புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்குத் தேவையான சகல அத்தியாவசிய உதவிகளையும் வழங்குவதற்கு சர்வதேச சமூகம் முன்வந்துள்ளது. இதனடிப்படையில் 40 ஆயிரம் குடும்பங்களுக்கென இந்தியா அனுப்பி வைத்திருக்கும் அவசரகால உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை கிடைக்கப் பெறவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம நேற்றுத் தெரிவித்தார்.
இதேநேரம் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்கவென வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் சித்ராங்கனி வாகிஸ்வரா தலைமையில் விசேட செயலணியொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
புலிகளின் பிடிலியிலிருந்து தப்பி வந்துள்ள மக்கள் விவகாரம் குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.
இச்சமயம் அவர் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப, புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்குத் தேவையான சகல அத்தியாவசிய உதவிகளையும் வழங்குவதற்கு இராஜ தந்திரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் ரோகித போகொல்லாகம மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், புலிகளின் பிடியிலிருந்து ஒரு இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தப்பி வந்துள்ளனர். இம்மக்களைப் பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.
அதேவேளை இம்மக்களின் தேவைகளையும் நாம் இனம் கண்டுள்ளோம். குடிநீர், அடிப்படை சுகாதார வசதிகள், மருத்துவ உதவிகள், தற்காலிக மற்றும் இடைத்தங்கல் வசதிகள் என்பனவே அத்தேவைகளாகும். இது தொடர்பாக இராஜ தந்திரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப ஐக்கிய அமெரிக்கா நடமாடும் வைத்தியசாலையொன்றை வழங்கவும் முன்வந்துள்ளது. ஐ. நா. நிறுவனங்களும் உதவ முன்வந்துள்ளன.
புலிகளின் பிடியிலிருந்து 48 மணி நேரத்தில் ஒரு இலட்சத்து 2 ஆயிரம் பொதுமக்கள் தப்பி வந்துள்ளார்கள். எஞ்சியுள்ள மக்களும் அடுத்துவரும் சில தினங்களுக்குள் விடுவிக்கப்படுவர், இப்போது புலிகளும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பிலேயே இருக்கின்றனர். இல்லாவிட்டால் அவர்கள் அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்தில் இருந்திருக்க மாட்டார்கள்.
இம்மக்களின் நிலைமை தொடர்பாக கொழும்பிலுள்ள இராஜ தந்திரிகளுக்கு மட்டுமல்லாமல் கனடா வெளிவிவகார அமைச்சருக்கு நேற்று முன்தினமிரவும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு நேற்றும் எடுத்துக் கூறியுள்ளேன். இன்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சருக்குத் தெளிவுபடுத்துவேன் என்றார்.