அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இந்து மாமன்ற சமய விவகாரக் குழுவின் தலைவர் இராஜபுவனேஸ்வரன் காலமானார்

rajapuwaneswaran.jpgகொழும்பு விவேகானந்த சபையின் பொதுச் செயலாளரும், அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவரும், இந்து மாமன்ற சமய விவகாரக் குழுவின் தலைவருமான கே. இராஜ புவனேஸ்வரன் காலமானார். யாழ்ப்பாணம் சுதுமலையில் 1942ம் ஆண்டு பிறந்த இவருக்கு இறக்கும் போது வயது 67 ஆகும்.

சிறந்த சமயத் தொண்டரும், தீவிர இறைபக்தியாளருமான சிவஞானச் செல்வர் இராஜ புவனேஸ்வரன், இலங்கை வங்கியில் சிரேஷ்ட முகாமையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், இந்நாட்டில் சைவசமய வளர்ச்சிக்காக உழைத்த சிவத்தொண்டராவார். இவர் சிவத்தொண்டர் அணி ஊடாக நாடு முழுவதும் தீவிர பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

பாடசாலைகளில் தவக்கால வழிபாடு: கல்வி அமைச்சு சுற்று நிருபம்

பரிசுத்த வாரத்தில் பாடசாலைகளில் தவக்கால வழிபாடுகளை மேற் கொள்ள கல்வியமைச்சு அங்கீகாரமளித்துள்ளது. கத்தோலிக்க மாணவர்கள் 15 பேர் இருப்பார்களானால் அங்கு இவ் வழிபாடுகளை முன்னெடுக்கலாம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கத்தோலிக்க மக்கள் அனுஷ்டிக்கும் தவக்காலத்தின் பரிசுத்த வாரம் இன்று குருத்தோலை ஞாயிறோடு ஆரம்பமாகிறது. இதனையொட்டி மேற்படி அங்கீகாரத்தை கல்வியமைச்சின் செயலாளர் எம். எம். என். டீ. பண்டார வழங்கியுள்ளார்.

கல்வியமைச்சின் கத்தோலிக்க சமய ஆலோசனைச் சபையின் அமர்வில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இணங்கவே இவ் வங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2009/08 ஆம் இலக்கமுடைய சுற்று நிருபத்தினையும் இது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.

நிவாரண கிராமங்களுக்கு தொலைபேசி வசதி: ஜனாதிபதிக்கு ஈ.பி.டி.பி நன்றி தெரிவிப்பு

ஈ. பி. டி. பி.யின் கோரிக்கைக்கு அமைய வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் 26 கோரிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தார். இது தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையில் உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நாளை இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில், வவுனியா அரசாங்க அதிபர், பாதுகாப்பு அமைச்சின் வவுனியா இணைப்பாளர், தேசநிர்மாண அமைச்சின் வவுனியா இணைப்பாளர் ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர். இந்த நிலையில் தனது கோரிக்கையை ஏற்று நிவாரணக் கிராமங்களுக்கு தொலைபேசி வசதி செய்து கொடுத்தமைக்கு இடம்பெயர்ந்த மக்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதே போல, ஏனைய கோரிக்கைகளையும் ஜனாதிபதி செயற்படுத்துவாரென்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று தன்னைச் சந்தித்த பொதுமக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

நேட்டோ அமைப்பின் அடுத்த செயலாளர் டென்மார்க் பிரதமர்

nato_hq.jpgநேட்டோ அமைப்பின் அடுத்த செயலாளராக டென்மார்க் பிரதமர் அண்டர்ஸ் ஃபோக் ரஸ்முஸன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்கவுள்ளார்.

இவருடைய நியமனத்திற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்தது. டென்மார்கில் நபிகள் நாயகம் குறித்து கேலிச்சித்திரம் வெளியானது மற்றும் டென்மார்கில் குர்து இன ஆதரவு தொலைக்காட்சி நிலையம் செயற்படுவது போன்ற விடயங்களில் இவர் மீது துருக்கிக்கு அதிருப்தி உள்ளது.

