தரைவழிப் போக்குவரத்து ஆரம்பித்ததால் யாழ்.குடாவில் பொருட்கள் விலை வீழ்ச்சி

lorries.jpgயாழ்ப்பாண குடாநாட்டுக்கு தரைவழிப்பாதையூடாக அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளதையடுத்து குடாநாட்டில் பொருட்களின் விலைகளும் குறைவடையத் தொடங்கியுள்ளன. அத்துடன், தட்டுப்பாடு ஏற்பட்டுவந்த பொருட்களும் சந்தைக்கு வரத்தொடங்கியுள்ளதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏ9 பாதை மூடப்பட்டதையடுத்து குடாநாட்டுக்கு கப்பல் மூலம் இதுவரை சகல பொருட்களும் எடுத்துவரப்பட்டன. இதனால், அதிகளவு விலை கொடுத்து மக்கள் பொருட்களை வாங்கிவந்தனர்.

அத்துடன், கப்பல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டால் பொருட்கள் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்தே விற்கப்படுகின்றன. கப்பல்கள் மூலம் பொருட்களை கொண்டுவரும்போது கொழும்பில் கடைகளில் இருந்து லொறிகளுக்கு ஏற்றப்பட்டு பின்னர் துறைமுகத்தில் இறக்கப்பட்டு மீண்டும் கப்பலில் ஏற்றப்படுகின்றன.

குடாநாட்டில் பருத்தித்துறை அல்லது காங்கேசன்துறைமுகத்தில் இறக்கி லொறிகளில் ஏற்றப்பட்டு பின்னர் கடைகளில் இறக்கப்படுகின்றன. இதனால், ஏற்றி இறக்கும் கூலிகள், கப்பல் கட்டணம் என்பவற்றுடன் இலாபத்தையும் சேர்த்து வர்த்தகர்கள் பொதுமக்களிடம் அறவிடவேண்டியிருந்தது.

இதுவே, குடாநாட்டில் பொருட்கள் அதிகமாக விற்பனை செய்வதற்கு முக்கிய காரணமாகும் என யாழ்.செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, குடாநாட்டில் தடைப்பட்டுள்ள நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்கு தரைப்பாதையூடாக சிமெந்தை எடுத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • john
    john

    யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கானதரை வழிப்பாதை பாதை திறக்கப்பட்டதற்காக விடுதலைப்புலிகளிற்கே நாம் நன்றி சொல்லுகின்றோம்.ஏனென்றால், விடுதலைப்புலிகள் தந்திரோபாயமாக பின்வாங்கவில்லை என்றால் இது சாத்தியப்பட்டிருக்காது.ஆகவே தலைவருக்கு எல்லாரும் ஒரு ஓப்போடுங்கோ.

    Reply