‘’தொடுக்கப்பட்ட ஊழல் வழக்குகள் மீளப்பெறப்பட்டது ஏன்?’’ ஜனாதிபதி அனுர
69 தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்குகளில் 40 வழக்குகள் மீளப்பெறப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஜனாதிபதி அனுரா. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் டிசம்பர் 9ஆம் திகதி நடைபெற்ற 2024 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இக்கேள்வியை எழுப்பினார். 2013 சர்வதேச சுட்டெண்ணில் 79 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2023 ஆம் ஆண்டளவில் 115 வது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழல் வழக்குகள் மீளப் பெறப்பட்டமைக்கான காரணம் மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். விசாரணை அதிகாரிகள் வழக்குகளில் சாட்சிகளாகாதது ஏன் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஒரு வருடமொன்றில் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு கிராம உத்தியோகஸ்தர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் சட்டம் சிலந்தி வலையைப் போன்று செயற்படுவதாக மக்கள் கருதுகின்றனர். அந்த வலையில் சிறிய விலங்குகள் சிக்குகின்றன. பெரிய விலங்குகள் சிலந்தி வலையை சேதமாக்கி தப்பிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.