(கொவிட்-19) தடுப்பூசி

(கொவிட்-19) தடுப்பூசி

பயணத் தடை மேலும் நீடிப்பு

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையானது, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

 

ஒரு மில்லியன் டோஸ் சினபோர்ம் நாட்டை வந்தடைவு

மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினபோர்ம் (Sinopharm) தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இன்று (02) அதிகாலை 5.00 மணியளவில் UL 869 எனும் விமானம் மூலம் குறித்த தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன என மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

கொவிட்-19 தடுப்பூசிக்கு பொதுமக்கள் பதிவு செய்ய அனுமதிப்பதற்கு இலங்கையில் இணையதளம் !

கொவிட்-19 வைரஸை தடுப்பது பற்றிய தகவல்களை வழங்கவும் தடுப்பூசிக்கு பொதுமக்கள் பதிவு செய்ய அனுமதிப்பதற்குமென ஆரம்ப சுகாதார, தொற்று நோய்கள் கொவிட் கட்டுப்பாட்டு அமைச்சினால் ஓர் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

www.statehealth.gov.lk என்ற தளம் பொதுமக்களுக்கு தகவல்களை வழங்கவென வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளம் இன்று(10.02.-2021), சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் சுதேச மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர், கிராமிய மற்றும் ஆயுர் வேத மருத்துவமனைகள் அபிவிருத்தி, சமூக சுகாதார அமைச்சர் சிசிர ஜயக்கொடி, ஔதட உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமான முல்லையில் ஆரம்பிக்கப்பட்டது.

 

“புதிய வகை கொரோனாவையும் எதிர்கொள்ளும் சக்தி அஸ்ட்ராஸெனெகா தடுப்பு மருந்துக்கு உள்ளது” – புதிய ஆய்வில் உறுதி !

கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த போது புதிய வகை கொரோனா பரவ ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் புதிய வகை கொரோனாவை எதிர்க்கும் செயல்திறனுள்வையாக காணப்படுமா..? என்பது பலருடைய சந்தேகமாக காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் புதிய மாறுபாடு கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ளும் சக்தி அஸ்ட்ராஸெனெகா தடுப்பு மருந்துக்கு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதிய கொரோனா தொற்றுக்கு எதிராக 74 புள்ளி 6 சதவீத செயல் திறனும், சாதாரண தொற்றுக்கு எதிராக 84 புள்ளி 1 சதவீத செயல்திறனும் ஒக்ஸ்போர்ட் நிறுவன தடுப்பூசிக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் தென்னாபிரிக்காவில் காணப்படும் புதிய கொரோனா பரவலுக்கு எதிராக அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி முழுவீச்சில் செயற்படுமா என்று தெளிவான தரவுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகவே உருமாறிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயற்திறனை அதிகரிப்பது குறித்து, தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டு உள்ளதாக, பிரித்தானியாவின் தடுப்பூசி வெளியீட்டுக்கு பொறுப்பான அமைச்சர் நதிம் ஸஹாவி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க உதவிகளை வழங்க தயார்” – ரஷ்யா அறிவிப்பு !

ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பதற்கு தேவையான உதவிகளை வழங்க முடியும் என ரஷ்யா, இலங்கையிடம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா தூதவர் அந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளதாக கொரோனா ஒழிப்பு, ஆரம்ப சுகாதாரம் தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய ஔடத கூட்டுத்தாபனம் தற்போது ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2 மில்லியன் பைஸர் பயோ என்டெக் கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி – 3 ஆம் கட்ட பரிசோதனை முடியாது நடைமுறைக்கு வந்ததாக பலரும் குற்றச்சாட்டு !

ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவி‌ஷீல்டு மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று முன்தினம்(03.01.2021) ஒப்புதல் அளித்து உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வருகின்றன.
இதில் கோவி‌ஷீல்டு தடுப்பூசியை தயாரிக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம், தற்போது கோவி‌ஷீல்டு தடுப்பூசியின் விலையை வெளியிட்டு உள்ளது.
இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா கூறுகையில், ‘தடுப்பூசியின் விலை மலிவாகவும், அனைவரும் வாங்கும் வகையிலும் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எனவே இந்திய அரசு 3 முதல் 4 அமெரிக்க டாலர் (இந்திய ரூ.219-292) என்ற மலிவு விலைக்கு தடுப்பூசியை பெறும். மிக அதிக அளவில் வாங்குவதால் இந்த விலைக்கு கொடுக்கப்படும்’ என்று கூறினார்.
இந்த தடுப்பூசியை பொறுத்தவரை இந்தியாவுக்கு முதலிலும், அடுத்ததாக தடுப்பூசி சர்வதேச கூட்டணி நாடுகளுக்கும் வழங்கப்படும் என்று கூறிய பூனவல்லா, அதைத் தொடர்ந்தே தனியார் சந்தைக்கு அனுப்பப்படும் எனவும், அங்கு இரு மடங்கு விலையில் விற்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்துக்குள் 10 கோடி டோஸ்கள் தயாரிக்கப்படும் எனவும், ஏப்ரலுக்குள் இது இரட்டிப்பாகும் எனவும் பூனவல்லா தெரிவித்தார். அதேநேரம் மத்திய அரசு ஜூலை மாதத்துக்குள் 30 கோடி டோஸ்கள் கேட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் “கோவேக்சின் தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை நிறைவு செய்யவில்லை. எனவே, முன்கூட்டியே அனுமதி கொடுத்திருப்பது ஆபத்தானது.

