீழ் ஏதோ புதைத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.

130 மி. மீ. ரக பீரங்கி வைக்க பயன்படுத்தும் உபகரணம், தொலைத் தொடர்பு கருவிகள் – 02, கனரக ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் மிக நீள மான குழல்கள் இரண்டு, கைக்குண்டுகள் – 27, ஆர். பி. ஜி. குண்டுகள் – 07 மற்றும் உபகரணங்களை படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

புல்மோட்டை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட 514 பேரில் இரு குழந்தைகள் பலி

முல்லைத்தீவிலிருந்து கிறீன் ஓஷன் கப்பல் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை புல்மோட்டைக்கு கூட்டிவரப்பட்ட 514 பேரில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் கப்பலில் வந்துகொண்டிருந்த போது மரணமானார். மற்றவர் புல்மோட்டை கள வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட போது உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் பெயர்கள் வருமாறு;

1. குகதாஸன் ஒபிசன், (வயது 03), குருநகர், யாழ்ப்பாணம்.

2. தினேஷ்யாழினி, (வயது 03), புதுமாத்தளன் இவர்களையும் சேர்த்து நேற்று புதன்கிழமை காலை 9.00 மணிவரை முல்லைத்தீவில் இருந்து கப்பல் மூலம் புல்மோட்டைக்கு மார்ச் 16 தொடக்கம் ஏப்ரல் 14 வரை கூட்டி வரப்பட்ட 5,456 பேர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்று மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கள நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் 16, 20, 22, 26, 28, 30 ஆகிய திகதிகளிலும் ஏப்ரல் மாதத்தில் 4, 9, 13, 14 ஆகிய திகதிகளிலும் 11 தடவைகள் கப்பல் மூலம் முல்லைத்தீவில் இருந்து காயமடைந்தவர்கள் புல்மோட்டைக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்களில் 27 சதவீதத்தினருக்கே புல்மோட்டை கள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1,806 பேர் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்த முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பதவியா ஆஸ்பத்திரிக்கு 2,918 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். புல்மோட்டை கள வைத்தியசாலையில் 48 ஆண்கள், 48 பெண்கள், 13 சிறுவர்கள், 16 சிறுமிகள் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதவியா ஆஸ்பத்திரியில் 314 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 115 பேர் காயமடைந்தவர்களும் நோயாளர்களும் ஆவர்.

பிரபாகரன் பயன்படுத்திய வீட்டில் ஜனாதிபதி மஹிந்த

mahinda000.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கிளிநொச்சிக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். 30 வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் தலைவர் ஒருவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும். இன்று காலை 6.00 மணிக்கு முதலில் கிளிநொச்சி வைத்தியசாலைக்குச் சென்ற ஜனாதிபதி அங்கு சிகிச்சை பெற்று வரும் படை வீரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

படையினரின் சேமநலன்கள் பற்றிக் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி அவர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். படை வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து புத்தாண்டு விருந்து நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

பின்னர் கிளிநொச்சியிலுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, கிளிநொச்சியின் தற்போதைய நிலைமைகள் மற்றும் படை வீரர்களின் முன்னேற்ற விபரங்கள் என்பன தொடர்பாகவும் அறிந்துகொண்டார். எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளிடமிருந்து படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகனைகள் மற்றும் யுத்த தாங்கிகள் உட்பட ஏனைய ஆயுதங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

கிளிநொச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய வீடு,  அலுவலகம் மற்றும் புலிகளின் சமாதான செயலகம் ஆகியவற்றையும் ஜனாதிபதி நேரில் சென்று பார்வையிட்டார். வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு புலிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கட்டிடங்கள் மற்றும் மாநாட்டு மண்டபங்கள் என்பவற்றுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்தார்.

