அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கிழக்கில் 60 சு. கட்சி அலுவலகங்கள்

karuna1.jpgகிழக்கு மாகாணத்தில் ஏப்ரல் மாதத்தில் 60 சுதந்திரக் கட்சியின் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் அவ்வலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன. முதலாவது அலுவலகம் எதிர்வரும் 6ம் திகதி மட்டக்களப்பில் மாவட்ட அலுவலகமாகத் திறக்கப்படும். கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

மேல் மாகாண சபை தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்

மேல் மாகாண சபைத் தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (02) நாளையும் (03) இடம்பெற உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இதற்கான சகல ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள தோடு வாக்களிப்பு நடைபெறும் அரச நிறுவனங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிரி தெரிவித்தார்.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 35,915 பேர் தகுதி பெற்றுள்ளனர். 5,379 விண்ணப்பங்கள் திணைக்கள த்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தன. இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 15,789 பேரும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 10,926 பேரும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 8,699 பேரும் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

இதேவேளை தேர்தலுக்கான வாக்களார் அட்டைகள் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

தமது உறவினர்களுடனோ அல்லது வெளிநாடுகளில் உள்ளவர்களுடனோ தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி வசதி- அமைச்சர் றிஷாத் பதியுதீன்

risadbadurudeen.jpgவிடுவிக் கப்படாத பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்காக விசேட அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட அடையாள அட்டைகள் மூலம் அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும்,  தங்களது உறவினர்களை நேரடியாகச் சந்திப்பதற்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. மேலும் இங்கு தங்கியுள்ளவர்கள் தமது உறவினர்களுடனோ அல்லது வெளிநாடுகளில் உள்ளவர்களுடனோ தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை,வவுனியாவில் வேறு நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த 60 வயதைத் தாண்டிய சுமார் 400க்கும் மேற்பட்டோரை அவர்களின் நிலைமையக் கருத்திற்கொண்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தவிர தமது குடும்ப உறவுகளைப் பிரிந்து வௌ;வேறு முகாம்களில் வாழ்ந்து வந்த சுமார் 600 குடும்பங்களை ஒரே முகாமில் குடும்பம் குடும்பமாக ஒன்றிணைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகரினுள் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கான குறுகியகால நடவடிக்கையொன்றை மேற்கொள்ளுமாறு செவ்வாய்க்கிழமை கொழும்பு மாநகர சபைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் பல பகுதிகளிலும் குப்பை கூளங்களைச் சேகரித்துக் கொட்டுவதில் மாநகர சபை ஊழியர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக மாநகர சபை எல்லைக்குள் பெரும்பாலான பகுதிகளில் குப்பை கூளங்கள் அகற்றப்படவில்லை.

இதனால் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் துர்நாற்றம் வீசிவருவதுடன் அனைத்துமக்களும் பல்வேறு வகையிலும் பெரும் பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளனர். இதையடுத்து கொழும்பு மாநகர சபையின் இயலாத்தன்மையாலும் மோசமான நிர்வாகத்தாலும் கொழும்பு புளுமெண்டல் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள குப்பை கூளங்களால் தனது அடிப்படை உரிமை மீறப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டகுழுவினர் தாக்கல் செய்த இந்த மனுவில் கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட குழுவினர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக் கெடுத்த உயர் நீதிமன்றம் கழிவுப்பொருட்களை துறைமுக அதிகாரி சபைக்குச் சொந்தமான காணியிலும் மகரபகுதியில் இடமொன்றிலும் சேகரிப்பது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் கழிவுப் பொருட்கள் மீள் சுழற்சிக்கான நீண்டகால செயற்திட்டம் தொடர்பான பரிந்துரைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உயர் நீதிமன்றம் கொழும்பு மாநகர சபைக்கு உத்தரவிட்டுள்ளது.

மாநகர சபை எல்லைக்குள் தேங்கியுள்ள குப்பை கூளங்களை அகற்றுமாறு பொது அமைப்புக்கள் பலவும் மாநகர சபை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்ததும் தெரிந்ததே. தற்போது நீதிமன்றத் தலையீட்டால் செவ்வாய்க்கிழமை குப்பை கூளங்கள் அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமானதும் குறிப்பிடத்தக்கது.

பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்டனி காயம்: பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங் கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியை கைப்பற்ற ராணுவம் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. ராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் கடுமையாக போரிடுகின்றனர். அந்த போர் முனையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் தலைமையேற்று நேரடியாக போரிடுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
 
புதுக்குடியிருப்பு வடக்குப் பகுதியில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையே அண்மையில் இடம்பெற்ற உக்கிர மோதலின்போது புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்டனி (வயது 24) காயமடைந்ததாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புலிகளுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் தயாரிக்கும் பணியின் முக்கிய பொறுப்பாளரான இவர் புலிகளின் விமானங்களுக்கான குண்டுகளைத தயாரிப்பதிலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

