ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

அரிசி பதுக்கினால் அரிசி ஆலைகள் இராணுவவசமாகும் அரிசி மாபியாக்களுக்கு எச்சரிக்கை !

அரிசி பதுக்கினால் அரிசி ஆலைகள் இராணுவவசமாகும் அரிசி மாபியாக்களுக்கு எச்சரிக்கை !

ஜனவரி 21 தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர அரசியை பதுக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை நீக்க அஅரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்நிலையில் அரசாங்க அறிவுறுத்தல்களை பின்பற்றாத போது அரிசி அறுவடையாகி களஞ்சியத்திற்கு கொண்டு செல்லப்படும் வரை இராணுவ கண்காணிப்பு போட வேண்டி வரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி அனுரா.

இனிமேல் அரிசிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை விட ஒரு சதம் கூட அதிகமாக விற்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் கடும்தொனியில் எச்சரித்தார் ஜனாதிபதி அநுர.

நாட்டில் அவசரநிலை காலங்களில் இராணுவ உதவி பெறப்படுவது வழமைதான் என்கிற போதும் அரிசிப் பிரச்சினையை தீர்க்க காத்திரமான வேறு பல பொறிமுறைகள், கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகளையும் பெறலாம் அல்லது முன்னெடுக்கலாம்.

ஜனாதிபதி அனுர குமார இலஞ்சத்துக்கு துணை போகின்றார் – சுமந்திரன் குற்றச்சாட்டு !

ஜனாதிபதி அனுர குமார இலஞ்சத்துக்கு துணை போகின்றார் – சுமந்திரன் குற்றச்சாட்டு !

பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன் ‘’நாட்டிலே அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளது. அதிகரித்த மதுபான பாவனையால் நேற்றும் பருத்தித்துறையில் வாள்வெட்டு, கத்திக் குத்து இடம்பெற்றுள்ளது. மன்னாரில் நீதிமன்றின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான நிலை நாட்டிற்கு நல்லதல்ல’’ என தெரிவித்தார்.

முடிந்தால் பார் லைசன்ஸ் விவகாரத்தை உடன் வெளியிடுங்கள் இல்லையேல் நீங்களும் ஊழல்வாதிகள் தான் எனக் குறிப்பிட்டார் எம் ஏ சுமந்திரன். பா உ சிறிதரனுக்கு ஆப்பு வைப்பதற்கு சுமந்திரன் ஆதாரம் கோருகின்றார் என சில தமிழ் அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

கஜேந்திரகுமாருக்கும் அறளைபெயருகிறது: சங்கரி ஐயாவுக்கு போட்டியாக கடிதம் எழுதுகிறார்!

