அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

காயமடைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொழும்பில் சத்திர சிகிச்சை

pak-2nd-test.jpg
மருத்துவமனையில் இலங்கை கிரிக்கெட் வீரர் பரணவிதாரண பாகிஸ்தானின் லாகூர் நகரில் இனந்தெரியாத ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்து தாயகம் திரும்பியுள்ள இலங்கைக் கிரிக்கெட் வீரர்களுக்கு கொழும்பில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அவர்களின் உடல்நிலை தேறிவருவதாகவும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதலின்போது இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜயவர்த்தன, உபதலைவர் குமார் சங்கக்கார, ஆரம்பத் துடுப்பாட்டவீரர் தரங்க பரணவிதாரண, மத்திய வரிசைத் துடுப்பாட்டவீரர்களான திலான் சமரவீர, வேகப்பந்து வீச்சாளர்களான திலின துஷார, சுரங்க லக்மால், சுழல்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் ஆகியோருடன், அணியின் துணைப் பயிற்றுவிப்பாளர் பால் ஃபர்பிரீஸ் போன்றோர் காயம்பட்டிருந்தனர்.

புதனன்று நாடு திரும்பிய இவர்களில் நால்வர் தனியார் மருத்துவமனை ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தனர். தாக்குதலின் பின்னர் உடல் உளரீதியாக சோர்வடைந்திருந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தத்தமது பழைய நிலைக்குத் திரும்பிவருகிறார்கள் என்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புலிகளுக்கு பெரும் ஆளணிப்பற்றாக்குறை; சூசை, பொட்டு உட்பட சிரேஷ்ட தலைவர்கள் களத்தில்

uthaya_nanayakara_.jpgபுலிகளின் பிடியில் எஞ்சியுள்ள 45 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை முழுமையாக மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் மூன்று படைப்பிரிவுகளும், அதிரடி படை அணியும் பல முனைகளில் வேகமாக முன்னேறிவருவதாக அவர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்புப் படையினரின் கடுமையான தாக்குதல்களையும், படை நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் கள நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், கடற் புலிகளின் தலைவர் சூசை கடல் வழி நடவடிக்கைகளிலும், லோரன்ஸ், பொட்டு அம்மான் மற்றும் விதுஷன் ஆகியோர் உட்பட சிரேஷ்ட தலைவர்கள் தரைவழி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனரென்று புலனாய்வு தகவல்கள் குறிப்பிடுவதாகவும் அவர்தெரிவித்தார்.

ஏ-35 வீதியின் வடக்கே அதாவது புதுக்குடியிருப்புச் சந்திக்கு வடக்காக இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவும், ஏ-35 வீதியின் தெற்கே அதாவது புதுக்குடியிருப்பு சந்திக்கு தெற்காக இராணுவத்தின் 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான படைப் பிரிவும் புலிகளின் இலக்குகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வேகமாக முன்னேறி வரு கின்றனர்.

இந்த இரு படைப் பிரிவுகளுக்கும் உதவியாக இராணுவத்தின் எட்டாவது அதிரடிப் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சாலையை மற்றும் புதுமாத்தளன் வட பகுதியை கைப்பற்றிய இராணுவத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படைப்பிரிவின் புதுமாத்தளன் தென்பகுதியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

கிழக்கு கடலோரமாக முன்னேறும் படையினரின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு புலிகள் பாதுகாப்பு மதில்களை அமைத்து வருகின்ற போதிலும் பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதல்கள் மூலம் அதனை தகர்த்து வருகின்றனர் என்றும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலய பகுதியிலிருந்து புலிகள் இராணுவத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தம்மிடமிருந்த சகல கோட்டைகளையும் பிரதான நகர்களையும் முற்றாக இழந்து குறுகிய காட்டுப் பகுதிக்குள் முடக்கிவிடப்பட்டுள்ள புலிகள் தற்பொழுது ஆளணி பற்றாக்குறையை எதிர் நோக்கியுள்ளமை அவர்களின் சிரேஷ்ட தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளமையை காண்பிப்பதாகவும் மேலும் தெரிவிக்கிறது.

இதேவேளை புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலின் போதும் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

ஜெயலலிதா உண்ணாவிரதம்: இலங்கை எம்.பி. கருத்து

05-jayalalitha.jpg
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரும் 10ம் தேதி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து இலங்கை தமிழ் எம்.பி.சிவாஜிலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருச்சி உழவர்சந்தையில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம், – இலங்கையில் தமிழர்களை காப்பற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளதாக தெரிவித்தார் .

அவருடைய அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த போராட்டம் இலங்கை தமிழர் பிரச்சினையில் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக அமையும். இதன்மூலமாக மத்திய,மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படும்’ என்றும் தெரிவித்தார்.

யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து மக்களை மீளக்குடியமர்த்துவதே அரசின் இலக்கு

anura_priyadarshana_yapa.jpgவன்னியில் யுத்தத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் போதே உண்மையான சந்தோசத்தை அவர்கள் அடைவார்கள். இதனை இலக்காகக் கொண்டே அரசாங்கம் செயற்படுகிறது என ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார்.

புலிகளின் பிடிக்குள்ளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களுக்கு நூற்றுக்கு நூறு வீதம் இல்லையென்றாலும் எமது முழு சக்தியையும் பிரயோகித்து அவர்களுக்குரிய பாதுகாப்பு, உணவு, இருப்பிட வசதி, அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து வருகிறது எனவும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள் குழுவினர் அரச அதிகாரிகளின் வழிகாட்டலுடன் சென்று நேரில் நிவாரணக் கிராமங்களை பார்வையிட்டனர். வெகுவாகப் பாராட்டியும் உள்ளனர். ஆனால் ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அங்கு மக்கள் வசதியின்றியும் உண்ண உணவின்றியும், மலசலம் கழிக்கக் கூட வசதியில்லாத நிலை இருப்பதாக கூறியிருக்கிறாரே என செய்தியாளர் ஒருவர் கேட்டதுடன் இம்மக்களை எவ்வளவு காலம் நிவாரணக் கிராமங்களில் வைத்திருக்கப் போகிர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார். அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பை வழங்குவதுடன் தேவையான உணவு, உடை இருப்பிட வசதிகளையும் எம்மால் இயன்றளவு வழங்குகிறோம். சில குறைபாடுகள் இருக்கலாம். அவர்கள் தமது வீடுகளில் அனுபவித்த வசதிகளை பெற்றுக் கொடுத்துவிட முடியாது தான். அதற்காக ஹியுமன் ரைட்ஸ் வொட்ச் நபர் கூறியது அனைத்தையும் ஏற்க முடியாது. அவற்றை நான் நிராகரிக்கிறேன். ஒரேயடியாக 2000 பேர் எமது நிவாரணக் கிராமங்களுக்கு வரும் போது 100 வீதமான வசதியை ஒரே தடவையில் வழங்கிவிட முடியாது. ஒவ்வொருவருக்கும் தாம் எதிர்பார்க்கின்ற வசதிகளை 100 வீதம் வழங்கவும் முடியாது.

எனவே தான் இறுதிக்கட்ட யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் கண்ணிவெடிகள், மிதி வெடிகள் அகற்றப்பட்டு விட்டதற்கான சான்றிதழ்கள் பெறப்பட்டதும் உடனடியாக அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள். அப்போது தான் அவர்கள் உண்மையான சந்தோசத்தை அடைவார்கள். சுமார் 30 வருடங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தவாறு யுத்தம் தான் ஒரேவழி என்ற மனநிலைக்குள் இருந்தவர்கள் எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்து கொண்ருக்கிறார்கள்.

இவர்களை ஒவ்வொருவராக சோதனையிட்டுத் தான் எடுக்கின்றோம். இதில் கூட சிக்கல்கள் உள்ளன. மனித வெடிகுண்டுடன் கூட வந்தது நாம் அனைவரும் அறிந்த விடயம்தானே என்றும் குறிப்பிட்டார். அத்துடன், புலிகள் இந்த மக்களை மந்தைகள் போல் அங்கும் இங்குமாக அழைத்து திரிந்த போது அடிப்படை வசதிகள் கிடைத்ததா? எந்த சர்வதேச அமைப்பு இவற்றை கண்டது என்றும் கேள்வி எழுப்பினார்.

இரண்டு இலங்கையர்களுக்கு சவூதியில் தூக்குத் தண்டனை மேன்முறையீடு நிராகரிப்பு

saudi-arabia.jpgதூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜைகள் இருவரின் மேன்முறையீட்டை சவூதி அரேபிய நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இதன் படி வெகுவிரைவில் இவர்களின் தூக்குத் தண்டனை நிறை வேற்றப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

ஜோடா பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் புகுந்து பணம் கொள்ளையிட்டது, வீட்டு உரிமையாளரை கொலை செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஹலீமா காதர் மற்றும் பண்டாரநாயக்க ஆகிய இருவருக்கும் சவூதி அரேபியாவின் ஜோடா நீதிமன்றம் 6 மாதங்களுக்கு முன் தூக்குத் தண்டனை விதித்திருந்தது. தண்டனை அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் இருவரும் மேன்முறையீடு செய்திருந்தனர். இதற்கு சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரம் தேவையான உதவிகளை வழங்கியிருந்தது.