2007 ஆம் ஆண்டில் கட்டுநாயக்க விமானத்தளம் மீதும் கொலன்னாவை எண்ணெய்க் குதம் மற்றும் முத்துராஜவெல எரிவாயு களஞ்சியம் ஆகியவற்றின் மீதும் புலிகள் நடத்திய விமானத் தாக்குதல்களை இவரே  திட்டமிட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்காக இவர் புலிகளின் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டார் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

போர் நிறுத்தத்தை அறிவிக்க இலங்கை அரசை வலியுறுத்துவோம்: சோனியா

sonia-gandhi.jpgஇலங்கையில் வாடும் அப்பாவித் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும், கடந்த 30 வருட காலமாக இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்து வருவதாகவும், அங்கு போர் நிறுத்தத்தை அறிவிக்க இலங்கை அரசை வலியுறுத்துவோம் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வவுனியாவுக்கு நேற்று வரை 52 ஆயிரம் பேர் இடம்பெயர்வு – அமைச்சர் றிஷாத் பதியுதீன்

risadbadurudeen.jpgமுல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து நேற்று வரை 52 ஆயிரத்து 208 பேர் வவுனியாவுக்கு வருகை தந்துள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,  விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வருகை தந்தவர்களுள் ஆகக்கூடிய தொகையாக 23 ஆயிரத்து 606 பேர் கடந்த மார்ச் மாதத்தில் வந்துள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு வருகை தரும் மக்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அம்மக்களுக்குத் தேவையான குடிநீர், சுகாதாரம், மலசலகூட வசதி, மின்சாரம் மற்றும் கல்வி உட்பட அனைத்து வசதிகளையும் தமது அமைச்சு செய்து கொடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் போலிப்பிரசாரம் செய்கிறார் : ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ வில் இலங்கை தூதரகம் கண்டனம்

arunthathy_1.jpgநாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் இந்திய எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதாக ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ செய்தி வெளியிட்டிருக்கின்றது.

இலங்கையில் பகிரங்க இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் அநாயாசமான கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக அருந்ததி ராய் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் இடம்பெற்று வரும் இனச் சுத்திகரிப்புக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிக்கப்படுவதாவது:

“அருந்ததி ராயின் அண்மைய செய்திக் கட்டுரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், சிவிலியன்களைத் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வாய்ப்பாகவும் அமையும் எனவும் இலங்கைத் தூதுவராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிங்களப் பெரும்பான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் 54 வீதமான தமிழ் மக்கள் சிக்கல்கள் எதுவுமின்றி வாழ்ந்து வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய முதல் செயலாளர் சுகேஸ்வர குணரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டங்களைப் புலிகள் நிராகரித்து வந்துள்ளமை நோக்கப்பட வேண்டியதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிவிலியன் நலனை முதன்மை நோக்காகக் கொண்டே வடக்கில் படையினர் மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.” இவ்வாறு ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

‘நமக்காக நாம்’ நிதியத்துக்கு கனடாவிலுள்ள இலங்கையர்கள் 3 மில்லியன் ரூபா அன்பளிப்பு!

jayasekara_canada.jpgஇலங்கை பாதுகாப்புப் படையினருக்கு நலன்புரித் திட்டங்களை வழங்க பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட ‘நமக்காக நாம்’ எனும் நிதியத்துக்கு கனடாவிலுள்ள இலங்கை வாழ் மக்கள் மூன்று மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கையர்கள் வழங்கிய இந்த பணத் தொகைக்கான காசோலையை கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பந்துல ஜயசேகர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

இந்தப் பணத் தொகையை வழங்கியதன் மூலம் கனடாவிலுள்ள இலங்கையர்கள் தமது நன்றியையும் பாராட்டுதல்களையும் இலங்கை படை வீரர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

தெற்கில் இயல்பு வாழ்வை சீர்குலைக்க புலிகள் திட்டம் – பிரிகேடியர் உதய நாணாயக்கார எச்சரிக்கை

udaya_nanayakkara_brigediars.jpgதமிழ்,  சிங்களப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களையும் தெற்கில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்க புலிகள் திட்டமிட்டுள்ளதாக அறிகிறோம். எனவே மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க ஊடகங்கள் அறிவுறுத்த வேண்டும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் குறித்து தகவல் வழங்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு பிரிகேடியர் மேலும் கூறியதாவது,

படையினரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத புலிகள் இப்போது மறைந்திருந்து திடீர் தாக்குதல்களை நடத்துகின்றனர். அவற்றை படையினர் வெற்றிகரமக முறியடித்து வருகின்றனர். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் பொது மக்களின்; எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றது. கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்றுவரை 62,157 பேர் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.

படையினரின் முன்னேற்றத்தைத் தடுக்க புலிகள் அமைத்துள்ள மண் அணைகளை படையினர் தாக்கியழித்துள்ளனர். சாலை தெற்கில் கடல் ஏரியைக் கடந்து செல்ல வசதியாக படையினர் விசேட பாலம ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் பிரிகேடியர் கூறினார்.