கஜேந்திரகுமாருக்கும் அறளைபெயருகிறது: சங்கரி ஐயாவுக்கு போட்டியாக கடிதம் எழுதுகிறார்!
தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்துமாறு கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணி சங்கரி ஐயா தான் கடிதம் எழுதுவதில் வல்லவர். அவருக்குப் போட்டியாக கஜேந்திர குமாரும் கடித எழுத ஆரம்பித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அனுரவுடன் எவ்வித ஆக்கபூர்வமான பேச்சுகளையும் இதுவரை முன்னெடுக்காத நிலையில், இந்தக் கடிதத்தை கஜேந்திரகுமார் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், இலங்கை ஒற்றையாட்சிக் கருத்தைக் கைவிட்டு தமிழ் மக்களை உள்ளடக்கிய பெடரல் அரசியலமைப்பை தயாரிக்க, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்துமாறு மோடியை அவர் கோரியுள்ளார்..
கடந்த எழுபத்தைந்து வருடங்களில் இலங்கையின் கொள்கை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க தவறியமையே நாடு இவ்வளவு கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வீழ்ச்சியை எதிர்கொள்வதற்கு காரணம் என அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தை தன்னுடைய நலன் தவிர வேறு எதற்காகவும் இந்தியா கையிலெடுக்கப் போவது இல்லை. தமிழர்களுக்கான தீர்வு தொடர்பில் இலங்கை அரசின் மீது அது எவ்வித அழுத்தத்தையும் பிரயோகிக்கப்போவதும் இல்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது ஆட்சியிலுள்ளவர்களுடன் தமிழ்ப் பிரதிநிதிகள் ஆக்கபூர்வமாக தொடர் பேச்சுக்களை முன்னெடுத்து புரிந்துணர்வின் அடிப்படையில் அணுகப்பட வேண்டிய ஒன்று. பேசிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தயாராகவுள்ள தலைவராக அனுரகுமார திசநாயக்க காணப்படுகின்றார். ஆனால் அதைச் சரிவர பயன்படுத்தாது வெறும் கண்துடைப்புக்காக இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.
தமிழர் விவகாரத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தம்முடைய அரசியல் இருப்புக்காகவே பயன்படுத்துகின்றனர் என்பது மீண்டும் இந்த சம்பவத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்களுடைய அரசியல் சாயம் வெழுத்து வாக்கு வங்கி கவிழ்ந்து ஒரு ஆசனம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னணியினர் தொடர்ந்தும் பூகோள அரசியல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றினால் அடுத்த ஆசனமும் பறிபோகும் என்கின்றனர் அரசியல் அவதானிகள். இந்தியாவை வைத்து இலங்கைக்கு குட்டலாம் என்ற போர்மிலா காலாவதியாகிப் போனது காலாவாதியாகிப் போய்க்கொண்டிருக்கின்ற பொன்னம்பலம் சஜேந்திரகுமாருக்குப் புரியவில்லையா அல்லது அவருக்கும் அறளைபெயருகிறதா? என்கிறார் ஆய்வாளர் மாவடி ஏஆர் சிறிதரன்.

இந்திய பிரதமருடனான சந்திப்பில் மீனவர் பிரச்சினைக்கு முதன்மை இடம் வழங்கிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!

இந்திய பிரதமருடனான சந்திப்பில் மீனவர் பிரச்சினைக்கு முதன்மை இடம் வழங்கிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!

இந்திய மீன்பிடி படகுகளினாலும் , தமிழக மீனவர்களின் அத்துமீறிய நுழைவினாலும் இலங்கையின் வடக்கு வாழ் மீனவர்கள் கடும் துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இலங்கையின் கடல் பரப்பில் ரோலர் இழுவைப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் அளவுக்கதிகமாக அதிகரித்துள்ளதையும் அவதானிக்க முடிகிறது. தமிழகத்தில் இருந்து இலங்கைக்குள் நுழையும் கப்பல்கள் தனித்து மீன்பிடி என்பதற்கு அப்பால் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை இலங்கைக்குள் கொண்டு வந்து கொட்டுவதையும் அவதானிக்க முடிகிறது. இந்த நிலையில் அண்மையில் தேசம் திரை நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இடதுசாரி செயற்பாட்டாளர் நல்லதம்பி ஜெயபாலன் ” வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ்தேசியம் பேசும் எந்த தலைமைகளுக்கும் அக்கறை இருந்தது இல்லை. இந்தியாவின் அரசியல் தலைமைகளை சந்திக்கும் போது கூட எந்த பயனுமற்ற விடயங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட தமிழ்தேசியம் பேசும் தலைவர்கள் மீனவர் பிரச்சினைக்கு கொடுத்தது இல்லை. இதற்கான காரணம் தமிழ்தேசியம் என்பது இந்தியாவின் நலன்களுக்கானது என்பதே காரணம்”  என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக கடல்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்ட இராமலிங்கம் சந்திரசேகர் மீனவர்களுடன் நேரடியான சந்திப்புக்களை நடாத்தியதுடன் இந்தியாவுடான பேச்சு வார்த்தைகளில் மீனவர்கள் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் கட்டாய இடத்தை பிடிக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இந்தியாவுக்கு பயணமாகியுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் “இந்தியா, இலங்கை இடையே நிலவி வரும் மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார் .