பின்னர் படை வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி,  பாதுகாப்புப் படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் திடசங்கற்பம் மிக்க சேவைக்காக அவர்களுக்கு தேசத்தின் கௌரவம் உரித்தாகட்டும் எனப் பாராட்டுத் தெரிவித்தார். பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் புலிகளிடம் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி இங்கு கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதியின் இவ்விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன்

British_French_Foreign_Ministersஏப்ரல் 15ல் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் டேவிட் மிலிபான்ட் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பெர்னாட் கொச்னர் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் எல்ரிரிஈ பயங்கரவாதத்தை புறக்கணிப்பதும் ஆயுதங்களைக் கீழே போடுவதும் நிரந்தரத் தீர்வுக்கு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 12ல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இருநாள் தாக்குதல் தவிர்ப்பை வரவேற்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர்கள் அது பொது மக்களைப் பாதுகாப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை என்றும் பாராட்டி உள்ளனர். இத்தாக்குதல் தவிர்ப்பு காலப்பகுதியில் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மோதல் பிரதேசத்தில் இருந்து பெருமளவிலான மக்கள் வெளியேறவில்லை என்பதையும் வெளிவிவகார அமைச்சர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். மக்களை வெளியேறவிடாது புலிகள் பலவந்தமாகத் தடுக்கின்றனர் என்பது மிகவும் தெளிவாகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர்கள் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதை கண்டித்துள்ளனர்.

தாக்குதல் தவிர்ப்பிற்கு சற்று முன் தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த வெளியேற முற்பட்டவர்கள் புலிகளால் சுடப்பட்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக Under-Secretary-General for Humanitarian Affairs  ஜோன் ஹொல்ம்ஸ் இவ்வறிக்கை வெளிவருவதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 5ல் இலங்கை இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் புலிகளின் தலைவர் பலத்த இழப்புகளின் மத்தியில் காப்பாற்றப்பட்டார். அத்தாக்குதலுக்கு மறுநாள் முதல் புலம்பெயர் நாடுகளில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக ஐரோப்பாவில் பிரான்ஸ் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இப்போராட்டங்கள் இரவு பகலாக பத்து நாட்களுக்கம் மேலாக தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. இந்நிலையிலேயே இவ்விரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் வெளியிட்டுள்ள அறிக்கை புலிகள் மீது காட்டமான கண்டனத்தையும் கடுமையான குற்றச்சாட்டையும் வைத்து உள்ளது. புலிக்கொடி மற்றும் பிரபாகரனின் படங்கள் தாங்கிய போராட்டங்களுக்கு வழங்கப்பட்ட பளீர் அறையாகவே இக்கூட்டறிக்கை வெளிவந்து உள்ளது.

ஒரு பயங்கரவாத அமைப்பிலும் பார்க்க ஜனநாயக அரசு பொது மக்களைக் காப்பத்தில் உயர்தரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைசர்கள் டேவிட் மில்லிபான்ட் உம் பெர்னாட் கொச்னர் உம் மகிந்த ராஜபக்ச அரசு புதிய தாக்குதல் தவிர்ப்பை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். எல்ரிரிஈ மக்கள் பாதுகாப்பைத் தேடி வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர். பொது மக்கள் வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கக் கூடிய அளவிற்கு நீண்டதாக தாக்குதல் தவிர்ப்பு இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர். மேலும் அப்பொது மக்கள் மோதல் பகுதிகளை விட்டு வெளியேறும்பட்சத்தில் அவர்களுக்கு பாகாப்பு இருக்கும் என்ற நம்பிக்கையை யுஎன் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இரு தரப்பும் சர்வதேச விதிமுறைகளைக் கடைப்பிடித்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படத்த வேண்டும் என்ற வழமையான கூற்றுக்களை மீளவும் தெரிவித்துள்ளனர்.

யுஎன் னும் ஏனைய சர்வதேச சமூக உறுப்பினர்களும் இவ்விடயத்தில் தீவிரமாக ஈடுபடுவதற்கு பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளான பிரான்ஸ்ம் பிரித்தானியாவும் தொடர்ந்து ஆதரவு நல்கும் என்றும் அவ்விரு அமைச்சர்களும் தெரிவித்து உள்ளனர்.

