::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ கொடையாளிகளிடம் ஐ.நா கோரிக்கை

Wanni_War_Welfare_Campஇலங்கையின் வடக்கே புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மோதல்களற்ற பிரதேசத்திலிருந்து கடந்த நான்கு நாட்களாக வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வந்தடைந்தடைந்திருக்கும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் சிவிலியன்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்ற அவசியமான நிதியுதவியை வழங்கும்படி சர்வதேச கொடையாளிகளை ஐக்கிய நாடுகள் சபை கோரியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இலங்கைக்கான பிரதிநிதி நீல் பூன், வியாழனன்று வவுனியா சென்று அங்கு வந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை பார்வையிட்ட பின்னர் இந்தக்கோரிக்கையை கொழும்பில் வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில், இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வந்தடைந்திருக்கும் சுமார் 80,000ற்கும் அதிகமான சிவிலியன்களை தான் கண்ணுற்றதாகவும், அங்கு பல சிறுவர்களும் பெண்களும் நோய்வாய்ப்பட்டவர்களாக, போசாக்கின்றி காணப்படுவதாகவும், ஆண்கள் உடல்காயங்களுடன் கிழிந்த ஆடைகளுடன் காணப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இடம்பெயர்ந்து வரும் இவர்களது அடிப்படைத் தேவைகளான உணவு, உறையுள், உடை, குடிநீர், சுகாதார மற்றும் வசதிகளை வழங்குவதற்கு நிதி தேவைப்படுவதாகவும், இங்குள்ள சிறுவர்களிற்கான பாடசாலைக் கல்வி வசதியினைச் செய்து கொடுத்து அவர்கள் மத்தியில் சுமூகமான மனநிலையொன்றினைத் தோற்றுவிப்பது மிகவும் முக்கியம் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் இலங்கையில் மோதல் நடைபெறும் பகுதிக்கு மனிதநேய குழு ஒன்றை தாம் அனுப்புவதாக அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய உதவிகளை வழங்க சர்வதேச நாடுகள் முன்வருகை

cvili.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்குத் தேவையான சகல அத்தியாவசிய உதவிகளையும் வழங்குவதற்கு சர்வதேச சமூகம் முன்வந்துள்ளது. இதனடிப்படையில் 40 ஆயிரம் குடும்பங்களுக்கென இந்தியா அனுப்பி வைத்திருக்கும் அவசரகால உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை கிடைக்கப் பெறவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம நேற்றுத் தெரிவித்தார்.

இதேநேரம் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்கவென வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் சித்ராங்கனி வாகிஸ்வரா தலைமையில் விசேட செயலணியொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

புலிகளின் பிடிலியிலிருந்து தப்பி வந்துள்ள மக்கள் விவகாரம் குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

இச்சமயம் அவர் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப, புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்குத் தேவையான சகல அத்தியாவசிய உதவிகளையும் வழங்குவதற்கு இராஜ தந்திரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் ரோகித போகொல்லாகம மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், புலிகளின் பிடியிலிருந்து ஒரு இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தப்பி வந்துள்ளனர். இம்மக்களைப் பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

அதேவேளை இம்மக்களின் தேவைகளையும் நாம் இனம் கண்டுள்ளோம். குடிநீர், அடிப்படை சுகாதார வசதிகள், மருத்துவ உதவிகள், தற்காலிக மற்றும் இடைத்தங்கல் வசதிகள் என்பனவே அத்தேவைகளாகும். இது தொடர்பாக இராஜ தந்திரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப ஐக்கிய அமெரிக்கா நடமாடும் வைத்தியசாலையொன்றை வழங்கவும் முன்வந்துள்ளது. ஐ. நா. நிறுவனங்களும் உதவ முன்வந்துள்ளன.

புலிகளின் பிடியிலிருந்து 48 மணி நேரத்தில் ஒரு இலட்சத்து 2 ஆயிரம் பொதுமக்கள் தப்பி வந்துள்ளார்கள். எஞ்சியுள்ள மக்களும் அடுத்துவரும் சில தினங்களுக்குள் விடுவிக்கப்படுவர், இப்போது புலிகளும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பிலேயே இருக்கின்றனர். இல்லாவிட்டால் அவர்கள் அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்தில் இருந்திருக்க மாட்டார்கள்.