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பை அடுத்து ஊடகங்களிடம் பேசிய அனுர குமார திசாநாயக்க, இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என பிரதமர் மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். இந்தியா, இலங்கை இடையே நிலவி வரும் மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம். கடல் வளம் காக்க சுருக்குமடி வலை பயன்படுத்துவதை மீனவர்கள் கைவிட வேண்டும். சுருக்குமடிவலை பயன்படுத்துவதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும், ஆகவே சுருக்குமடிவலை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு அனுமதிக்காது எனவும் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதி அளித்துள்ளார்.

 

 

ஒருவரின் தகுதி தராதரம் எதுவாக இருந்தாலும், தவறு செய்யும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

“ஒருவரின் தகுதி தராதரம் எதுவாக இருந்தாலும், தவறு செய்யும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அரசாங்க ஊடகப் பிரதானிகளுடன் இன்று (13) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

“ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்நாட்டு மக்கள் வெவ்வேறு அரசாங்கங்களை உருவாக்கியுள்ளனர். வெவ்வேறு அரசாங்கங்களை கவித்துள்ளனர்.”

“வரலாற்றில் முதன்முறையாக, இந்நாட்டு மக்கள் எமக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இரண்டு சந்தர்ப்பங்களில் வழங்கிய வரலாற்று மக்கள் ஆணையின் பொருள் மற்றும் சாரம்சம் பற்றிய விரிவான வாசிப்பை இம்முறை நாங்கள் பெற்றுள்ளோம்.”

தரமான மற்றும் நிலையான நாடு உருவாகும் என்ற நம்பிக்கையுடன் இந் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை உருவாக்கினர்.

“அந்த தனித்துவமான நம்பிக்கைக்கு தீங்கு விளைவிக்க எங்கள் அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.””சுருக்கமாக கூற வேண்டும் என்றால்,”

“நாட்டில் தவறு செய்யும் எவரையும் எக்காரணம் கொண்டும் பாதுகாக்க எமது அரசாங்கம் தயாரில்லை. நாட்டில் மட்டுமல்ல, எமது அரசாங்கத்திலும் எவரேனும் எந்த மட்டத்திலும் தவறு செய்தால் அந்தத் தவறுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். ”

“சரியான நேரத்தில் இது தொடர்பாக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்.”

7 தசாப்தங்களாக ஏமாற்றப்பட்ட மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தி இந்த நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு தமது அரசாங்கம் நிபந்தனையற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார மற்றும் அரச ஊடகப் பிரதானிகளின் பங்குபற்றுதலுடன் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

’தொடுக்கப்பட்ட ஊழல் வழக்குகள் மீளப்பெறப்பட்டது ஏன்?’’ ஜனாதிபதி அனுர

‘’தொடுக்கப்பட்ட ஊழல் வழக்குகள் மீளப்பெறப்பட்டது ஏன்?’’ ஜனாதிபதி அனுர

69 தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்குகளில் 40 வழக்குகள் மீளப்பெறப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஜனாதிபதி அனுரா. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் டிசம்பர் 9ஆம் திகதி நடைபெற்ற 2024 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இக்கேள்வியை எழுப்பினார். 2013 சர்வதேச சுட்டெண்ணில் 79 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2023 ஆம் ஆண்டளவில் 115 வது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் வழக்குகள் மீளப் பெறப்பட்டமைக்கான காரணம் மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். விசாரணை அதிகாரிகள் வழக்குகளில் சாட்சிகளாகாதது ஏன் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஒரு வருடமொன்றில் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு கிராம உத்தியோகஸ்தர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் சட்டம் சிலந்தி வலையைப் போன்று செயற்படுவதாக மக்கள் கருதுகின்றனர். அந்த வலையில் சிறிய விலங்குகள் சிக்குகின்றன. பெரிய விலங்குகள் சிலந்தி வலையை சேதமாக்கி தப்பிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டிடங்களை நிர்மாணிப்பதனால் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தியடையாது – டிஜிட்டல் அமைச்சராக பொறுப்பேற்றார் ஜனாதிபதி அனுர!