மேன்முறையீட்டை ஆராய்ந்த சவூதி அரேபியா ஜோடா நீதிமன்றம் மேன்முறையீட்டை நிராகரித்ததோடு தண்டனையை நிறைவேற்றுமாறும் உத்தரவிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று முதல் புத்த பகவானின் புனித தந்த தரிசனம்

kandy.jpgநாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சாந்தியும் நிரந்தர சமாதானமும் சுபீட்சமும் நிலை பெற வேண்டி கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் இன்று (6) மதியம் 1.00 மணி முதல் புத்த பெருமானின் புனித தந்தம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையும் புத்த பெருமானின் தந்தம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.

மதியம் 1.00 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் பக்தர்கள் இதனை பார்வையிட முடியும் என ஸ்ரீதலதா மாளிகையின் தியவதன நிலமே தெரிவித்தார். இதனை பார்வையிட நாடு முழுவதிலுமிருந்து 10 இலட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 2000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்களின் புனித மாளிகை வளாகத்தையும் நகரத்தையும் அசுத்தப்படுத்தா வண்ணம் சூழல் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசேடமாக ஸ்ரீதலதா மாளிகை அமையப் பெற்றுள்ள பகுதிகளிலும் சில குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மதுபான சாலைகள் போன்ற மற்றும் இறைச்சிக் கடைகள் போன்றனவற்றை மூடுவதற்கு ஏலவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்ரீதலதா மாளிகை அருகிலும் அதனை அண்மித்துள்ள பிரதேசங்களிலும் உள்ள அரச காரியாலயங்கள் மற்றும் பெளத்த விகாரைகளில் பெளத்த கொடிகளை பறக்கவிடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இறைமை, நிரந்தர சமாதானம் ஏற்பட மற்றும் மல்வத்த மகா நாயக்க ஆகியோர்களினது ஆலோசனையின் பேரில் ஸ்ரீதலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் திலங்க தேவ பண்டார இதனை ஏற்பாடு செய்துள்ளார்.

செல்போன் மூலம் துப்பு துலங்கியது; நால்வரின் படங்களும் வெளியீடு

20090302.jpgபாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலில் மொத்தம் 12 தீவிரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர். தாக்குதலுக்கு முன்பு தீவிரவாதிகள் பயன்படுத்திய செல்போன் எண் ஒன்று பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதைவைத்து துப்பு துலக்கி இருக்கிறார்கள் பாகிஸ்தான் பொலிஸார்.

அந்த செல்போன் ரஹீம் யார்கான் என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை பொலிஸார் பிடித்துச் சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர் தவிர மேலும் 9 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் குவெட்டா நகரைச் சேர்ந்தவர்கள். 3 பேர் லாகூரையும், 2 பேர் கராச்சியையும் சேர்ந்தவர்கள்.

இது பற்றி மூத்த பொலிஸ் அதிகாரி ஹபிபூர் ரகுமான் கூறும் போது, “நாங்கள் லாகூரிலும் பக்கத்து மாவட்டங்களிலும் சோதனை நடத்தி சிலரை கைது செய்து இருக்கிறோம். அவர்களைப் பற்றிய விவரங்களை இப்போது வெளியே சொல்ல முடியாது. ஆனால் முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன” என்றார். லாகூரில் உள்ள மாணவர் விடுதி ஒன்றில் பொலிஸார் சோதனை நடத்தினார்கள். அங்கு இரத்தக்கறை படிந்த ஆடைகள் கிடைத்தன. இது தீவிரவாதிகள் ஆடை என்று கருதுகின்றனர்.

எனவே இந்த தாக்குதலில் மாணவர்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மாணவர்கள் சிலரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் முடிந்த பிறகு தீவிரவாதிகள் இங்கு சிறிய நேரம் தங்கியிருந்து விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஒருவர் கமராவில் பதிவு செய்து இருந்தார். இந்த படம் ஏற்கனவே வெளியானது. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு கமராவில் இந்த காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. தாக்குதல் நடத்துவதற்காக தீவிரவாதிகள் துப்பாக்கியுடனும் சாவகாசமாக நடந்து வருவதும், தாக்குதல் நடத்துவதும் தெளிவாக பதிவாகி இருக்கிறது.

தாக்குதல் முடிந்த பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்கின்றனர். அதுவும் கேமராவில் பதிவாகி உள்ளது. 12 தீவிரவாதிகள் தான் தாக்குதல் நடத்தியதாக கருதப்பட்டது. இதை கேமராவில் பதிவாகி இருக்கும் படங்களை பார்க்கும் போது 14 தீவிரவாதிகள் தாக்குதலில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது.

