அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

விமானப் படை விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என விமானப்படைப் பேச்சாளர் அறிவிப்பு

mi-24.jpgவிமானப் படையைச் சேர்ந்த விமானமொன்று விடுதலைப் புலிகளால் வன்னிப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது குறித்து விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார நேற்று கருத்துத் தெரிவிக்கையில், விமானப்படை விமானம் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்ற செய்தியில் உண்மையில்லை எனவும், இச்செய்தி  பலவீனத்தை மறைக்க புலிகள் மேற்கொள்ளும் பொய் பிரசாரம் என்றும் தெரிவித்தார்.

குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டிருக்கும் புலிகள் தமது படுதோல்வியை மறைப்பதற்காகவும், தாம் இன்னும் பலமுடனேயே இருக்கின்றோம் என சர்வதேசத்துக்குக் காட்டவுமே இவ்வாறான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

58 ஆவது, 57 ஆவது படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பில் புலிகளின் இலக்குகளை தாக்கியழிக்கும் அதேவேளை, தரைப்படையினருக்கு உதவும் வகையில் விமானப் படை விமானங்களும், ஹெலிகொப்டர்களும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு வெளிப்புறத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

houses-of-parliament-london-uk.jpgபிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு வெளியே நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.  லண்டன் நகர மத்தியில் பாராளுமன்ற சதுக்கத்தில் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு முன்பாக வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்விடத்தில் ஈழத்தமிழர்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர்களில் ஒருவர் திடீரெனத் தனது உடலில் பெற்றோலை ஊற்றி விட்டு நெருப்பைப் பற்ற வைத்துள்ளார்.

எனினும் , அவ்விடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் விரைந்து செயற்பட்டு அவரைக் கீழே தள்ளி விழுத்தி நிலத்தில் உருட்டி அவரது உடலில் பற்றியிருந்த தீயை அணைத்துள்ளனர். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அவ்விடத்தில் பொலிஸாரும் நின்றிருந்தனர்.

அவர்களும் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து வந்து தீக்குளிக்க முயன்ற அந்தத் தமிழ் இளைஞனை உடனடியாகத் தங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

தீ உடனடியாக அணைக்கப்பட்டுவிட்டதால், அவர் பாரதூரமான காயங்களுக்குள்ளாக வில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற போது அந்தப் பகுதி மக்களும் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருந்தனர்.

கடந்த 14 ஆம் திகதி லண்டன் டவுணிங் தெருவில் பிரிட்டிஷ் பிரதமர் வீட்டின் முன்பாக ஈழத்தமிழர்கள் இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஒருவர் தீக்குளிக்க முனைந்தார். இதே கோரிக்கையை முன்வைத்து அண்மையில் ஜெனீவா நகரில் ஐ.நா. அலுவலகம் முன்பாக இலங்கைத் தமிழ் இளைஞரொருவர் தீக்குளித்து உயிர் துறந்திருந்தார்.

அந்த இடத்திலிருந்து ஜெனீவா பொலிஸார் 5 பக்கக் கடிதமொன்றையும் எடுத்திருந்தனர். ஈழத்தமிழர்களது துயர் குறித்து அதில் விரிவாக எழுதப்பட்டிருந்தது. அந்த நிலையிலேயே தற்போது மேற்கு நாடுகளில் ஈழத்தமிழர்கள் தீக்குளிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய அதிகாரம் பிரதமர் இல்லத்தில் இல்லை சோனியாவின் இல்லத்தில்: அத்வானி

advani.jpgஇந்தியாவின் தவறான வெளியுறவு கொள்கை காரணமாக இந்தியாவின் கருத்தை இலங்கை அரசு செவிமடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எல்.கே அத்வானி தெரிவித்துள்ளார். ஆட்சியிலுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்தம் செய்ய முடியாவில்லை என ஊடகவியலாளரிடம் பேசும் போது குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் தவறான வெளியுறவு கொள்கை காரணமாக இலங்கை பிரச்சினையில் தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொண்டுள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவின் கருத்தை இலங்கை ஏற்று மதித்து வந்தது. காங்கிரஸ் கூட்டணி அரசின் அதிகாரம் முழுவதுமே பிரதமர் இல்லத்தில் இல்லை. சோனியா வசிக்கும் இல்லத்தில் தான் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

மார்ச் மாதம் முதல் யாழ். குடாநாட்டுக்கு 24 மணிநேர மின்சாரம் வழங்கப்படும் – வடபிராந்திய மின்சார சபை தெரிவிப்பு

electricitypowerlinesss.jpgயாழ். மாவட்டத்துக்கு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் தடையின்றி இருபத்துநான்கு மணித்தியாலமும் மின்சாரம் வழங்கக்கூடியதாக இருக்குமென வடபிராந்திய மின்சார சபை அலுவலகம் அறிவித்துள்ளது. குடாநாட்டில் மின்பாவனை அதிகரித்தமையால் கடந்த பதினெட்டு மாதங்களாக மாலை ஆறு மணிமுதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு குடாநாடு முழுவதும் சுழற்சிமுறையில் அமுல் செய்யப்பட்டுவந்த மின்தடை முற்றாக நீங்குமென மின்சார சபையினர் அறிவித்துள்ளனர்.

யாழ். மாவட்டத்துக்கு முப்பத்தைந்து மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் சீன நிறுவனமான “நோத்பவர்’ ஆறு மின் பிறப்பாக்கிகளில் மூன்று மின் பிறப்பாக்கிமூலம் பன்னிரெண்டு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்து வழங்குவதால், மின்தடை நீங்க வழியேற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது, குடாநாட்டுக்கு பதினைந்து மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் ஒப்பந்தகாலம் ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டிருப்பதால், இரு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குடாநாட்டுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க போதுமானதாகவுள்ளது. இவற்றுக்கு மேலாக சுன்னாகத்திலுள்ள மின்சார சபை மூன்று மெகாவாட் மின்சாரத்தையும், காங்கேசன்துறையில் மூன்று மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்துவருகின்றன

மேலும் 252 பேர் திருகோணமலை வந்தடைந்தனர்

red-cr.jpgதிருகோண மலைக்கு வந்த நோயாளர்களில் ஒரு பகுதியினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின அனுசரணையுடன் நோயாளாகள், காயங்களுக்கு இலக்கானோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் உட்பட 252 பேர் கிறீன் ஓசன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை திருகோணமலை அரசினர் பொது மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்ட மேலும் நூறு பேர் பேருந்துகள் மூலம் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு இதுவரை 746 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருகோணமலை அரசினர் பொதுமருத்துவமனைக்கு ஆறாவது தொகுதி நோயாளர்களும் கொண்டு வரப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இடநெருக்கடியை தவிர்க்கும் வகையில் ஓரளவு சிகிச்சை வழங்கப்பட்ட நோயாளர்களை மன்னார் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் மேலும் சில மனிதப் புதைகுழிகள்

bangaladesh.jpgவங்கதேச எல்லைக்காவல் படையினரின் கலவரங்களில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் புதைகுழிகள் மேலும் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கலவரங்களில் காணாமல் போன 70 அதிகாரிகளைத் தேடும் முயற்சிகளின்போது, தலைநகர் டாக்காவின் காணி ஒன்றுக்குள் ஆழமில்லாமல் இருந்த புதைகுழிகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டன.

இதில் காணப்பட்ட 10 சடலங்களில் இராணுவ கட்டளை அதிகாரியின் மனைவியின் சடலமும் அடங்கும் என்று பிபிசிக்கு கூறப்பட்டுள்ளது.சடலங்கள் எரிந்த நிலையில் இருந்ததால், அவற்றை அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது.

கப்பல் மூலம் 90 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள்

ship.jpgபாதுகாப்புப் பிரதேசத்துக்குள் வந்துள்ள மக்களுக்கென 90 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் 40 மெ. தொன் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதேநேரம்,  இன்று 50 மெ. தொன் அத்தியாவசியப் பொருட்கள் கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ன தெரிவித்தார்.

படையினரால் பாதுகாப்பு பிரதேசம் என பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வரும் குழந்தைகளுக்குரிய பால்மா வகைகள் தட்டுப்பாடின்றி கிடைக்கக் கூடியதாக, குழந்தைகளுக்கான பால்மா சுமார் 1000 பக்கற்களை மேலதிகமாக அனுப்பி வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் கூறினார். இதனை மற்றொரு கப்பலில் அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் பகுதியிலுள்ள பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள மக்களுக்கென 40 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அதேநேரம், குழந்தைகளுக்குத் தேவையான பால்மா வகைகளையும் அனுப்ப உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இன்று கின் ஓஷியன் என்ற கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்படும் கப்பலில் சீனி, மா, அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் அடங்குகின்றன.

கின் ஓஷியன் கப்பல் இன்று புறப்பட்டு முல்லைத்தீவு கடல் பரப்புக்கு செல்கிறது. அங்கிருந்து படகுகள் மூலம் புதுமாத்தளன் பகுதிக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படும். உலக உணவு திட்டத்தினரின் அத்தியாவசிய பொருட்களுடனும், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுப்பப்படும் பொருட்களுடனுமே கப்பல் புறப்படுகிறதென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

சார்க் பல்கலை 2010 இல் ஆரம்பம்; உணவு வங்கியும் தயார் நிலையில் – செயலாளர் நாயகம் ஷர்மா

saarc_flagss.jpgதெற்காசிய பிராந்திய நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சார்க் உணவு வங்கி தற்போது தயாரான நிலையில் உள்ளதாக “சார்க்” அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி ஷர்மா தெரிவித்தார்.

15வது சார்க் உச்சி மாநாட்டில் மேற்கொண்ட தீர்மானங்களின் பிரகாரம், பிராந்தியத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாக கலாநிதி ஷர்மா தெரிவித்தார்.

“சார்க்” வெளி விவகார அமைச்சர்களின் 31வது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கலாநிதி ஷர்மா இந்தத் தகவலை வெளியிட்டார். கொழும்பு – சிலோன் கொன்ரினன்ரல் ஹோட்டலில் நேற்று முன்தினம் அமர்வு ஆரம்பமானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம அமர்வுக்குத் தலைமை தாங்கினார்.

ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய கலாநிதி ஷர்மா, உச்சி மாநாட்டின் தீர்மானங்களுக்கு அமைய “சார்க்” பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் அடுத்த ஆண்டிலிருந்து (2010) ஆரம்பமாகுமென்று தெரிவித்தார். இது தொடர்பில் அரசுகளுக்கிடையிலான செயற்பாட்டுக் குழு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். வேறு இனங்காணப்பட்ட விடயங்களிலும் முன்னேற்ற கரமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கலாநிதி ஷர்மா தெரிவித்தார். சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் 31 வது அமர்வு நேற்று (28) மாலை நிறைவடைந்தது.

“வவுனியா மாவட்டத்தில் 20 ஆயிரம் மாணவர்களின் கல்வி பாதிப்பு’

srilanka-students.jpgவன்னியி லிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் 20,000 மாணவர்களது கல்விச் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ. ஒஸ்வோல்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்; வவுனியா மாவட்டத்தில் நிரந்தரமாக வசிக்கும் 20 ஆயிரம் மாணவர்களுடைய கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுடைய கல்விச் செயல்பாட்டிற்கு மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், முழுமையான கல்வி செயற்பாடுகள் நடைபெறவில்லை.

எட்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இங்கு கல்வி பயின்ற மாணவர்களுக்கு மாற்று திட்டங்களை ஏற்படுத்தினோம். ஆனாலும், திருப்திகரமான கல்விச் சூழல் காணப்படவில்லை. நிரந்தர மாணவர்கள், இடம் பெயர்ந்து வந்துள்ள மாணவர்கள், மெனிக்பாமில் குடியேற்றப்பட்ட மாணவர்கள் என மூன்று தரத்தையும் சேர்ந்தவர்கள் உள்ளனர். நலன்புரிநிலையங்களில் ஏழாயிரம் மாணவர்களும் 373 ஆசிரியர்களும் உள்ளனர். இடம்பெயர்ந்து வந்துள்ள ஆசிரியர்கள் நலன்புரி நிலையங்களைவிட்டு வெளியேற முடியாது. அவர்கள் அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி புகட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களுக்குரிய வேதனங்கள் வழங்க அனுமதி கிடைத்துள்ளது.

வலயக்கல்விப்பணிப்பாளர், நலன்புரிநிலையத்தில் தங்கியுள்ள மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை, வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள, வன்னியிலிருந்து இடம் பெயர்ந்துள்ள சிறுவர்களுக்குரிய கல்வி நடவடிக்கையில் “யுனிசெப்’ கவனம் செலுத்தியுள்ளது. நலன்புரி நிலையத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு சிறுவர்களுக்கான கல்வி செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய கல்வி செயற்பாட்டிற்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் வசதிகளையும் யுனிசெப் வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தலுக்கான திகதியினை மாற்றுமாறு கட்சிகள் கோரிக்கை.

election_.jpgமேல் மாகாணசபைத் தேர்தலுக்கான திகதியினை மறுபரிசீலணை செய்யுமாறு பிரதான இரு அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஏப்பிரல் மாதம் 25ம் திகதி தேர்தலினை நடாத்துவது என கடந்த 26ம் திகதி தேர்தல்கள் செயலகம் அறிவித்திருந்தது. இந்த திகதியினை மாற்ற வேண்டும் என இரண்டு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தேர்தலுக்கான காலம் நீடித்துள்ளதன் காரணமாக இந்த திகதியை மாற்ற வேண்டும் என தாம் தேர்தல்கள் செயலகத்திடம் கோரியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸஅத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த திகதியில் தேர்தலினை நடாத்துவதில் தமக்கு எதுவித ஆட்சேபனையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த திகதியினை மாற்றுவது தொடர்பில் ஐ.தே.க பொதுச் செயலாளர் தம்முடன் கலந்துரையாடினார் எனவும் ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியினை ஒருபோதும் மாற்ற முடியாது எனத் தாம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் காலங்களில் தேர்தலுக்கான திகதியினை அறிவிக்கும்போது தேர்தல்கள் ஆணையாளர் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடும் முறைமையொன்றினை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.