அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஒபாமாவுக்கு ஹமாஸ் கடிதம் செனட்டர் ஹெரியிடம் கையளிப்பு

hamas.jpgகாஸாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் செனட்டர் ஹெரியிடம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கான கடிதம் ஒன்றை ஹமாஸ் போராளிகள் கையளித்துள்ளனர். இக்கடிதமானது காஸாவிலுள்ள ஐ.நா.வின் உதவி அமைப்பின் மூலமே செனட்டர் ஜோன் ஹெரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் அதிகாரி கரேன் அபு தெரிவித்தார்.

ஆனால், இக்கடிதத்தை ஜோன் ஹெரி ஏற்றுக்கொண்டாரா என்பது குறித்தோ அக்கடிதத்தில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பாகவோ ஐ.நா.வின் அதிகாரி அபு எதுவும் தெரிவிக்கவில்லை. 2007 ஆம் ஆண்டில் காஸாவை ஹமாஸ் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததையடுத்து ஹமாஸ் போராளிகளை தீவிரவாத அமைப்பாகவே அமெரிக்கா கருதிவருவதுடன், எதுவித பேச்சுகளையோ உடன்படிக்கைகளையோ ஏற்படுத்தவில்லை.

ஹமாஸ் அமைப்பினர் காஸா பிராந்தியத்தைக் கைப்பற்றிய பின்னர் அங்கு முதற் தடவையாக விஜயம் செய்யும் அமெரிக்க உயர்மட்ட அதிகாரியாக ஹெரி அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அத்துடன், அமெரிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களான பிரையன் பைர்ட் மற்றும் கெய்த் எலிசன் ஆகியோரும் ஹெரியுடன் இணைந்து காஸாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், இந்த அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதிகள் ஹமாஸ் போராளிகள் குழுவினரை சந்திக்க விரும்பவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் ஐ.நா. நிவாரண அமைப்பு உள்ளிட்ட உதவி நிறுவனங்களை இக்குழுவினர் சந்திக்கவுள்ளனர். இந்த விஜயம் அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள ஹமாஸ் அமைப்புடனான உறவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதெனத் தெரிவித்தார்.

அவசர மனிதாபிமான தேவைகளுக்கென 10 மில். டொலர்களை வழங்க ஐ.நா முடிவு – அரசுடன் இணைந்து செயற்படவும் ஹோம்ஸ் விருப்பம்

John_Holmes_UNமோதல் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வரும் சிவிலியன்களுக்கான அவசர மனிதாபிமானத் தேவைகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாரென ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விடயங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்தார். இதற்கென 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும் கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்தார்.

சிவிலியன்களின் பாதுகாப்பை இருதரப்பும் பொறுப்பேற்க வேண்டுமெனக் கூறிய அவர், இதனை உறுதிப்படுத்துவதற்காக, மோதல்களைத் தீவிரப்படுத்த வேண்டாமென அரசாங்கத்தையும் புலிகள் இயக்கத்தையும் கோருவதாகக் கூறினார். இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்காக அவர்களைப் பதிவு செய்யும் பணிகளையும், விசேட அடையாள அட்டை வழங்கும் நடைமுறையையும் துரிதப்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த ஐ. நா. மனிதாபிமானப் பணிகளுக்கான பிரதிச் செயலாளர் ஹோம்ஸ், அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் இணைந்து இன்று (21) பிற்பகல் செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இது நடந்தது. இங்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான மானிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களுக்குச் சென்றபோது அதனை நன்கு அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனாலும், குறைபாடான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். சிவிலியன்கள் தொடர்பாகத்தான் கவலையாக இருக்கிறது. புலிகளின் பிரதேசத்தில் உள்ள மக்களை சுதந்திரமாக செயற்பட அவர்கள் அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு இடமளிக்க வேண்டும். எனது விஜயத்தின்போது சம்பந்தப்பட்ட தரப்பினர்களைச் சந்திக்க அரசு இடமளித்தது என்று தெரிவித்த அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் சந்திப்பொன்றை நடத்தியதாகவும் கூறினார்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க இங்கு கருத்துத் தெரிவிக்கையில், சிவிலியன்களைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தம்மைச் சந்தித்த ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸிடம் ஜனாதிபதி மஹிந்த சமரசிங்க மீள வலியுறுத்தியதாகக் கூறினார்.

சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதி செய்தவாறே இராணுவ நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்த அவர், சிவிலியன்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிந்தால் தாக்குதல் நடத்துவதில்லை எனவும் தெரிவித்தார். அதேநேரம் மக்களின் அரசியல் அபிலாஷைகள், சமூக, பொருளாதார அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ¤க்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும், மாகாண சபைத் தேர்தலையும் ஜோன் ஹோம்ஸ் விரைவில் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார். மக்களின் பிரதிநிதிகள் என்போரை விடுத்து, உண்மையான கலந்துரையாடல் நடத்தப்படுவதை ஹோம்ஸ் விரும்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சிவிலியன்களை வெளியேற அனுமதிப்பது தொடர்பில் புலிகள் தரப்பிலிருந்து சாதகமான பதில் எதுவும் கிடையாது எனத் தெரிவித்த அமைச்சர், எனினும் பொதுமக்கள் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை உண்டென்றும் கூறினார்.

சிவிலியன்களுடன் கலந்து புலிகள் அரச கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவி வருவதாகக் கூறிய அமைச்சர் இவ்வாறு வந்தவர்களுள் 250 பேர் தம்மை புலி உறுப்பினர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்தார். இவர்களுள் 32 பேர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். ஓமந்தை சோதனைச்சாவடியில் சோதனைகள், பதிவுகள் நிறைவடைந்ததும் 24 மணித்தியாலத்திற்குள் அரசாங்க அதிபரிடம் சிவிலியன்களை ஒப்படைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

‘புலிகள் இயக்கத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தாது, அவர்கள் சட்டப்படி தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம். இது இறைமையுள்ள ஒரு நாடு. எந்த முடிவையும் நாம் சுதந்திரமாக மேற்கொள்ள உரிமை உண்டு’, என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷ பல்பட்ட, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இன்று ஈழத்தமிழருக்காக திமுக பிரமுகர் சென்னையில் தீக்குளிப்பு

united-people.jpgஇலங் கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று திமுக இளைஞர் அணி சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை கிண்டியில் ஹால்டா ஜங்சனில் மனித  சங்கிலி ஊர்வலத்தின் போது திமுக தொண்டர் சிவப்பிரகாசம் தீக்குளித்தார்.

இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 60 வயதாகும் சிவப்பிரகாசம் திமுகவின் முன்னாள் சைதாப்பேட்டை பகுதி பிரதிநிதி.  தற்போது சிட்டிபாபு நினைவு மன்ற செயலாளர். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கணக்காளராக பணியாற்றி 1999ல்(வி.ஆர்.எஸ்) ஓய்வு பெற்ற சிவப்பிரகாசம் திமுகவின் தீவிர தொண்டர்

முல்லைத்தீவிலிருந்து அழைத்துவரப்பட்டோரில் 442 பேர் வவுனியாவுக்கு அனுப்பிவைப்பு

trico-hospital.gifநேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிவரை, முல்லைத்தீவிலிருந்து கப்பலில் திருகோணமலைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் அழைத்துவரப்பட்ட காயமடைந்த 1212 பொதுமக்களில் 442 பேர் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். வெளிமாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள காயமடைந்த வன்னி மக்களின் எண்ணிக்கை 437. அதன் விபரம் வருமாறு:

பொலன்னறுவை178, கந்தளாய்160, தம்பலகமம்07, கொழும்பு தேசிய ஆஸ்பத்திரி மற்றும் கண்டி போதனா வைத்தியசாலை32. திருகோணமலை ஆஸ்பத்திரியில் 322 பேரும் திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் 35 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பெப்ரவரி 11 தொடக்கம் பெப்ரவரி 19 ஆம் திகதிவரை திருகோணமலை ஆஸ்பத்திரியில் சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட காயமடைந்த வன்னி மக்களின் எண்ணிக்கை 490 ஆகும். திகதிவாரியாக விபரம் வருமாறு: பெப்ரவரி 11 முதல் 17 வரை 394 பேர், பெப்ரவரி 1868 பேர், பெப்ரவரி1928.

முல்லைத்தீவில் இருந்து கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட வன்னி மக்களின் எண்ணிக்கை 1212 ஆகும். திகதிவாரியாக விபரம் வருமாறு. பெப்.11-368, பெப் 12-404, பெப் 16-440. இவர்களில் இருவர் மட்டுமே திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். ஒருவர் ஆசிரியர் மற்றவர் இன்னும் அடையாளங் காணப்படவில்லை.

புதுக்குடியிருப்பை கைப்பற்றும் முயற்சியில் படையினர் தீவிரம்

truck.jpgமுல்லைத் தீவில் விடுதலைப்புலிகள் வசமிருக்கும் கடைசி நகரான புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு நகரை தற்போது படையினர் சுற்றிவளைத்து வருவதாகவும் அப்பகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் படையினர் கூறுகின்றனர்.