இம்மக்களின் நிலைமை தொடர்பாக கொழும்பிலுள்ள இராஜ தந்திரிகளுக்கு மட்டுமல்லாமல் கனடா வெளிவிவகார அமைச்சருக்கு நேற்று முன்தினமிரவும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு நேற்றும் எடுத்துக் கூறியுள்ளேன். இன்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சருக்குத் தெளிவுபடுத்துவேன் என்றார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் சேகரிப்பு

Wanni_War_Boat_Refugeesவவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புவோர், அவற்றை மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடாகப் பெற்றுக்கொடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சில பரோபகாரிகளும், நிறுவனங்களும் அமைப்புகளும் இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்குவதற்காக புத்தாடைகள், உலருணவுப் பொருள்கள், குடிநீர் போத்தல், பிஸ்கட், பால் மா, தேயிலை, பற்பசை பற் தூரிகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடமும், நிறுவனங்களிடமும் சேகரித்து வருகின்றமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அவற்றை அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் லொறிகள் மூலம் இலவசமாக வவுனியாவுக்குக் கொண்டு சென்று வவுனியா அரச அதிபரிடம் ஒப்படைக்க முடியுமெனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான விபரங்களை 0112431590 மற்றும் 0112431579 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளரையோ அல் லது 0112395513 என்ற இலக்கத்துடன் அமைச்சின் செயலாளர் யூ. எல். எம். ஹலால்தீனையோ தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து 12,000 உணவுப் பொதிகள் விமானத்தில் அனுப்பி வைப்பு

mi-27.jpgபுலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப் பட்டுக்கொண்டிருக்கும் பெருந்தோகையான மக்களுக்கு விநியோகிக்கவென நேற்றைய தினமும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான சமைத்த உணவுப் பொதிகள் கொழும்பிலிருந்து விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான சமைத்த உணவுப் பொதிகள் மற்றும் பொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்ல விமானப் படையின் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்பின் பேரில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக இதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக வும் அவர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களை மீட்டெடுக்கும் பாரிய நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஆரம்பித்ததிலிருந்து விமானப் படையினர் எந்த நேரத்திலும் உதவும் வகையில் முழுமையான தயாரில் இருந்தனர்.

21ம் திகதி 20 ஆயிரம் உலர் உணவு பொதிகளை அவசரமாக விமானம் மூலம் படையினர் எடுத்துச் சென்றனர். அதேபோன்று, 22ம் திகதி விமானப் படைக்குச் சொந்தமான எம். ஐ. 17 ரக விமானத்தின் மூலம் ஆறாயிரத்திற்கும் அதிகமான சமைத்த உணவுப் பொதிகள் விமானப் படைத் தலைமையகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன. நேற்றைய தினம் 12 ஆயிரத்திற்கும் அதிகமான சமைத்த உணவுப் பொதிகள் எடுத்துச் செல்லப்பட்டன.

இரத்மலானை விமான நிலையத்திலிரு ந்து வவுனியா விமானப் படைத் தலைமையகத்தின் ஊடாக கிளிநொச்சிக்கு இந்த உணவுப் பொதிகள் கொண்டு செல்லப்பட்டன என்றும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இருதரப்பினரும் ஒத்துழைத்திருந்தால் இழப்புக்களைத் தவிர்த்திருக்க முடியும். எரிக்சொல்ஹேம்.

eric-solheim.jpgஇலங்கை நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நோர்வே நாட்டின் அமைச்சர் எரிக்சொல்ஹேம் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையில் யுத்தத்தில் ஈடுபடுகின்ற இருதரப்பினரும் யுத்தத்தின் மூலம் தீர்வொன்றைக் காணமுடியும் என நம்பினர். ஆனால் இருதரப்பினரும் ஒத்துழைத்திருந்தால் இன்று இடம்பெற்றுள்ள இழப்புக்களைத் தவிர்த்திருக்க முடியும்.

