விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றியின் ஒரு வருட பூர்த்தி தேசிய வெற்றி விழா மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகிறது.
விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றியின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்துள்ள தேசிய வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு காலை 8 மணிக்கு காலி முகத்திடலிலும் மாலை 4.30 மணிக்கு படைவீரர்களின் தேசிய நினைவு தின வைபவம் பாராளுமன்ற மைதானத்திலும் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் முப்படைகளின் தளபதிகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதனை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்கள் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
தேசிய வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பில் முதற்தடவையாக முப்படைகள் மற்றும் பொலிஸார் ஒன்பது ஆயிரம் பேர் இம்முறை பங்குகொள்ளவுள்ளதுடன் அணி வகுப்பின்போது வழமையை விட வித்தியாசமான முறையில் முப்படையினர் தமது சாகசங்களை காண்பிக்கவுள்ளதாக இராணுவப் பேச்சாளர், மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
இவர்களில் 537 முப்படை அதிகாரிகளும், 8960 முப்படை வீரர்களும் அடங்குவர். பிரதான வைபவங்களில் பிரதமர் தி.மு.ஜயரட்ண, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் விமானப் படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
பாதுகாப்புப் படையினரின் வெற்றியை பாராட்டும் வகையிலும் அவர்களது சாகசங்களை வெளிப்படுத்தும் வகையிலும் முப்படைகளின் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்புக்கள் இடம்பெறவுள்ளன.வழக்கமான அணி வகுப்புக்கு மேலதிகமாக இறுதிக்கட்ட படை நடவடிக்கையில் கலந்துகொண்ட பெரும்பாலான படை வீரர்கள் முதற் தடவையாக பங்குகொண்டு பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டமை தொடர்பில் செயல்முறையில் காண்பிக்கவுள்ளதுடன் அதற்காக பயன்படுத்திய கனரக ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை காண்பிக்கவுள்ளனர்.
யுத்த நடவடிக்கையின்போது அங்கவீனமுற்ற படைவீரர்களும் சக்கர நாற்காலிகளில் இருந்தவாறு அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.