பரந்தன் முல்லைத்தீவு வீதிகளில் (ஏ35) பரந்தனுக்கு தென்கிழக்கே சுமார் 35 கிலோமீற்றர் தூரத்தில் புதுக்குடியிருப்பு உள்ளது. இந்த வீதியிலுள்ள புதுக்குடியிருப்பு நகர் மட்டுமே தற்போது புலிகள் வசமிருப்பதாகவும் படையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக புதுக்குடியிருப்புக்கு மேற்கே படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வின் மூலம், புதுக்குடியிருப்புக்கு மேற்கே சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்திலிருந்த அம்பலவன் பொக்கணைப் பகுதியை நேற்று முன்தினம் வியாழக்கிழமை படையினர் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அம்பலவன் பொக்கணைப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் அங்கிருந்து மேலும் முன்னேறி புதுக்குடியிருப்பு நகருக்குள் நுழைய முயற்சித்து வருவதாகவும் புதுக்குடியிருப்பு நகரை தற்போது படையினர் வடக்கு, வடமேற்கு மற்றும் மேற்கு திசைகளில் சுற்றிவளைத்து வருவதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை இந்த மூன்று முனைகளிலும் 58 ஆவது படையணி புலிகளுடன் கடும் சமரில் ஈடுபட்டதாகவும் இதில் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் படையினர் கூறுகின்றனர்.  இப் பகுதிகளில் தொடர்ந்தும் கடும் சமர் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இன்று நீர் வெட்டு!- நீர்ப்பாசனத் திணைக்களம் தகவல

water-tap.jpgமேல் மாகாண நீர் வழங்கல் பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை நீர் வெட்டு அமுலில் இருக்குமென நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர் விநியோகத் திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

யுத்ததில் சிக்குண்டுள்ள பொதுமக்கள் தொடர்பில் இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றச்சாட்டு

human-rights-watch.jpgஇலங்கையில் விடுதலைப் புலிகள் மீது அரச இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் வடபுலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயங்களில் சாமானியப் பொதுமக்களை இலங்கை இராணுவம் இரக்கமின்றி கொன்றுவருகிறது என ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமைகள் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட அந்தரங்க கள விசாரணைகளின்போது மக்கள் வழங்கிய வாக்குமூலங்களை ஆதாரமாகக்கொண்டு குறிப்பிட்ட ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், “பொதுமக்களைக் குறிவைத்து பாதுகாப்பு வலயங்களையும் மருத்துவமனைகளையும் இலங்கை இராணுவம் ஷெல் குண்டுகளை இறைத்துத் தாக்கிவருகிறது” என்று சாடியிருக்கிறது.

இக்குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவம் மறுத்திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற விடாமல் விடுதலைப் புலிகள் தடுத்துவருவதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு குற்றம்சாட்டியது.

ஆனால் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகவே அப்படிச் செய்வதாக விடுதலைப் புலிகள் தெரிவிக்கிறார்கள்.

ஐ.நா பிரதிச் செயலாளர் நாயகம் வவுனியா கதிர்காமர் நிவாரண கிராமத்துக்கு விஜயம்

John_Holmes_UNஐ.நா. பிரதி செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் நேற்று வவுனியா கதிர்காமர் நிவாரணக் கிராமத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டார். அவருடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

ஐ.நா. பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கதிர்காமர் நிவாரண கிராமத்திலிருக்கும் மக்களுடன் நேரடியாக உரையாடினர். வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் காலை 11 மணிக்கு நடைபெற்ற சிரேஷ்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட உயர்மட்ட கலந்துரையாடலிலும் பங்குகொண்ட இவர்கள், பலவிடயங்கள் குறித்து ஆராய்ந்தனர். குறிப்பாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ள மக்களுடைய சேமநலன்களை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. மக்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்களுக்கு அதிகாரிகள் ஆற்றும் சேவையினையும் அவர் பாராட்டினார். கதிர்காம கிராமத்தில் தங்கியுள்ள மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து இக்குழுவினர் மக்களிடம் கேட்டறிந்துகொண்டனர். அதேவேளை இளைஞர்களினதும், யுவதிகளினதும், சுயதொழில் முயற்சிகளுக்காக தொழில்பயிற்சி நிலையமொன்றும் இங்கு திறந்து வைக்கப்பட்டது. தையல், கணனி, மேசன், தச்சு உட்பட இன்னும் பல பயிற்சிகள் இங்கு வழங்கப்படவுள்ளன.