3 ஆம் கட்ட பரிசோதனை முடியும் வரை கோவேக்சின் தடுப்பூசியை  தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தனை  வலியுறுத்துகிறேன். அதுவரை,கோவிஷீல்டு தடுப்பு மருந்தை பயன்படுத்தலாம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் விமர்சித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் திடீர் மரணம் !

கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை பல்வேறு நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு முதல் கட்டமாக 2 லட்சத்து 50 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வழங்குகிறது. மொத்தம் 30 லட்சம் டோஸ் மருந்தை வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

ஜனவரி 4-ந்திகதி முதல் சுவிசர்லாந்து முழுவதும் தேவைப்படுவோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதன் முன்னோடியாக சுவிட்சர்லாந்தின் லூசரன் மண்டலத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு முதியவர், ஊசி போட்ட சிலமணி நேரத்தில் மரணம் அடைந்தார். தடுப்பூசி போட்ட பிறகு அடிவயிற்றிலும், சிறுநீர் குழாய் பகுதியிலும் வலி இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் திடீரென்று மரணம் அடைந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் முதியவர் மரணத்துக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்று சுவிட்சர்லாந்து நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

91 வயதான அந்த முதியவர் ஏற்கனவே மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார் அவர் இயற்கையாகவே மரணம் அடைந்து இருக்கிறார். கொரோனா தடுப்பு மருந்துக்கும் அவரது மரணத்துக்கும் தொடர்பு இல்லை என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்ப்பட்டோர் தொகை இங்கிலாந்தில் 06 இலட்சத்தை தாண்டியது !

இங்கிலாந்தில் இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை பொது மக்களுக்கு செலுத்த முதன் முதலாக இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியது. அதன்படி பைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் இங்கிலாந்து மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்கியுள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 8 ஆம் தேதியில் இருந்து 20 ஆம் தேதி வரை 6 லட்சத்து 16 ஆயிரத்து 933 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பைசர் நிறுவனத்திடம் இருந்து மொத்தம் 40 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வாங்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட மையங்களில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் அண்மையில் கண்டறியப்பட்டது. இதனால் அங்கு ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும் ஐரோப்பிய நாடுகளுடனான விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், இங்கிலாந்தில் வர்த்தம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஐரோப்பிய யூனியன் அனுமதி !

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் உள்பட பல நாடுகளிடம் பைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது.

இதையடுத்து, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு அனுமதியளித்ததையடுத்து அந்நாடுகளில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய யூனியனில் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிப்பது தொடர்பாக ஐரோப்பிய யூனியனியன் கமிஷன் நேற்று ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனை கூட்டத்தில் ஐரோப்பிய யூனியனில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கோண்டுவர அனுமதி வழங்கப்பட்டது.

இதன் மூலம் ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுக்கும் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர் டிசம்பர் 27-ம் திகதி முதல் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. ஒரே நாளில் ஐரோப்பிய நாடுகளில் பைசர் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள சம்பவம் வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முக்கியத்துவம் பெறுகிறது.

“இலங்கை கொரோனா தடுப்பூசியினை பெறுவதற்கான உதவிகளை நாம் செய்வோம் ” – ஐ.நா பிரதமருக்கு உறுதி !

உலக நாடுகள் அனைத்திலும் இன்றைய திகதிக்கு மிகப்பெரிய பேசுபொருளாகியிருப்பது கொரோனாவுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பானதாகவேயுள்ளது. இந்தநிலையில் இலங்கை அரசும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுதல், விநியோகம் மற்றும் பாதுகாப்பான நிர்வாகத்திற்காக இலங்கைக்கு உதவிகளை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே, ஐ.நா தூதுக்குழு குறித்த உறுதிப்பாட்டினை வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ரசியா பெண்ட்சே மற்றும் யுனிசெப் அமைப்பிற்கான இலங்கை பிரதிநிதி ஆகியோர் பிரதமரை இன்று சந்தித்தனர்.

ரஸ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்கை  ( Sputnik V ) இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து தீர்மானிப்பதற்காக அடுத்த வாரம் ரஸ்ய தூதுவருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்னதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.