Joint UK and French statement on Sri Lanka (15/04/2009)

The Foreign Secretary, David Miliband, and the Foreign Minister of France, Bernard Kouchner, issued a joint statement on the situation in Sri Lanka on Wednesday 15 April. They said:

‘We welcomed President Rajapakse’s announcement on 12 April of a pause in the Sri Lankan government’s military offensive as a first step towards the protection of civilian life. But we are deeply concerned that there was no large scale movement of civilians away from the conflict area to safety as we had hoped to see, in the short period allowed for the pause. It is clear that the LTTE have been forcefully preventing civilians from leaving the conflict area and we deplore their determination to use civilians as a human shield. We do of course continue to call on the LTTE to renounce terrorism and lay down their arms as a necessary element for a long-term solution.

We urge President Rajapakse to announce a new pause . Democratic governments are rightly held to higher standards for civilian protection than terrorist organisations. We also urge the LTTE to allow civilians to move to safety. It is vital that a pause in the fighting should be long enough to give civilians the opportunity to leave the conflict area, and for the UN to build confidence amongst the population that they will be safe if they leave. Both sides must abide by their obligations under international humanitarian law and do all they can to protect civilians. This includes giving international humanitarian agencies unimpeded access to those affected by the fighting so that they can deliver adequate supplies of assistance. France and Britain, as two members of the Security Council, continue to support the active engagement by the UN and by other members of the international community on this urgent issue.’

._._._._._.

யுத்த பிரதேசத்திற்குள் சிக்குண்டுள்ள மக்கள் எவ்வாறானதொரு சூழலுக்குள் வாழ்கிறார்கள் என்பதை எந்தவொரு இலங்கைத் தமிழருக்கும் எடுத்து விளக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மரண வாயிலில் தள்ளப்பட்டுள்ள மக்களை எவ்வாறாயினும் மீட்டெடுக்க வேண்டும் என்பதிலும் பார்க்க அவர்களுடைய இந்நிலைக்கு இலங்கை அரசா அல்லது புலிகளா காரணம் என்ற விவாதமும் அதையொட்டிய போராட்டங்களும் பரவலாக நடைபெறுகிறது. பாதுகாப்பு பிரதேசங்களுக்கு வாருங்கள் என்று அழைத்துவிட்டு அப்பிரதேசங்கள் மீது தாக்குதல் நடத்தி வன்னி மக்களை இனப்படுகொலை செய்யும் இந்த அரசு தான் இதற்கு முழுப் பொறுப்பும் என்று புலி ஆதரவு அணி புலம்பெயர் நாடுகள் எங்கும் போராட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது. மறு முனையில் புலிகள் தங்களைப் பாதுகாக்க மக்களை மனிதக் கேடயங்களாக்கி வன்னி மக்களைப் பலியிடுவதால் புலிகளே வன்னி மக்களின் இந்நிலைக்கு முழுப் பொறுப்பும் என அரச அதரவாளர்களும் வாதிடுகின்றனர். இவர்களில் சிலர் அதனையும் தாண்டுகின்றனர். அண்மையில் கொழும்பு சென்ற புலம்பெயர் குழுவில் இடம்பெற்ற ஒருவர் தன்னை வானொலி அறிவிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ‘சில ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை புலிகள் அழிக்கப்பட வேண்டும்’ என்று இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். இவர்கள் தான் புலம்பெயர் ‘ஜனநாயக்கார்களுக்கு’ ‘மாற்றுக் கருத்தாளர்களுக்கு’ குரல்கொடுப்பவர்கள்.