கதிர்காம கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலை மற்றும் வங்கிகள், கூட்டுறவு சபை மருத்துவ நிலையம், மனநல ஆலோசனை நிலையம் என்பவைகளையும் இக்குழுவினர் பார்வையிட்டனர். உயர் கல்வி நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான விஞ்ஞான ஆய்வுகூட வசதியினை உடன் பெற்றுக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு, அமைச்சர் றிஷாட் பதியுதீன் பணிப்புரை வழங்கினார்.

மக்களுக்கும், பாதுகாப்புத் தரப்புக்கும், அதிகாரிகளுக்குமிடையில் மிகவும் நெருக்கமான சூழ்நிலை இக்கிராமத்தில் காணப்படுவதால் மக்கள் தமது தேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ அங்கு குறிப்பிட்டார். அதனையடுத்து இக்குழுவினர் மக்களுக்கு கைலாகு கொடுத்தனர்.

பிரபாவுக்கு உண்மையான அக்கறை இருந்தால் தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும்

sri-lanka-parliment.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் அம்மக்கள் வன்னியிலிருந்து சுதந்திரமாக வெளியேற இடமளிக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் பகிரங்க கோரிக்கை விடுத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதனை பிரபாகரனுக்கு எடுத்துக்கூறவேண்டுமெனவும் குறிப்பிட்ட அமைச்சர் இதன் மூலம் தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்த வரலாற்றுத் தவறுக்குப் பிராயச்சித்தம் தேடிக்கொள்ளட்டும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:

தனிமனிதப் படுகொலைகள் மூலம் எந்த இலக்கையும் அடைய முடியாது என்பதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் படுகொலை ஒரு சிறந்த உதாரணம். ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் ஐக்கிய இலங்கைக்கான கனவு இன்று நனவாகியுள்ளது. ஜெயராஜின் படுகொலை மூலம் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் ஆட்டங்காணச் செய்யலாமென கனவு கண்ட புலிகள் இன்று தாமே ஆட்டங்கண்டுள்ளனர்.

இன்று தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் சகல அவலங்களுக்கும் புலிகள் மட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஒரு காரணம். ஆனால் இன்று பிரபாகரனின் பங்கர் வாசலுக்குக் கூட போக முடியாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஏற்பட்டுள்ளது. எமது மக்களை உயிரோடு பாதுகாக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் தமது இரு விழிகளாகக் கொண்டவர். இந்த நாட்டின் சமாதானத்திற்காகச் செயற்பட்டவர் அவர்.

இன்று புலிகள் சகல மக்களுக்குமான எதிரிகளாகியுள்ளதை முழு உலகமும் உணர்ந்துள்ளது. அரசியல் தலைவர்கள் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தி வந்த இலக்கையும் அடைய முடியாது. புலிகளை சகல மக்களும் எதிரிகளாகப் பார்ப்பது அவர்களின் தனி மனிதப்படுகொலைகளே எனவும் அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்தார்.

மின் விநியோகத்தில் தடங்கல் ஏற்படாது மின்சாரசபையின் தலைவர் தெரிவிப்பு

electricitypowerlinesss.jpgமின்சார உற்பத்தி நடைபெறும் நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் குறைவடைந்ததை அடுத்து, மின் விநியோகத்தில் தடங்கல் ஏற்படலாமென அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ள போதும், மின் விநியோகத்தில் தடைகள் எதுவும் ஏற்படாது என மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.  சீரான மின் விநியோகத்துக்கான முன்னேற்பாடாக, மின் பிறப்பாக்கி இயந்திரங்கள் கைவசமுள்ளதால் மின்சாரத்தை விநியோகிப்பதில் தடங்கல்கள் ஏற்படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக, உயரதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்தே, மின்சார சபை தலைவர் மின் விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்படமாட்டாது என்ற தகவலை வெளியிட்டார். இதனிடையே, மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் மழை பெய்யாவிடின், நாட்டின் மின் விநியோகத்தில் தடங்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்குமென அண்மையில் மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தற்சமயம், நீரேந்து பகுதிகளில், உள்ள மொத்த நீரின் அளவில் 35 வீதமான, 444 கன அடிநீர் மாத்திரமே காணப்படுவதாக மின்சாரசபையின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்சார சபை பொது நிர்வாக பொறியியலாளர் சபையின் தலைவருக்கும் அறிவித்திருந்தார்.

ஏற்கெனவே, கடந்த வருடம் ஜனவரியில் 200 கன அடி நீளம் கொண்டிருந்த நீரேந்து பகுதிகள் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் 600 கனஅடி நீரைக் கொண்டிருந்ததாகவும், தொடர்ச்சியாக வரட்சி காரணமாக இந்த நீர்மட்டத்தில் திடீர்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.