படைகளின் எண்ணிக்கை 30 வீதமாகக் குறைக்கப்படும் ! ஜனாதிபதி அனுரா; வடக்கு கிழக்கில் காணிகள், பாதைகள் விடுவிக்கப்படும் !
இலங்கை பாதுகாப்புப் படைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைக்கப்படும், வடக்கு கிழக்கில் உள்ள காணிகள் விடுவிக்கப்டும், பாதைகள் திறக்கப்படும் என்பதை இவ்வாண்டு முற்பகுதியில் தேசம்நெற் சுட்டிக்காட்டியிருந்தது. இதனை ஜனாதிபதி அனுரா உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விஸ்தரிக்கப்பட்ட கடன் வசதிகள் ஊடாக ஒத்துழைப்பு வழங்கும் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களின் மூன்றாவது மீளாய்வு அறிக்கையை இன்றைய தினம் குறித்த நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். நேற்று மாலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்து உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார். இதனூடாக சாதகமான பிரதிபலன்கள் கிடைக்குமென தான் நம்புவதாகவும் ஸ்திரமான பொருளாதாரத்துடன் நாடு பயணிப்பதாகவும் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடிகள் ஊடாக அதிகாரத்தை கட்டியெழுப்பு நீங்கள் சிந்திப்பதாயின் அது இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்புக்கு பல காரணங்கள் அடிப்படையாக இருந்தன. பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்தை கவிழ்ப்பதென்பது கனவு மாத்திரமே. அது ஒருபோதும் நிறைவேறாது என்றார்.
இதேவேளை, பொருளாதாரம் இப்போது நிலையாக உள்ளது. பயங்கரவாதமும் இனவாதமும் மீண்டும் தலைதூக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை இராணுவத்தின் பணியாளர்கள் 100,000 ஆகவும், இலங்கை கடற்படை 40,000 ஆகவும், இலங்கை விமானப்படை 18,000 ஆகவும் குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரச பணியாளர்களை 50 வீதமாகக் குறைக்க வேண்டும் எனச் சிபாரிசு செய்துள்ளது. இந்த அரச பணியாளர்களில் படையினரும் கணிசமான பங்கினர். இலங்கையின் சனத்தொகைக்கு இலங்கையில் உள்ள படையினரின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த அடிப்படையில் படைகளை 1,00,000 கக் குறைக்க வேண்டும் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் தேசிய மக்கள் சக்தியாலும் முன்னெடுக்கபடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் அடிப்படையிலேயே வடக்கு கிழக்கில் இராணுவத்தின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்து வருகின்றது. பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் – பொதுத் தேர்தலுக்கு முன் வடக்கு கிழக்கில் படையினரின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைக்கப்படும். மேலும் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படும் போது அவர்களுக்கு காணிகளும் அவசியமில்லாமல் போகும். இந்தப் பின்னணியில் இப்போதே காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதையும் பாதைகள் திறக்கப்படுவதையும் காணலாம்.
இது பற்றி தேசம்நெற்க்குத் தெரியவருவதாவது, பிரித்தானிய போன்ற மேற்குநாடுகள் போல் தேசிய மக்கள் சக்தி அரசும் தன்னுடைய இராணுவத்தை வினைத்திறன் மிக்க இராணுவமாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைத்து வினைத்திறன் மிக்க ‘ஸ்மாட்’ படையணிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என பாதுகாப்புச் செயலர் ஓய்வுபெற்ற வைஸ் மார்சல் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார். டிசம்பர் 28இல் திருகோணமலையில் உள்ள நவல் அன் மரிரைம் அக்கடமியின் அணிவகுப்பை ஏற்று டிசம்பர் 31இல் ஓய்வுபெற்ற இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை கொமான்டர்கள் முன்னிலையில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.