எனினும் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து துருக்கியின் கவலைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக தற்போதைய நேட்டோ செயலாளர் தெரிவித்துள்ளார்.

கப்பல் மூலம் நேற்றுமாலை 480 பேர் புல்மோட்டையை வந்தடைந்தனர்.

taking-to-green-ocean.jpgமுல் லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் இருந்து மேலும் ஒரு தொகுதி மக்கள் கப்பல் மூலம் புல்மோட்டையை நேற்று மாலை வந்தடைந்துள்ளனர்.
 
காயமடைந்த மற்றும் அவர்களைப் பராமரிக்கும் அவர்களது உறவினர்கள் உட்பட 480 பேர் ‘கிறீன் ஓஷன்’  கப்பல் மூலம் செஞ்சிலுவைச் சங்க வழித்துணையுடன் 17வது தடவையாக வந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துக்கு ஒரு ரில்லியன் டொலர் 2010க்குள் ஐந்து ரில்லியன் செலவிடவும் தீர்மானம் – நிதி நெருக்கடியைத் தீர்க்க ஜீ 20 மாநாட்டில் முடிவு

g-20.jpgசர்வதேச நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்யும் வழிகளை ஆராய்ந்த ஜீ 20 மாநாடு அவசரமாக சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒரு ரில்லியன் டொலர் பணத்தை வழங்க வேண்டுமெனத் தீர்மானித்தது. மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள் மாட்டியுள்ள நாடுகளுக்கு ஏனைய நிதி நிறுவனங்கள் பாரிய வர்த்தக அமைப்புகள் அவசரமாக உதவ வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. இரண்டு நாள் நடைபெற்ற இந்த மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

அமெரிக்க ஜனாதிபதி பிரிட்டிஷ் பிரதமர் ஆகியோர் முக்கிய உரைகளை நிகழ்த்தினர். 2010 ம் ஆண்டு முடிவடைவதற்குள் ஜீ 20 நாடுகளும், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளும் ஐந்து ரில்லியன் டொலரைச் செலவு செய்து நிதி நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன்பிரவுண் சொன்னார்.

இது புதிய உலகின் உத்தரவு எனக் கூறிய பிரதமர் பிரவுண் நெருக்கடியிலிருந்து மீழ இதுவும் ஒரு வழியாகவும் உள்ளது என்றார். ஜீ 20 மாநாடு புதிய திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாகக் கூறிய ஜனாதிபதி பராக் ஒபாமா மாநாட்டின் தீர்மானங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அழுத்தம் கொடுக்கும் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியாதென்றும் தெரிவித்தார்.

இத்தீர்மானத்தில் அதிகமான நம்பிக்கை வைக்கவில்லை என்று பிரான்ஸ் ஜனாதிபதி கூறினார். இதேவேளை வரலாற்று முக்கியம் வாய்ந்த பேச்சுவார்த்தையும் மாநாடும் நடந்ததாக ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்கல் சொன்னார். ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் தலைவர்களும் இம் மாநாட்டில் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான கருத்துக்களைத் தெரிவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கப்படவுள்ள ஒரு ரில்லியன் நிதியில் 500 பில்லியன் பணமாகவும் 250 பில்லியன் காசோலையாகவும் 250 பில்லியன் வர்த்தகக் கடனாகவும் வழங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. ஐநூறு மில்லியன் பணத்தில் ஜப்பானும் ஐரோப்பிய யூனியனும் நூறு மில்லியன் டொலர்களை வழங்கும். ஏனைய செல்வந்த நாடுகள் தனித்தனியே இத் நிதியை வழங்கும் மாநாட்டின் முடிவில் முறையிடப்பட்டாத வரிகள் பற்றி பொருளாதாரக் கூட்டுறவுக்கான அபிவிருத்தி அமைப்பு பட்டியலொன்றை வழங்கியது.

