பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலில் மொத்தம் 12 தீவிரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர். தாக்குதலுக்கு முன்பு தீவிரவாதிகள் பயன்படுத்திய செல்போன் எண் ஒன்று பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதைவைத்து துப்பு துலக்கி இருக்கிறார்கள் பாகிஸ்தான் பொலிஸார்.
அந்த செல்போன் ரஹீம் யார்கான் என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை பொலிஸார் பிடித்துச் சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர் தவிர மேலும் 9 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் குவெட்டா நகரைச் சேர்ந்தவர்கள். 3 பேர் லாகூரையும், 2 பேர் கராச்சியையும் சேர்ந்தவர்கள்.
இது பற்றி மூத்த பொலிஸ் அதிகாரி ஹபிபூர் ரகுமான் கூறும் போது, “நாங்கள் லாகூரிலும் பக்கத்து மாவட்டங்களிலும் சோதனை நடத்தி சிலரை கைது செய்து இருக்கிறோம். அவர்களைப் பற்றிய விவரங்களை இப்போது வெளியே சொல்ல முடியாது. ஆனால் முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன” என்றார். லாகூரில் உள்ள மாணவர் விடுதி ஒன்றில் பொலிஸார் சோதனை நடத்தினார்கள். அங்கு இரத்தக்கறை படிந்த ஆடைகள் கிடைத்தன. இது தீவிரவாதிகள் ஆடை என்று கருதுகின்றனர்.
எனவே இந்த தாக்குதலில் மாணவர்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மாணவர்கள் சிலரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் முடிந்த பிறகு தீவிரவாதிகள் இங்கு சிறிய நேரம் தங்கியிருந்து விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஒருவர் கமராவில் பதிவு செய்து இருந்தார். இந்த படம் ஏற்கனவே வெளியானது. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு கமராவில் இந்த காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. தாக்குதல் நடத்துவதற்காக தீவிரவாதிகள் துப்பாக்கியுடனும் சாவகாசமாக நடந்து வருவதும், தாக்குதல் நடத்துவதும் தெளிவாக பதிவாகி இருக்கிறது.
தாக்குதல் முடிந்த பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்கின்றனர். அதுவும் கேமராவில் பதிவாகி உள்ளது. 12 தீவிரவாதிகள் தான் தாக்குதல் நடத்தியதாக கருதப்பட்டது. இதை கேமராவில் பதிவாகி இருக்கும் படங்களை பார்க்கும் போது 14 தீவிரவாதிகள் தாக்குதலில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது.