கட்டிடங்களை நிர்மாணிப்பதனால் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தியடையாது – டிஜிட்டல் அமைச்சராக பொறுப்பேற்றார் ஜனாதிபதி அனுர!
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார திட்டங்கள் வெறுமனே ஐந்தாண்டு திட்டங்களை கொண்டவை அல்ல மாறாக அது இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கான பயணம் எனவும் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பில் தங்களுடைய அதிக பார்வையும் கவனமும் இன்னமும் ஆழமாக இருக்கும் என தேசம் நெட் நேர்காணலில் தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பின் வடக்கு மாகாண இணைப்பாளர் அருள் கோகிலன் தெரிவித்திருந்தார். பாரம்பரிய பொருளாதார செயல்முறைகளை டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மறுசீரமைப்பதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இணையவெளி தளங்களை பயன்படுத்துவதை உறுதி செய்வதுடன் இலங்கையின் உற்பத்தி துறையை விருத்தி செய்யும் போது குறித்த உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய சந்தைகளை உருவாக்கி, ஏற்றுமதியை உயர்த்த நாம் எதிர்பார்ப்பதாகவும் அருள் கோகிலன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் 05.12.2024 அன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க டிஜிட்டல் அமைச்சராக பொறுப்பேற்றிருந்ததானது இலங்கையை டிஜிட்டல் துறை மற்றும் அதனூடாக டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு தேசிய மக்கள் சக்தி கொடுக்கும் முக்கியத்துவத்தை தெளிவாக வெளிக்காட்டியிருந்தது. டிஜிட்டல் அமைச்சை பொறுப்பேற்றதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அரசியல் அதிகாரத்தினதும் டிஜிட்டல் தொழிநுட்ப நிபுணர்களினதும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக இருக்கும் நிலையில் , நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டிற்கு அனைத்து தொழில் வல்லுநர்களினதும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும், வறுமையை ஒழித்தல், சமூக மனப்பாங்குகளை மாற்றுதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் என்பன அரசாங்கத்தின் பிரதான இலக்குகளாகும். கட்டிடங்களை நிர்மாணிப்பதனால் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தியடையாது, இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நிர்மாணத்துறை அமைச்சொன்று இருந்ததை நினைவு கூர்ந்ததோடு, தற்போது ஒவ்வொரு அமைச்சும் நிர்மாணப் பணிகளையே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.