கட்டிடங்களை நிர்மாணிப்பதனால் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தியடையாது – டிஜிட்டல் அமைச்சராக பொறுப்பேற்றார் ஜனாதிபதி அனுர!

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார திட்டங்கள் வெறுமனே ஐந்தாண்டு திட்டங்களை கொண்டவை அல்ல மாறாக அது இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கான பயணம் எனவும் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பில் தங்களுடைய அதிக பார்வையும் கவனமும் இன்னமும் ஆழமாக இருக்கும் என தேசம் நெட் நேர்காணலில் தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பின் வடக்கு மாகாண இணைப்பாளர் அருள் கோகிலன் தெரிவித்திருந்தார். பாரம்பரிய பொருளாதார செயல்முறைகளை டிஜிட்டல்  தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மறுசீரமைப்பதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இணையவெளி தளங்களை பயன்படுத்துவதை உறுதி செய்வதுடன் இலங்கையின் உற்பத்தி துறையை விருத்தி செய்யும் போது குறித்த உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய சந்தைகளை உருவாக்கி, ஏற்றுமதியை உயர்த்த நாம் எதிர்பார்ப்பதாகவும் அருள் கோகிலன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அண்மையில் 05.12.2024 அன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க டிஜிட்டல் அமைச்சராக பொறுப்பேற்றிருந்ததானது இலங்கையை  டிஜிட்டல் துறை மற்றும் அதனூடாக டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு தேசிய மக்கள் சக்தி கொடுக்கும் முக்கியத்துவத்தை தெளிவாக வெளிக்காட்டியிருந்தது. டிஜிட்டல் அமைச்சை  பொறுப்பேற்றதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அரசியல் அதிகாரத்தினதும் டிஜிட்டல் தொழிநுட்ப நிபுணர்களினதும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக இருக்கும் நிலையில் , நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டிற்கு அனைத்து தொழில் வல்லுநர்களினதும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும், வறுமையை ஒழித்தல், சமூக மனப்பாங்குகளை மாற்றுதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் என்பன அரசாங்கத்தின் பிரதான இலக்குகளாகும். கட்டிடங்களை நிர்மாணிப்பதனால் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தியடையாது, இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நிர்மாணத்துறை அமைச்சொன்று இருந்ததை நினைவு கூர்ந்ததோடு, தற்போது ஒவ்வொரு அமைச்சும் நிர்மாணப் பணிகளையே மேற்கொண்டு வருவதாகவும்  தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை கேள்விக்குட்படுத்தவோ அல்லது விமர்சிக்கவோ ஊடகங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

அரசாங்கத்தை கேள்விக்குட்படுத்தவோ அல்லது விமர்சிக்கவோ ஊடகங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

அரசியல், பொருளாதார விடயங்கள் தொடர்பில் எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கேள்விக்குட்படுத்தவோ அல்லது விமர்சிக்கவோ ஊடகங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. எனினும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான போலித் தகவல்களை வெளியிட வேண்டாமென இலத்திரனியல் ஊடக நிறுவன பிரதானிகளிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்தார்.

இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன்  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். மிகச்சிறந்த அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்பி அனைத்து பிரஜைகளுக்கும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்தும் பணியில், ஊடகங்களை வெளிநபர்களாக அன்றி பங்குதாரர்களாகவே, தாம் கருதுவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

சிறந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அதற்காகவே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துள்ளதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இணையுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பல தசாப்த காலங்கள் நாடு யுத்தத்துக்கு முகம் கொடுத்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இனவாதத்தை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை எனவும் தெரிவித்தார்.

மக்களால் வெறுக்கப்படும் நாடாளுமன்றம் மக்களை ஆள்வதற்கு தகுதியற்றது. – கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு ஆரம்பமாகியிருக்கும் நிலையில், ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகை தந்து தனது கொள்கைப் பிரகடன உரையை உரையாற்றினார்.

