அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பேராசிரியர் கங்கநாத் திஸாநாயக்க வீடு திரும்பியுள்ளார்

rupavahini.jpgவெள்ளை வானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்ட ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் தம்மிக்க கங்கநாத் திஸாநாயக்க வீடு திரும்பியுள்ளார். தனது முன்னாள் கட்சி ஆதரவாளர்களே தன்னைக் கடத்தினார்கள் என அவர் கூறியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோட்டே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஊடகத்துறை பேராசிரியரும் முன்னாள் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவருமான பேராசிரியர் தம்மிக்க கங்கநாத் திஸாநாயக்க நேற்று புதன்கிழமை இரவு வெள்ளை வானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மகரகம கொட்டாவ மத்தேகொடவிலுள்ள தனது வீட்டில் இவர் இருந்தபோதே நேற்று இரவு 9.45 மணியளவில் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இவரது வீட்டினுள் நுழைந்த ஐவர் இவரைக் கடத்திச் சென்றதாக உறவினர்கள் அவசரப் பொலிஸ் சேவையான “119′ க்கு உடனடியாக அறிவித்ததாகவும் பின்னர் அவர்கள் தங்களுக்கும் முறைப்பாடு செய்ததாகவும் ககாத்துடுவ பொலிஸார் தெரிவித்தனர். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது பேராசிரியர் திஸாநாயக்க அவரது ஊடக ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை படையினர் வசம் -பிரிகேடியர் உதய நாணயக்கார தகவல்

udaya_nanayakkara_brigediars.jpgமுல்லைத் தீவு பிரதேசத்தில் புலிகளுக்கெதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் இன்று காலை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டு வந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு முன்னரங்கப் பகுதிகளில் நேற்று இரவு தாக்குதல்களை ஆரம்பித்த படையினர் இன்று காலையில் இந்த வைத்தியசாலையைக் கைப்பற்றியுள்ளதோடு அப்பிரதேசத்தில் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

புலிகளுக்கு முக்கியமானதாகக் காணப்பட்ட இந்த வைத்தியசாலை கைப்பற்றப்பட்டுள்ளமை படை நடவடிக்கைகளில் ஈட்டப்பட்ட மற்றுமொரு பாரிய வெற்றி என  தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹ{லுகல்ல தெரிவித்தார். 

மதத்தலங்களின் மீது புலிகளின் 10வது தாக்குதல்: லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

l-yaappa-abayawardana.jpgபுலிகள் மதத் தலங்களை இலக்கு வைத்து நடத்தியிருக்கும் 10வது தாக்குதல் தேசிய மீலாத் விழா நிகழ்வில் நடத்தப்பட்டதாகும். இந்த மோசமான தாக்குதலை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன. நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள இத்தகைய சூழலில் முஸ்லிம் நாடுகள் உட்பட சகல நாடுகளும் ஆயுதத்தைக் கீழே வைக்க வேண்டுமென்று புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங்கீ மூன், புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டுமென மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளதுடன் வன்னி மக்களை சுதந்திரமாக வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டுமெனவும் பல சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளின் இவ்வலியுறுத்தலானது புலிகள் மக்களை பணயக் கைதிகளாக அடிமைப்படுத்தி வைத்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று தகவல், ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் விளக்கமளித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:-

வடக்கில் தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவிவரும் விடுதலைப்புலிகள் தென்பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டு இன, மத ரீதியான குழப்பங்களை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளனர். மாத்தறை கொடப்பிட்டியவில் இடம்பெற்றுள்ள தாக்குதலும் இத்தகையதே. 1985ம் ஆண்டு ஸ்ரீமாபோதி விஹாரையின் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து பத்து சமயத் தலங்கள் மீதான தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டுள்ளனர். சர்வதேச நாடுகளை நோக்குகையில் இத்தகைய சமய வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் எதேச்சையாக நடப்பவையேயல்லாமல் திட்டமிட்டு மேற்கொள்பவையல்ல. புலிகளின் இச்செயல்கள் சர்வதேசத்தின் கண்டனத்திற்கு இலக்காகி வருகின்றன.

