பாராளு மன்றத்தில் நேற்று (05) சபை நடவடிக்கைகள் இடம்பெற்ற போது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் பிரசன்னமாகி இராததால் காலை முதல் மாலை வரை ஐந்து தடவை கோர மணி ஒலிக்கச் செய்யப்பட்டது. இதில் அரை மணி நேரத்திற்குள் நான்கு தடவை ஒலி எழுப்பப்பட்டது. வரிக்கட்டளைச் சட்ட மூலங்கள் மீதான விவாதத்தில் ஐ. தே. க. எம்.பி., ரவி கருணாநாயக்க உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அவ்வேளையில் சபையில் கோரத்துக்கான உறுப்பினர்கள் இருக்கவில்லை. இது குறித்து சபைக்குத் தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் ரவிகருணாநாயக்க எம். பி. சுட்டிக்காட்டினார். இதனையடுத்து கோர மணி ஒலிக்கச் செய்யப்பட்டதும், ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள் சிலர் வருகை தந்தனர். ரவி எம்.பி. உரையைத் தொடர்ந்த சில நிமிட நேரத்திற்குள் மீண்டும் எம். பி.க்கள் சபையிலிருந்து வெளியேறினர். இதனால் மீண்டும் மணி ஒலித்தது. எனினும் எம்.பிக்கள் சபைக்குள் வருவதும் போவதுமாய் இருந்தனர். இதனால் ஐந்து தடவைகள் கோர மணி ஒலிக்க வேண்டியதாயிற்று.
கோர மணி ஒலித்ததும் முகத்தைச் சுளித்துக் கொண்டு வந்த சில ஆளுந்தரப்பு உறுப்பினர்கள், ரவி கருணாநாயக்க எம். பி.யிடம் குறுக்குக் கேள்விகளைக் கேட்டு அவரை குடைந்தெடுத்தனர். அமைச்சர்கள் பலர் இருந்தும் எதிர்க்கட்சியினரின் கருத்துக்களைச் செவிமடுப்பதற்கு சபையில் எவரும் இல்லையே என ஐ. தே. க. எம்.பிக்கள் சுட்டிக் காட்டினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, ‘எமக்கு சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்குப் 10 நிமிடங்கள் போதுமானது. எதிர்க்கட்சியினருக்காகவே விவாதம் நடத்தப்படுகிறது. எனவே, எதிர்க்கட்சியினர் அல்லவா சபையில் இருக்க வேண்டும் என்றார். அதேநேரம், ‘ரவி கருணாநாயக்க எம்.பியின் உரையைக் கேட்க ஐ. தே. க. வினரே விரும்பவில்லை. அதனால் தான் அவர்கள் சபையில் இல்லை’ என்று மேலும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது. வரிக் கட்டளைச் சட்ட மூலங்கள் ஐந்தும் சபையில் நிறைவேற்றப்பட்டன. இரண்டு கட்டளைச் சட்டங்கள் வாக்கெடுப்பின் மூலமாகவும், ஏனைய மூன்றும் வாக்கெடுப்பு இல்லாமலும் நிறைவேற்றப்பட்டன.