மேலும்,சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 23 ஆம் திகதி கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தமது கொள்கை உரையில் பேசிய ஜனாதிபதி

மக்களுக்கு நாட்டின் நீதித்துறை மீது அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை கட்டியெழுப்பப்படும்.

இதற்காக யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லாமல் அனைவரும் சுதந்திரமாக செயற்படும் வகையில் நீதித்துறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

நாட்டில் யாரும் நீதிக்கு மேன்மையானவர்களாக இருக்க மாட்டார்கள்.நாட்டின் அரச சேவை தொடர்பாக மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள்.

தற்போதைய அரசாங்கமே அதிகப்படியான அரச சேசையாளர்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமாகும். அந்தவகையில், திருப்திகரமான அரச சேவைத்துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் மக்கள் பெரும்பான்மையான ஆணையை வழங்கிய அரசாங்கம் என்ற அடிப்படையில், நாடாளுமன்றின் கௌரவத்தை பேணுவது முதலாவது கடமையாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், குறை நிரப்பு பிரேரணை எதிர்வரும் மாதம் சமர்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

அத்துடன், வரவு – செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்றும், வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக விசேட கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை (23) கைச்சாத்திடப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

தேர்தலில் ஆதரவளித்த, ஆதரவளிக்காத அனைவரையும் இலங்கை பிரஜைகள் என்றே நான் கருதுவேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று ஜனாதிபதி கூறினார்.

 

தற்சமயம் நாடாளுமன்றத்தில் ஆற்றி வரும் தமது கொள்கைப் பிரகடன உரையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் தனியொரு கட்சி நாட்டை ஆள வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

 

எனவே, அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், அதற்கு பொறுப்புக் கூறுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

மேலும், இந்த தருணத்தில் இருந்து ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் எனவும், இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை எனவும் இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

 

மக்களால் வெறுக்கப்படும் நாடாளுமன்றம் மக்களை ஆள்வதற்கு தகுதியற்றது. ஆகவே மக்களால் விமர்சிக்கப்படும் நாடாளுமன்றம் தோற்றம் பெற இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் மக்களுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும் என்றும் இந்த நாடாளுமன்றம் மக்களின் பரிசோதனையில் சித்தி பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டின் சட்டத்துக்கு அடிபணிய வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றங்களை முறையாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையும் – ஜனாதிபதி அனுர குமார உறுதி !

புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாகி சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகே புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணி குறித்துக் கவனம் செலுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

அவர் மேலும் தெரிவித்ததாவது:

‘எமது நாட்டில் இதுவரை இயற்றப்பட்டுள்ள அரசியலமைப்புகள் தொடர்பில் மக்களின் அனுமதி பெறப்படவில்லை. சோல்பரி அரசமைப்பு, 1972ஆம் ஆண்டின் அரசமைப்பு மற்றும் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு என்பன மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. மக்களுக்குரிய அடிப்படைச் சட்டங்களே அரசமைப்பாகும். எனவே, நாம் நிச்சயம் மக்களிடம் அனுமதி கோருவோம். இது மக்களுக்குரிய ஜனநாயக உரிமையாகும்.

 

 

புதிய அரசமைப்பை இயற்றும்போது 2015ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட அரசமைப்பு பணியில் உள்ள யோசனைகள் கருத்திற்கொள்ளப்படும். புதிதாக யோசனைகள் உள்வாங்கப்படும். கோத்தாபய ஆட்சிக் காலத்திலும் குழுவொன்று அமைக்கப்பட்டது, அது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து, சாதகமான, மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய விடயங்களை மையப்படுத்திய வகையில் புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்படும்.

 

 

புதிய நாடாளுமன்றத்தில் முதல் மூன்று, நான்கு மாதங்களில் அரசமைப்பு தொடர்பில் குறைந்தளவிலேயே அவதானம் செலுத்தப்படும். பொருளாதாரம் பற்றியே கூடுதல் கவனம் செலுத்தப்படும். அதன்பிறகு அரசியலமைப்புத் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்’ – என்றார்.