மாத்தறை கொடப்பிட்டிய தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசு உரிய கவனம் செலுத்தியுள்ளது. இச் சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 47 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். மாத்தறை மாவட்டத்தைப் பொறுத்தவரை இது பாரிய இழப்பாகும். இம்மாவட்டத்தில் மக்களுடன் நெருக்கமாக சேவை செய்த பல பிரதேச அரசியல் பிரதிநிதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தகைய மோசமான சம்பவமொன்று இடம்பெற்ற போதும் மத ரீதியான குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட்டனர். ஊடகங்கள், மருத்துவத்துறையினர் இச்சம்பவத்தின் போது வழங்கிய உறுதுணைக்காக அரசாங்கம் நன்றி தெரிவிக்கிறது. அதேவேளை இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசாங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளவத்தையில் ஆசிரியை வெள்ளை வானில் கடத்தல்

white-van.jpg
வெள்ளவத்தை, பஸல்ஸ் ஒழுங்கையில் வைத்து தமிழ் ஆசிரியை ஒருவர் நேற்று (மார். 10) மாலை கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெள்ளவத்தைப் பொலிஸிலும் மக்கள் கண்காணிப்புக் குழுவிலும் முறையிட்ப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழு அமைப்பாளரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கையில், இச்சம்பவம் தொடர்பில் தம்மிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நேற்று  மாலை 4.30 மணியளவில வெள்ளவத்தை  பஸல்ஸ் ஒழுங்கையில் தனது வீட்டுக்கு முன்பாக பெண்ணொருவருடன் பேசிக் கொண்டிருந்த போது வெள்ளை வானில் வந்தோர் அவரை பலாத்காரமாக ஏற்றிச் சென்றனர். ராஜகிரியவிலுள்ள ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 31 வயதான ஆசிரியையே கடத்தப்பட்டவரென மனோ கணேசன்  தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சார நோட்டீஸில் இலங்கை பிரச்சனை பற்றி அச்சடிக்க தடை

tamil_nadu.jpgதமிழகத்தில் வருகிற மே 13-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பணியை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்தவும், வாக்காளர்கள் அச்சமின்றி, குழப்பமின்றி வாக்களிக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரத்துக்கு நோட்டீஸ் அடிக்கும் அச்சகங்களுக்கும் தேர்தல் தொடர்பாக வெளியிடும் நோட்டீஸ்கள், சுவரொட்டிகள் தொடர்பாகவும் புதிய விதிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

-வன்முறை, கலவரங்களை ஏற்படுத்தும் விதமாக நோட்டீஸ் அடித்துக் கொடுக்கக்கூடாது.
 
-ஜாதி, மத அமைப்புகள் கொடுக்கும் உணர்ச்சியை, கிளர்ச்சியை தூண்டும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் அச்சடிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
 
-மத உணர்வை தூண்டும் சட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் கேலி சித்தரங்களை அச்சடிப்பதை கைவிட வேண்டும்.
 
-தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புக்கும், ஜனநாய கத்துக்கும் எதிரான சுவரொட்டிகள் அடிக்கவே கூடாது.
 
-இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து எவ்வித வாசகமும் இடம்பெறவே கூடாது.
 
-அச்சகங்கள் மற்றும் பிளக்ஸ் போர்டு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் ஆர்டர்களை தங்கள் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தணிக்கை செய்து கொள்ள வேண்டும்.

தரைவழிப் போக்குவரத்து ஆரம்பித்ததால் யாழ்.குடாவில் பொருட்கள் விலை வீழ்ச்சி

lorries.jpgயாழ்ப்பாண குடாநாட்டுக்கு தரைவழிப்பாதையூடாக அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளதையடுத்து குடாநாட்டில் பொருட்களின் விலைகளும் குறைவடையத் தொடங்கியுள்ளன. அத்துடன், தட்டுப்பாடு ஏற்பட்டுவந்த பொருட்களும் சந்தைக்கு வரத்தொடங்கியுள்ளதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏ9 பாதை மூடப்பட்டதையடுத்து குடாநாட்டுக்கு கப்பல் மூலம் இதுவரை சகல பொருட்களும் எடுத்துவரப்பட்டன. இதனால், அதிகளவு விலை கொடுத்து மக்கள் பொருட்களை வாங்கிவந்தனர்.

அத்துடன், கப்பல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டால் பொருட்கள் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்தே விற்கப்படுகின்றன. கப்பல்கள் மூலம் பொருட்களை கொண்டுவரும்போது கொழும்பில் கடைகளில் இருந்து லொறிகளுக்கு ஏற்றப்பட்டு பின்னர் துறைமுகத்தில் இறக்கப்பட்டு மீண்டும் கப்பலில் ஏற்றப்படுகின்றன.