புலிகளின் தலைவர் உள்ளே – வெளியே என்று உறுதிப்படுத்த முடியாத பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. இலங்கை அரச படைகள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசித்துண்டு நிலத்தை நோக்கி நகர்கின்றனர். புலிகளைப் பொறுத்தவரை இன்று மக்களே அவர்களது மண்மூட்டைகள். இலங்கை அரசு புலிகளை புலிகளின் தலைமையை (அதன் தலைமை அப்பிரதேசத்தில் இருந்தால்) அழிப்பதாக இருந்தால் அந்த மக்களில் கணிசமானவர்களைக் கொன்று குவித்தே தனது இலக்கை அடைய முடியும். அதற்கு தாங்கள் தயார் என்பதை அரசு அறிவித்து உள்ளது. செச்சினிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்ட ஆயிரம் வரையான மாணவர்களை விடுவிக்க ரஸ்ய இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை இலங்கை அரசு தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது. அந்த இராணுவ நடவடிக்கையில் பணயக் கைதிகள் 300ற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவ்வாறான ஒரு நடவடிக்கை 150000 பொது மக்கள் அகப்பட்டுள்ள முல்லைத்திவில் மேற்கொள்ள இலங்கை இராணுவம் முயல்கிறது. ஆனால் இவ்விரு நிலமையும் முற்றிலும் வேறுபட்டது. இலங்கை அரசபடைகளின் ஒரே நோக்கம் புலிகளையும் அதன் தலைமையையும் அழிப்பதே. வன்னி மக்களின் பாதுகாப்பு இரண்டாம் பட்சமானதே. இப்போது புலிகளுக்கு உள்ள கடைசி ஆயுதம் வன்னி மக்களே.

இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பல்வேறு வகைப்பட்ட போராட்டங்களில் குதித்து உள்ளனர். அவர்களது போராட்ட வடிவங்கள் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால் இப்போராட்டங்களில் புலிக் கொடியும் பிரபாகரனின் படங்களும் மேலோங்கி நிற்பது இப்போராட்டங்களின் நியாயத்தன்மையை மழுங்கடிக்கின்றன. வன்னி மக்களின் நியாயமான உரிமைகளுக்கான போராட்டத்தின் மீது சேறடிக்கின்றன. புலிக்கொடியும் வே பிரபாகரனின் படங்களும் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை உலகிற்கு வெளிப்படுத்துவனவாக இல்லை. சிங்கக் கொடிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இருக்கும் அதே சமன்பாடு தான் புலிக்கொடிக்கும் வே பிரபாகரனுக்கும் உரியது. இவற்றைக் காவிக்கொண்டு போராட்டம் நடத்த இவையொன்றும் மனிதத்தையும் மனித உரிமையையும் வெளிப்படுத்தவில்லை.

நாங்கள் தீவிரமான தகவல்கள் பரிமாற்ற யுகத்தில் வாழ்கின்றோம். புதினம் படித்து, ஐபிசி கேட்டு, ஜிரிவி பார்த்து விட்டுத்தான் டேவிட் மில்லிபான்ட்டும் பெர்னாட் கொச்னரும் கூட்டறிக்கை விடுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.

புலிகளின் தலைமைக்கு தமிழ் மக்கள் தங்களுடைய முழுமையான ஆதரவை மட்டுமல்ல தங்கள் 25000ற்கும் மேற்பட்ட உறவுகளைப் போராட்டத்திற்காக கொடுத்தனர். புலிகளுடன் தோளோடு தோள் நின்றனர். அப்படி இருந்தும் புலிகளின் தலைமையால் தமிழ் மக்களுடைய எவ்வித உரிமைகளையும் வென்றெடுக்க முடியவில்லை. மாறாக தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த மக்களின் மீது சவாரி செய்தது தான் மிஞ்சியது. இன்று அந்த மக்கள் மிகவும் களைத்து நொந்து போயிருக்க புலிகளின் பெயரில் புலம்பெயர் புலியாதரவுச் சமூகமும் ஒரு தடவை சவாரி செய்ய முனைகிறது.

பாதுகாப்பிற்கு பதுங்கும் குழிகளே புதைகுழிகளாகும் அந்த மண்ணை அவர்களின் பூர்வீக மண் என்று சொல்லி அவர்களுக்கு வாய்கரிசி போட புலம்பெயர் மண்ணில் போராட்டம் அவசியமில்லை. இன்றைய அவசர தேவை அம்மக்களிற்கான உயிர்ப் பாதுகாப்பு.

