தமிழ், சிங்களப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களையும் தெற்கில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்க புலிகள் திட்டமிட்டுள்ளதாக அறிகிறோம். எனவே மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க ஊடகங்கள் அறிவுறுத்த வேண்டும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் குறித்து தகவல் வழங்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு பிரிகேடியர் மேலும் கூறியதாவது,
படையினரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத புலிகள் இப்போது மறைந்திருந்து திடீர் தாக்குதல்களை நடத்துகின்றனர். அவற்றை படையினர் வெற்றிகரமக முறியடித்து வருகின்றனர். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் பொது மக்களின்; எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றது. கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்றுவரை 62,157 பேர் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.
படையினரின் முன்னேற்றத்தைத் தடுக்க புலிகள் அமைத்துள்ள மண் அணைகளை படையினர் தாக்கியழித்துள்ளனர். சாலை தெற்கில் கடல் ஏரியைக் கடந்து செல்ல வசதியாக படையினர் விசேட பாலம ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் பிரிகேடியர் கூறினார்.