கோரமின்றி சபை 5 தடவை ஒத்திவைப்பு

srilanka-parliament.jpgபாராளு மன்றத்தில் நேற்று (05) சபை நடவடிக்கைகள் இடம்பெற்ற போது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் பிரசன்னமாகி இராததால் காலை முதல் மாலை வரை ஐந்து தடவை கோர மணி ஒலிக்கச் செய்யப்பட்டது. இதில் அரை மணி நேரத்திற்குள் நான்கு தடவை ஒலி எழுப்பப்பட்டது. வரிக்கட்டளைச் சட்ட மூலங்கள் மீதான விவாதத்தில் ஐ. தே. க. எம்.பி., ரவி கருணாநாயக்க உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அவ்வேளையில் சபையில் கோரத்துக்கான உறுப்பினர்கள் இருக்கவில்லை. இது குறித்து சபைக்குத் தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் ரவிகருணாநாயக்க எம். பி. சுட்டிக்காட்டினார். இதனையடுத்து கோர மணி ஒலிக்கச் செய்யப்பட்டதும், ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள் சிலர் வருகை தந்தனர். ரவி எம்.பி. உரையைத் தொடர்ந்த சில நிமிட நேரத்திற்குள் மீண்டும் எம். பி.க்கள் சபையிலிருந்து வெளியேறினர். இதனால் மீண்டும் மணி ஒலித்தது. எனினும் எம்.பிக்கள் சபைக்குள் வருவதும் போவதுமாய் இருந்தனர். இதனால் ஐந்து தடவைகள் கோர மணி ஒலிக்க வேண்டியதாயிற்று.

கோர மணி ஒலித்ததும் முகத்தைச் சுளித்துக் கொண்டு வந்த சில ஆளுந்தரப்பு உறுப்பினர்கள், ரவி கருணாநாயக்க எம். பி.யிடம் குறுக்குக் கேள்விகளைக் கேட்டு அவரை குடைந்தெடுத்தனர். அமைச்சர்கள் பலர் இருந்தும் எதிர்க்கட்சியினரின் கருத்துக்களைச் செவிமடுப்பதற்கு சபையில் எவரும் இல்லையே என ஐ. தே. க. எம்.பிக்கள் சுட்டிக் காட்டினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, ‘எமக்கு சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்குப் 10 நிமிடங்கள் போதுமானது. எதிர்க்கட்சியினருக்காகவே விவாதம் நடத்தப்படுகிறது. எனவே, எதிர்க்கட்சியினர் அல்லவா சபையில் இருக்க வேண்டும் என்றார். அதேநேரம், ‘ரவி கருணாநாயக்க எம்.பியின் உரையைக் கேட்க ஐ. தே. க. வினரே விரும்பவில்லை. அதனால் தான் அவர்கள் சபையில் இல்லை’ என்று மேலும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது. வரிக் கட்டளைச் சட்ட மூலங்கள் ஐந்தும் சபையில் நிறைவேற்றப்பட்டன. இரண்டு கட்டளைச் சட்டங்கள் வாக்கெடுப்பின் மூலமாகவும், ஏனைய மூன்றும் வாக்கெடுப்பு இல்லாமலும் நிறைவேற்றப்பட்டன.

இலங்கை அணிமீதான தாக்குதல் வெட்கக் கேடானது : இம்ரான்கான்

imran-khan.jpgஇலங்கை கிரிக்கெட் அணியினர் மீது லாகூரில் வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் குறித்து தான் மிகுந்த கவலையும் வெட்கமும் அடைவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வி ஒன்றின் போதே அவர் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளார். மேலும், அவர் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை அணிக்குப் பாகிஸ்தானில் வைத்து அளிக்கப்பட்ட பாதுகாப்பு போதுமானதாக இல்லை. பல்வேறு தீவிரவாத அச்சுறுத்தல்கள் லாகூரில் இருந்தமையை கருத்திற் கொண்டு இலங்கை அணிக்கான பாதுகாப்பை அரசாங்கம் மேலும் பலப்படுத்தியிருக்கவேண்டும் ” என்றார்.

பாடசாலையில் காதலர்தினம் கொண்டாடிய அதிபரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

love.jpg எம்பிலிப்பிட்டிய பகுதியில் உள்ள மத்திய கல்லூரியில் காதலர் தினத்தை கொண்டாடியதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இங்குள்ள கல்வி அலுவலகம் முன்பாகவும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒழுக்கமுள்ள மாணவ சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய அதிபர் மாணவர்களிடையே காதலைத் தூண்டிவிட்டு அவர்களின் கல்வியைப் பாழாக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இக்கல்லூரியில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது தொடர்பாக கல்வியமைச்சும் விசாரணைகளை நடத்திவருகிறது.