புலிகளுக்கு தண்ணி காட்டி பொய்சொல்லி பாஸ் எடுத்துவிட்டு பூர்வீக மண்ணைவிட்டு வெளிநாடு வந்தவர்கள் தான் பெரும்பாலான புலம்பெயர்மக்கள். ஆனால் இங்கு வெளிநாடுகளில் இருந்தகொண்டு தாங்கள் விட்டுவந்த பூர்வீக மண்ணை வன்னி மக்களின் தலையில் கட்டும் அரசியலை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை எப்போதும் முதல் எதிரி ஒடுக்குமுறை அரசு. அந்த அரசுக்கு எதிரான தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் மிகப்பெரும் தடையாக உள்ளனர். ஏனைய ஆயுதக் குழுக்கள் அரசுடன் செயற்பட புலிகள் இலங்கை அரசுக்கு எதிராக யுத்தம் புரிகின்றனர். ஆனால் அது தமிழ் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு அல்ல. அதனால் புலிகள் தமிழ் மக்களின் போராட்டத்தை மழுங்கடித்து உள்ளனர். இன்று புலிகளின் கைகளில் உள்ள ஆயுதங்கள் சொந்த மக்களுக்கு எதிராகவும் திரும்பி உள்ளது. ஆயுதங்கள் மீது அதீத காதல் கொண்ட புலிகள் ஆயுதங்களை வைத்திருப்பதம் கைவிடுவதும் நீண்டகாலத்தில் தமிழ் மக்களின் அரசியல் நலனைப் பாதிக்கும் என்றில்லை.

புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை இணைத்தலைமை நாடுகளால் பெப்ரவரி நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னர் இந்தியாவும் தற்போது மீண்டும் இணைத்தலைமை நாடுகளில் அங்கம் பெற்ற பிரான்ஸ்ம் பிரித்தானியாவும் அக்கோரிக்கையை வலியுறுத்தி உள்ளன. இந்நாடுகளின் அரசுகள் தங்களுக்குள் ஒடுக்குமுறையைக் கொண்டுள்ள அரசுகள். இந்நாடுகளில் பல நேட்டோ அணியில் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் இன்றும் ஆக்கிரமிப்பை மேற்கொண்டு உள்ளன. இந்நாடுகள் புலிகள் ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்று கோருவதன் நோக்கம் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி அல்ல என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

அதே சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு செல்வது பொருத்தமாக இருக்கும் என்று தேசம்நெற்ற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். அவர் நேபாளில் மாஓ இஸ்ற்றுக்களின் தந்திரோபாயத்தை புலிகளும் பின்பற்றி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார். ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரான ரவி சுந்தரலிங்கமும் இதே கருத்தைத் தெரிவித்து இருந்தார். மக்களின் பெயரால் ஆயுதம் தூக்கியவர்கள் மக்களுக்காக அவற்றை கைவிடவும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

புலிகளுடைய ஆயுத பலம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க பேச்சவார்த்தைகளில் பேரம் பேசுவதற்கு உதவும் என்ற வாதம் பொதுவாக உள்ள ஒன்று. ஆனால் கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தில் புலிகள் பலத்த இராணுவ வெற்றிகளைச் சாதித்திருந்தனர். பேச்சுவார்த்தைகளுக்கும் சென்றனர். ஆயினும் இந்த இராணுவ பலத்தை அரசியல் வெற்றியாகவோ தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் கருவியாகவோ மாற்றுகின்ற அரசியல் வல்லமை புலிகளின் தலைமையிடம் இருக்கவில்லை. புலிகளின் கைகளில் இருந்த ஆயுதம் குரங்கின் கையில் இருந்த பூமாலைக்கு ஒப்பானது என்பதனை தற்போதைய வன்னி நிலவரம் நிரூபித்து உள்ளது.