இது குறித்து அவசர முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறிய கோர்டன் பிரவுன் இம் மாதிரியான வரிகளுக்கு கடுமையான நடவடிக்கையும், தடைகளையும் கொண்டுவர மாநாடு இணங்கியதாகவம் சொன்னார். கோஸ்ட்டாரிகா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், உறுகுவே ஆகிய நாடுகள் இவ்வாறான முறையிடப்படாத வரிகள் உள்ள நாடுகளில் உள்ளடக்கப்படுகின்றன. இது குறித்து இந்த நாடுகள் எந்தக் கருத்தையும் கூறவில்லை.

சிறையில் வருண் காந்தி: மேனகாவுக்கு அனுமதி மறுப்பு

rahul.jpgமத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வருண் காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். தீவிரவாதிகளால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதை தொடர்ந்து, பிலிபிட் சிறையில் இருந்து இட்டா சிறைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவரை சந்திக்க அவரது தாயார் மேனகா காந்தி சென்றார். “தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருக்கும் ஒரு கைதியை வாரத்துக்கு 2 முறை மட்டுமே சந்திக்க சட்டத்தில் இடமுண்டு. அவரை ஏற்கனவே ஒரு முறை சந்தித்து விட்டதால் 8-ந் தேதிக்கு பிறகே சந்திக்க முடியும்” என்று கூறி மாவட்ட கலெக்டர் கவுரவ் தயாள் அனுமதி கொடுக்க மறுத்து விட்டார். இது பற்றி மேனகா காந்தி கூறுகையில், “இது எனக்கு இழைக்கப்பட்ட அநீதி. மாயாவதி ஒரு தாயாக இருந்தால் உணர முடியும். நியாயமற்றது, சட்ட விரோதமானது” என்று கூறினார்.

கொழும்பு மாவட்டத்துக்கான க.பொ.த. சாதாரண பரீட்சை முடிவுகள் இன்று அறிவிப்பு

exam.jpg

கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப்பொதுதராதர சாதாரண பரீட்சைகளின், கொழும்பு மற்றும் ஜெயவர்த்தன புர பிரதேசங்களின் பரீட்சை முடிவுகளை இன்றைய தினம் வெளியிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் புற மாவட்டங்களுக்கான முடிவுகளை வரும் திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு அனுப்பவுள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கள்ளிச்சவடமுனை அரசியல் காரியாலயம் மீது தாக்குதல்.

பொலனறுவை வெலிகந்த பிரதேசத்துக்குட்ப்பட்ட கள்ளிச்சவடமுனையில் அமைந்திருந்த அமைச்சர் வி.முரளிதரன் அவர்களின் அரசியல் காரியாலயம் மீது நேற்றிரவு 10.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத் தாக்குதலில் அரசியல் காரியாலத்தில் அரசியல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊத்துசேனையை வசிப்பிடமாக கொண்ட முத்திலிங்கம் சசிகரன் என்பவர் (வயது 20) உயிரிழந்துள்ளதுடன் இக்காரியாலத்துக்கு பொறுப்பாக இருந்த முகிலன் என்பவர் காயமடைந்து பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவிலியன்களை புலிகள் விடுவிக்க வேண்டும் : ஐ.நா. செயலாளர் நாயகம் அறிக்கை

ban-ki-moon.jpgமோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் சிக்குண்டுள்ள சிவிலியன்களை விடுதலைப்புலிகள் விடுவிக்க வேண்டும் என ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான்கி மூன் நேற்று வெள்ளிகிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அவரது பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாகவும் அங்கு உயிரிழப்புகள் அதிகரிப்பதாகவும், விடுதலைப்புலிகள் சிறிய நிலப்பரப்பில் பொதுமக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, இலங்கை அரசாங்கம் சிலியன்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் உறுதி அளித்தது போன்று பாரிய ஆயுதங்களை சிவிலியன்கள் வாழும் பிரதேசத்தில் பிரயோகிப்பதைத் தவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களின் பிரகாரம் மோதல் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான அத்தியாவசிய வசதிகளையும் ஐ நா. வழங்கும் மனிதாபிமான உதவிகளையும் ஒன்றிணத்துச் செயற்பட வேண்டும் என அவர் கூறியதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது