திருகோண மலைக்கு வந்த நோயாளர்களில் ஒரு பகுதியினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின அனுசரணையுடன் நோயாளாகள், காயங்களுக்கு இலக்கானோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் உட்பட 252 பேர் கிறீன் ஓசன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை திருகோணமலை அரசினர் பொது மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்ட மேலும் நூறு பேர் பேருந்துகள் மூலம் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு இதுவரை 746 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருகோணமலை அரசினர் பொதுமருத்துவமனைக்கு ஆறாவது தொகுதி நோயாளர்களும் கொண்டு வரப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இடநெருக்கடியை தவிர்க்கும் வகையில் ஓரளவு சிகிச்சை வழங்கப்பட்ட நோயாளர்களை மன்னார் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.