எந்த மக்களைக் காப்பாற்றுவோம் என்று புலிகள் உறுதியளித்தார்களோ இன்று அவர்களே இலங்கை இராணுவத்திற்கு எதிராக புலிகளின் அரணாக மாற்றப்பட்டு உள்ளனர். அரணாக இருக்க மறுத்து தப்பிச் செல்பவர்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்கையில் புலிகளின் கையில் இருக்கும் ஆயுதம் தமிழ் மக்களுக்கோ தமிழ் மக்களின் போராட்டத்திற்கோ உதவபோவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. இன்றைய நிலையில் அந்த ஆயுதங்களைக் கைவிடுவது பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்றும். நூற்றுக் கணக்காண போராளிகளை வீணாகப் பலிகொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

யுத்தப் பிராந்தியத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 150000 வரையான மக்களில் பெரும்பாலான இளையவர்கள் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உட்படத்தப்பட்டு யுத்தத்தின் முன்னரங்க நிலைகளில் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. கிளிநொச்சி முல்லைத்தீவு கல்விப் பிரதேசங்களில் உள்ள நாற்பதினாயிரம் வரையான மாணவர்கள் இந்த யுத்த பிராந்தியத்திற்குள் சிக்குண்டு உள்ளனர். மறத்தமிழன் வீரத்தமிழன் அடங்கா மண்ணில் பிறந்த தமிழன் என்று சொல்லி அந்த மாணவ மாணவிகளை விதைக்கின்றோம் என்று சொல்லி முளையிலேயே கருக்கி விடாமல் பாதுகாக்க வேண்டும்.

அதற்காக இந்தக் கொல் கருவிகளை தூக்கியெறிவதில் எந்தத் தயக்கமும் அவசியமில்லை.

இலங்கையில் போர் நடக்கும் பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம்

இலங்கையின் வடகிழக்கே போர் நடைபெறும் பகுதிகளில் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்து வருவதாகவும் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.  மோதல் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்கள் அபாயகரமான நிலையில் இருக்கிறார்கள் என்றும், அங்கு குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாலும் சுத்தமான நீர் அருகி வருவதாலும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்கிறார்கள் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

போர் பிரதேசங்களில் வாழும் பொதுமக்களுக்கான சுகாதார வசதிகள் போதுமான நிலையில் இல்லாததால் அங்கு அங்கு தொற்று நோய் பரவல் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் கொழும்பிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளரான சரசி விஜேரட்ண  தெரிவித்தார். ஆனாலும் இதுவரை தொற்று நோய் பரவல் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் 757 பொதுமக்கள் வருகை

udaya_nanayakkara_brigediars.jpgகடந்த இரண்டு தினங்களில் 757 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். திங்கட்கிழமை 518 பொதுமக்களும் செவ்வாய்க்கிழமை 239 பொதுமக்களுமே மூன்று தடவைகளில் வருகை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை 68,037 ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தை நோக்கி வந்த 136 பொதுமக்களுள் 45 ஆண்கள், 39 பெண்கள், 22 சிறுவர்கள் மற்றும் 20 சிறுமிகள் அடங்குவர். அம்பலவான்பொக்கணை பிரதேசத்தை நோக்கி வந்த 103 பொதுமக்களில் 32 ஆண்கள், 27 பெண்கள், 26 சிறுவர்கள் மற்றும் 18 சிறுமிகளும் அடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

ஏவுகணைகள் கண்டுபிடிப்பு

sam-missile.jpgநந்திக் கடல் பிரதேசத்தில் 53 ஆம் படைப்பிரிவின் வீரர்கள் நேற்று நடத்திய தேடுதலின் போது விமானங்களைத் தாக்கக் கூடிய நான்கு ஏவுகணைகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுக் காலை இவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அப்பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற புலிகள் இவற்றை மறைத்து வைத்து விட்டுச் சென்றுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர். 

48 மணிநேர போர் நிறுத்தத்தையடுத்து மோதல் மீள ஆரம்பம்

army-attack.jpgபுது வருடத்தை முன்னிட்டு விடுக்கப்பட்டிருந்த 48 மணித்தியால போர்நிறுத்தம் முடுவடைந்ததையடுத்து இரு தரப்பும் மோதல்களை மீள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடுதலை புலிகளிற்கு எதிரான மோதலை பாதுகாப்பு படையினர் மீள் ஆரம்பித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம் நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து விடுதலை புலிகளும், இராணுவத்தினரும் பரஸ்பரம் எறிகணை தாக்குதல்களை மேற்கொள்வதாக தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.