மேலும் புலிகள், தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறுகின்றனர், அவ்வாறாயின் யுத்த சூனியப் பிதேசத்தில் இருந்து வெளியேற விரும்பும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கி பிரயோகம் செய்வதை தவிர்த்து அவர்களது விருப்பிற்கேற்ப வெளியேற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 20 மில்லியன் நோர்வேஜியன் குரோண்களை இலங்கை அரசிற்கு ஒதுக்கியுள்ளாதாகவும் இருதரப்பினரும் சமாதான மேசைக்குச் சென்று அரசியல் தீர்வொன்றிற்கான வழியைத் திறந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு உதவி வழங்குமாறு சிவசக்தி ஆனந்தன் எம்.பி அவசர வேண்டுகோள்

cvili.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு கடந்த சிலதினங்களில் பெரும் எண்ணிக்கையில் வந்துள்ள மக்களுக்கு உதவி வழங்குமாறு கிராம மட்டத்திலான அமைப்புக்களிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாதுகாப்பு வலயத்திலிருந்து 90 மணித்தியாலங்களில் 103,143 பொதுமக்கள் வருகை

cvili.jpgபுதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை முதல் இன்று காலை வரை 103,143 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் பாதுகாப்பு கருதி வந்து சேர்ந்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை மாலை 6.00 மணிமுதல் நேற்று இரவு வரை 83,429 பொதுமக்கள் இராணுவத்தின் 58 ஆம் படையணியிடம் வந்து சேர்ந்துள்ளனர். இவர்களுள் 31,017 சிறுவர்களும், 27,990 பெண்களும், 24,422 ஆண்களும் அடங்குவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர் பொதுமக்களைப் பாதுகாப்பு வலயத்தில் இருந்து மீட்கும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

cvili.jpg

‘புலிகள் ஆயுதங்களைப் போட்டு சரணடைய வேண்டும்!’ யுஎன் பாதுகாப்புச் சபை

UN_Logoஎல்ரிரிஈ ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக்கொண்டு உள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற உத்தியோகப் பற்றற்ற பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்குப் பின்னரே பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் குளோடி ஹெல்லர் தெரிவித்து உள்ளார். பாதுகாப்பு கவுன்சிலின் 15 நாட்டு உறுப்பினர்கள் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் எல்ரிரிஈ மீது கடுமையான கண்டனத்தை வெளியிட்டு இருப்பதாகவும் எல்ரிரிஈ யுஎன் அணுசரனையுடன் மக்களை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார். எல்ரிரிஈ பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இடம்பெயர்ந்தோரைத் தங்க வைக்க மேலும் 5 நலன்புரி முகாம்கள்

new_welfare.pngபாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நாடி வருவோரைத் தங்கை வைக்க மேலதிகமாக 5 நலன்புரி முகாம்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வவுனியா மாவட்டத்திலுள்ள தான்டிக்குளம் வித்தியாலயம், விபுலானந்த வித்தியாலயம்,  முள்ளியகுளம் வித்தியாலயம்,  வீரபுரம் வித்தியாலயம்,  ஆண்டிக்குளம் வித்தியாலயம் மற்றும் கட்டடப்பம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலேயே இந்த நலன்புரி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்து.

இடம்பெயர்ந்த மக்களைத் தங்க வைப்பதற்காக வவுனியா மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வருகின்ற 15 நலன்புரி நிலையங்களுக்கு மேலதிகமாகவே இந்த 5 நலன்புரி நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு இட்சம் பேர் வெளியேற்றம்: இராணுவம்

puthu.jpg புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு இலட்சம் பேர் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மூன்றாவது நாளாக இன்றையதினம் பாதுகாப்பு வலயத்திலிருந்து 21,000 பேர் வந்திருப்பதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்திருக்கும் மக்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் மற்றும் அத்தியாவசிய உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறி கடல் மற்றும் தரை மார்க்கமாக யாழ் குடாநாட்டுக்குச் சென்றிருக்கும் 3,000ற்கும் அதிகமானவர்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்தவர்களைத் தங்கவைப்பதற்காக முதலாம் தவணைக்காக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை எதிர்வரும் 4ஆம் திகதிவரை மூடிவைத்திருப்பதற்கு யாழ் வலயக் கல்விப் பணிமனை கல்வி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது.