தேசிய மீலாத் விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் அக்குரஸ்ஸ, கொடபிட்டியவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது அங்கு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மிகவும் மிலேச்சத்தனமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரவூப் ஹக்கீமின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; “சம்பவம் பற்றிக்கேள்விப்பட்டவுடன் நான் அங்கு விரைந்தேன் கொடபிட்டிய போர்வைப் பள்ளிவாசல் அருகே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது உலக முஸ்லிம்கள் தம் உயிரை விடவும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தையொட்டிய தேசிய நிகழ்வின் அங்குரார்ப்பணத்தின் போது இப் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது பலத்த கண்டனத்துக்குரியது.
விடுதலைப்புலிகள் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீதும், ஹஜ் யாத்திரைகள் மீதும், எல்லைப்புறக் குக்கிராமங்களில் வசித்த அப்பாவி முஸ்லிம்கள் மீதும் மேற்கொண்ட பாரிய படுகொலைச் சம்பவங்களின் பின்னர் தெற்கில் இப்பொழுது முதன் முதலாக முஸ்லிம்களின் பிரதான நிகழ்வொன்றின் போது படுமோசமான முறையில் இக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுவாக அனைத்து இன மக்களும் குறிப்பாக முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர். வடக்கில் அரசாங்கம் முழுஅளவிலான யுத்தத்தை முடுக்கிவிட்டுள்ள நிலையில் தெற்கில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் மேலோங்கியிருந்த சூழ்நிலையில் இந்த நிகழ்வின் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
அரசியல்வாதிகளை அழைத்துவந்து சமய நிகழ்ச்சிகளை அரசியல்மயப்படுத்தும் காரணத்தினால் சாதாரண அப்பாவிப் பொதுமக்கள் பேராபத்திற்கு ஆளாகின்றனர். இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் இனரீதியான புரிந்துணர்வுகளுக்கு பாரிய பின்னடைவையும் இடைவெளியையும் ஏற்படுத்தக் கூடியவை.