இலங்கைத் தமிழர் விவகாரம் இந்திய பாராளுமன்றத் தேர்தலில் திட்டவட்டமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து தமிழ்நாட்டிலுள்ள சகல தரப்பினரும் அதிகளவுக்கு உடல், உள ரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்திருக்கிறார்.
இலங்கைத் தமிழருக்கு ஆதரவை வெளிப்படுத்தி திங்கட்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதமிருந்த ஜெயலலிதாவிடம் இலங்கைத் தமிழர் பிரச்சினையானது தேர்தல் விவகாரமாக அமையுமா என்று கேட்கப்பட்ட போது, “அவர்கள் தொடர்பாகவே தேர்தல் பெறுபேறுகள் அமையும். தமது சகோதரர்கள், சகோதரிகள், பிள்ளைகள் கொல்லப்படுவது குறித்து தமிழக மக்கள் அதிகளவுக்கு கவலை அடைந்துள்ளனர்’ என்று “இந்து’ பத்திரிகைக்கு ஜெயலலிதா கூறியுள்ளார்.
அத்துடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் இலங்கைத் தமிழருக்கு எந்த உதவியும் அளிக்கவில்லையென்ற பரவலான அபிப்பிராயம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. அரசுக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் அவர்கள் துரிதமாக உணவு, மருந்துப் பொருட்களை இப்போது அனுப்பியிருப்பார்கள். இனப் படுகொலையை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் வெற்று வார்த்தைகளையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இரு அரசுகளுமே இலங்கைத் தமிழருக்கு நிவாரணம் வழங்குவதைப் புறக்கணித்து குற்றம் இழைத்திருக்கின்றன என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இலங்கை அரசுக்கு நவீன ஆயுதங்கள், உபகரணங்களையும் இராணுவத்திற்கு பயிற்சியையும் இந்திய அரசாங்கம் விநியோகித்து வருவது தொடர்பான செய்திகளை சுட்டிக்காட்டிய ஜெயலலிதா ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு இதனை செய்வது பொதுவான விடயமாக இருந்தாலும் யாருக்கு எதிராக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதே இங்குள்ள கேள்வியாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கை அரசு தனது இராணுவப் பலத்தை தமிழர்களுக்கு எதிராக பிரயோகிக்கின்றது என்பதே உண்மையாகும். புலிகளுடன் தான் சண்டையிடுவதாக அது கூறக்கூடும். ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கையானது அப்பாவித் தமிழர்களும் இலக்காக்கப்படுகின்றனர் என்பதையே தெளிவாகக் காட்டுகின்றது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தனது உண்ணாவிரதம் தொடர்பாக கருணாநிதியின் விமர்சனம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர் நான் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பேன் என்பது யாருக்கும் தெரியும்’. என்னால் செய்ய முடியாதது தொடர்பாக நான் ஒருபோதும் உறுதிமொழி அளிக்கமாட்டேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்து ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். கட்சிச் செயலாளர் என்ற முறையில் 1 கோடி ரூபாவும் தனிப்பட்ட ரீதியில் 5 இலட்சம் ரூபாவும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதியத்திற்கு ஜெயலலிதா வழங்கியுள்ளார்.
உண்டியல் நிதிக்கு வைகோவும் ரூபா 5 இலட்சம் வழங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய (மார்க்ஸிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா. பாண்டியன், புதிய தமிழகத் தலைவர் கே.கிருஷ்ணசாமி , தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட அ.தி.மு.க. தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.