குடாநாட்டில் பருத்தித்துறை அல்லது காங்கேசன்துறைமுகத்தில் இறக்கி லொறிகளில் ஏற்றப்பட்டு பின்னர் கடைகளில் இறக்கப்படுகின்றன. இதனால், ஏற்றி இறக்கும் கூலிகள், கப்பல் கட்டணம் என்பவற்றுடன் இலாபத்தையும் சேர்த்து வர்த்தகர்கள் பொதுமக்களிடம் அறவிடவேண்டியிருந்தது.

இதுவே, குடாநாட்டில் பொருட்கள் அதிகமாக விற்பனை செய்வதற்கு முக்கிய காரணமாகும் என யாழ்.செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, குடாநாட்டில் தடைப்பட்டுள்ள நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்கு தரைப்பாதையூடாக சிமெந்தை எடுத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முத்துக்குமார் மரணம் உள்ளத்தை வலிக்க செய்தது!: கருணாநிதி அறிக்கை

karunanithi.jpgமருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற போது என் உடல் வலியையும் மீறி, உள்ளத்தை வலிக்கச் செய்யும் அளவுக்கு முத்துக்குமார் தீக்குளித்து மரணமடைந்த செய்தி வந்தது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய உடல் வலியையும் மீறி – உள்ளத்தை வலிக்கச் செய்கின்ற அளவிற்கு சென்னையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர், முத்துக்குமார் என்பவர் இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து மாண்டுவிட்டார் என்ற செய்தி மருத்துவமனையிலே உள்ள என்னை அடைந்து மனதை பெரிதும் பாதித்தது. கழகப் பொதுச் செயலாளரைத் தொடர்பு கொண்டு, அத்தகைய தற்கொலைகளை ஊக்கப்படுத்தக் கூடாது என்ற வகையில் அறிக்கை ஒன்றை வெளியிடச் செய்தேன். பொருளாளர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு, பேரவையில் அவர் உரையாற்றும்போது – தீக்குளித்து மாண்ட முத்துக்குமாரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன். ஆனால் அவரது மறைவுக்கு கழகத்தின் சார்பில் இரங்கல் செலுத்தச் சென்ற வடசென்னை மாவட்ட செயலாளர் மீது அரசியல் கண்ணோட்டத்தோடு அ.தி.மு.க., ம.தி.மு.க.வினர் கற்களை வீசி தாக்க முயன்றதாகவும், அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியினைக் கூட வாங்க மறுத்துவிட்டதாகவும் செய்தி வந்து, ஒரு இளைஞரின் தியாகச் செயலைக் கூட அரசியல் ஆக்குகிறார்களே என்றெண்ணி வேதனையடைந்தேன். இவ்வாறு கூறியுள்ளார்

ஓமந்தையில் நேற்று பொலிஸ் நிலையம் திறப்பு

sri-lanka-police.jpgவவுனியா ஓமந்தையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை புதிதாகப் பொலிஸ் நிலையமொன்று திறக்கப்பட்டுள்ளது. வன்னிக்கான இராணுவச் சோதனை நிலையமாக ஓமந்தை முன்னர் விளங்கிய நிலையில் தற்போது அங்கு நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் பொலிஸ் நிலையம் திறக்கப்பட்டது.

இந்தப் பொலிஸ் நிலையத்தைப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய வைபவரீதியாகத் திறந்து வைத்தார்.

வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், வவுனியா நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் நோக்குடன் பொலிஸ் நிலையங்கள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பல பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஏ9 வீதியில் ஓமந்தை முதல் முகமாலை வரையும் பொலிஸ் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அக்குரஸ்ஸ தாக்குதலுக்கு ஹக்கீம் கடும் கண்டனம்

rauff_hakeem.jpgதேசிய மீலாத் விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் அக்குரஸ்ஸ, கொடபிட்டியவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது அங்கு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மிகவும் மிலேச்சத்தனமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரவூப் ஹக்கீமின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; “சம்பவம் பற்றிக்கேள்விப்பட்டவுடன் நான் அங்கு விரைந்தேன் கொடபிட்டிய போர்வைப் பள்ளிவாசல் அருகே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது உலக முஸ்லிம்கள் தம் உயிரை விடவும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தையொட்டிய தேசிய நிகழ்வின் அங்குரார்ப்பணத்தின் போது இப் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது பலத்த கண்டனத்துக்குரியது.

விடுதலைப்புலிகள் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீதும், ஹஜ் யாத்திரைகள் மீதும், எல்லைப்புறக் குக்கிராமங்களில் வசித்த அப்பாவி முஸ்லிம்கள் மீதும் மேற்கொண்ட பாரிய படுகொலைச் சம்பவங்களின் பின்னர் தெற்கில் இப்பொழுது முதன் முதலாக முஸ்லிம்களின் பிரதான நிகழ்வொன்றின் போது படுமோசமான முறையில் இக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுவாக அனைத்து இன மக்களும் குறிப்பாக முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர். வடக்கில் அரசாங்கம் முழுஅளவிலான யுத்தத்தை முடுக்கிவிட்டுள்ள நிலையில் தெற்கில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் மேலோங்கியிருந்த சூழ்நிலையில் இந்த நிகழ்வின் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

அரசியல்வாதிகளை அழைத்துவந்து சமய நிகழ்ச்சிகளை அரசியல்மயப்படுத்தும் காரணத்தினால் சாதாரண அப்பாவிப் பொதுமக்கள் பேராபத்திற்கு ஆளாகின்றனர். இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் இனரீதியான புரிந்துணர்வுகளுக்கு பாரிய பின்னடைவையும் இடைவெளியையும் ஏற்படுத்தக் கூடியவை.

இந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் இலங்கைத் தமிழருக்காகவே பேசும் – ஜெயலலிதா கூறுகிறார்

jayalalitha.jpgஇலங்கைத் தமிழர் விவகாரம் இந்திய பாராளுமன்றத் தேர்தலில் திட்டவட்டமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து தமிழ்நாட்டிலுள்ள சகல தரப்பினரும் அதிகளவுக்கு உடல், உள ரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைத் தமிழருக்கு ஆதரவை வெளிப்படுத்தி திங்கட்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதமிருந்த ஜெயலலிதாவிடம் இலங்கைத் தமிழர் பிரச்சினையானது தேர்தல் விவகாரமாக அமையுமா என்று கேட்கப்பட்ட போது, “அவர்கள் தொடர்பாகவே தேர்தல் பெறுபேறுகள் அமையும். தமது சகோதரர்கள், சகோதரிகள், பிள்ளைகள் கொல்லப்படுவது குறித்து தமிழக மக்கள் அதிகளவுக்கு கவலை அடைந்துள்ளனர்’ என்று “இந்து’ பத்திரிகைக்கு ஜெயலலிதா கூறியுள்ளார்.

அத்துடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் இலங்கைத் தமிழருக்கு எந்த உதவியும் அளிக்கவில்லையென்ற பரவலான அபிப்பிராயம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. அரசுக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் அவர்கள் துரிதமாக உணவு, மருந்துப் பொருட்களை இப்போது அனுப்பியிருப்பார்கள். இனப் படுகொலையை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் வெற்று வார்த்தைகளையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இரு அரசுகளுமே இலங்கைத் தமிழருக்கு நிவாரணம் வழங்குவதைப் புறக்கணித்து குற்றம் இழைத்திருக்கின்றன என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இலங்கை அரசுக்கு நவீன ஆயுதங்கள், உபகரணங்களையும் இராணுவத்திற்கு பயிற்சியையும் இந்திய அரசாங்கம் விநியோகித்து வருவது தொடர்பான செய்திகளை சுட்டிக்காட்டிய ஜெயலலிதா ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு இதனை செய்வது பொதுவான விடயமாக இருந்தாலும் யாருக்கு எதிராக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதே இங்குள்ள கேள்வியாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை அரசு தனது இராணுவப் பலத்தை தமிழர்களுக்கு எதிராக பிரயோகிக்கின்றது என்பதே உண்மையாகும். புலிகளுடன் தான் சண்டையிடுவதாக அது கூறக்கூடும். ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கையானது அப்பாவித் தமிழர்களும் இலக்காக்கப்படுகின்றனர் என்பதையே தெளிவாகக் காட்டுகின்றது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தனது உண்ணாவிரதம் தொடர்பாக கருணாநிதியின் விமர்சனம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர் நான் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பேன் என்பது யாருக்கும் தெரியும்’. என்னால் செய்ய முடியாதது தொடர்பாக நான் ஒருபோதும் உறுதிமொழி அளிக்கமாட்டேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்து ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். கட்சிச் செயலாளர் என்ற முறையில் 1 கோடி ரூபாவும் தனிப்பட்ட ரீதியில் 5 இலட்சம் ரூபாவும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதியத்திற்கு ஜெயலலிதா வழங்கியுள்ளார்.

உண்டியல் நிதிக்கு வைகோவும் ரூபா 5 இலட்சம் வழங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய (மார்க்ஸிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா. பாண்டியன், புதிய தமிழகத் தலைவர் கே.கிருஷ்ணசாமி , தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட அ.தி.மு.க. தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.