அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இலங்கையுடனான உறவை துண்டிக்கமாட்டோம் உயிர்ப்பலி வாங்காத ஆயுதமே வழங்கியுள்ளோம் – அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவிப்பு

pranabl.jpg“இந்தியாவின் நிலை என்ன என்பதை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துவிட்டோம்.இதற்கான பதிலை மத்திய அரசு எதிர்பார்த்து காத்திருக்கிறது’ என்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

இலங்கை விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; இலங்கையில் தற்போது சண்டை வலுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் தெளிவாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதற்கான பதிலை இலங்கை அரசிடம் இருந்து இந்தியா எதிர்பார்த்து காத்து இருக்கிறது. இலங்கை அரசாங்கம் அளிக்கப்போகும் பதிலை வைத்துத்தான் அடுத்த கட்ட நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளும்.இலங்கையுடனான உறவுகளை துண்டித்துக்கொள்ளும் திட்டமெல்லாம் இந்தியாவிடம் இல்லை. இந்தியாவின் நட்பு நாடுதான் இலங்கை.அந்நாட்டுடன் சுமுக உறவு எப்போதும் இருந்து வருகிறது. எனவே உயிர்ப்பலி வாங்காத ஆயுதங்களைத்தான் அந்நாட்டிற்கு இந்தியா வழங்கியுள்ளது.அங்குள்ள அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட வேண்டுமென்றே இந்தியா வலியுறுத்துகிறது. புலிகள் அமைப்பு என்பது ஒரு தீவிரவாத அமைப்பு.

சர்வகட்சிக் குழுவின் யோசனையை பாராளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் – ரணில் கோரிக்கை

யுத்தம் முடிவடைந்து வரும் நிலையில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி, புஸ்பதான மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற “சுதந்திரத்திற்கான மேடை’ நிகழ்ச்சித் திட்டத்தின் கூட்டமொன்றில் பேசும் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியிருக்கிறார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்:

இப்போது யுத்தம் முடிவடைந்து வருகிறது இந்த நிலையில் அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு யோசனையொன்றை பரிந்துரை செய்வதற்கென அமைச்சரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிற்கு சகல கட்சிகளும் தத்தமது அபிப்பிராயங்களையும் யோசனைகளையும் முன்வைத்திருக்கின்றன.

எனவே சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அது எம்மாதிரியான தீர்வு என்பதை தெளிவுபடுத்தி அரசாங்கம் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும்.

எமது நாட்டிலுள்ள பிரச்சினையை பிறர் வந்து தீர்க்க முற்படுவதற்கு முன்னர் நாம் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் சகல கட்சிகளும் தத்தமது அபிப்பிராயங்களை தெரிவித்துள்ள நிலையில் எதற்காக மூடி மறைக்க வேண்டும்?

எனவே தீர்வு யோசனையை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் அதை செய்யாததால்தான் பிறர் வந்து கொண்டிருக்கின்றனர். என்றும் கூறியிருக்கிறார்.

சிறுபான்மை மக்களிற்காக குரல் கொடுக்க கிழக்கு மாகாண சபையால் மாத்திரமே முடியும்- கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளில் கிழக்கு மாகாண சபையினால் மாத்திரமே சிறுபான்மை மக்களின் நலன்களிற்காக குரல்கொடுக்க முடியும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, வீடமைப்பு நிர்மாணத்துறை, கிராமிய மின்சார, நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்ட மூலம் தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் உதுமாலெவ்வை தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்ட மூலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு திருத்தங்கள் செய்யப்பட்டு சபையில் இச்சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டால் தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இதனை ஆதரிப்போம்.

தற்போதுள்ள இச்சட்ட மூலத்தை அங்கீகரிப்பதன் மூலம் சிறுபான்மைச் சமூகத்திற்கு வரலாற்றுத் துரோகம் செய்வதற்கு நாங்கள் தயாரில்லை.

தலைவர் அஷ்ரப், தலைவர் அதாஉல்லா ஆகியோர்களின் தலைமைத்துவங்களினால் உருவாக்கப்பட்டவர்கள் நாங்கள். ஆளும் கட்சியில் இருந்தவாறே எங்களது நிலைப்பாடுகளைத் தைரியமாக அறிவித்துள்ளோம்.

கிழக்கு மாகாண சபையில் ஆளும் தரப்பில் நான்கு கட்சிகள் உள்ளன. இந்த சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, சிறுபான்மை மக்களது அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தினால் மாத்திரமே இச்சட்ட மூலங்களை தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரிப்பர்.

இதுபோலவே முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரும் இதே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றார்கள் என்றார்.

வன்னியிலிருந்து யாழ்.வந்தோரை கவனிக்க 5 டாக்டர்கள் நியமனம்

doctor.jpgவன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வந்து யாழ்.மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் மருத்துவ தேவைகளை கவனிப்பதற்காக மத்திய சுகாதார அமைச்சு ஐந்து வைத்தியர்களை நியமித்துள்ளது. யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் விடுத்த வேண்டுகோளையடுத்தே யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ளகப் பியிற்சியை நிறைவு செய்த ஐந்து வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.குடாநாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகின்ற இவ்வேளையில் நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களின் மருத்துவத் தேவைகளைக் கவனிப்பதில் பெரும் நெருக்கடிகள் நிலவுவதாகவும் இதனால் 10 வைத்தியர்களை நியமிக்குமாறு கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்தே, ஐந்து வைத்தியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் ஐந்து வைத்தியர்கள் அடுத்த வாரமளவில் நியமிக்கப்படுவார்களெனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் கடமையாற்றுவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் உள்ளகப் பயிற்சிகளை நிறைவு செய்த 230 வைத்தியர்களை மத்திய சுகாதார அமைச்சு நியமிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கம்யூனிஸ்ட் ஆர்வலர் சிவம் கனடாவில் மரணம்

வட மராட்சியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செயற்பாடுகளில் முன்னின்று உழைத்த என்.சிவநாதன் (சிவம்) திங்கட்கிழமை கனடாவின் ரொறன்டோவில் காலமானார். அவருக்கு வயது 58. நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவநாதன் 1970 களில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பீக்கிங் சார்பு பிரிவின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டு பல போராட்டங்களில் பங்கேற்றவர்.

1983 ஜூலை இன வன்செயலுக்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட நிலைவரங்கள் காரணமாக கனடாவுக்கு புலம்பெயர்ந்த சிவநாதன் கனடாவிலும் இடதுசாரி இயக்கத்தின் பணிகளிலும் முற்போக்கு காலை இலக்கிய பணிகளிலும் துடிப்புடன் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்டிருந்த அவர் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த வேளையில் திங்களன்று மாரடைப்பால் காலமானதாக கனடாவில் உள்ள அவரின் நண்பர்கள் அறிவித்துள்ளனர். இரு பெண் பிள்ளைகளுக்கு தந்தையான அவரின் இறுதிக்கிரியைகள் இன்று வியாழக்கிழமை நடைபெறும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இலங்கையில் தான் தண்டனை வழங்கப்பட வேண்டும் – கருணா அம்மான்

Karuna Colஇலங்கை இராணுவத்தால் கைது செய்யப்படும் சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படக் கூடாது என அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார். சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு யுத்த குற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பல்வேறு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கருணா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைது செய்யப்பட்டால் அவருக்கு இலங்கையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பின்னர் இந்தியாவில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செயல்படுகின்றது: பா.நடேசன்

nadesan-10.jpgவிடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ‘த ஸ்ரேற்ஸ்மன்’ இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அப்பேட்டியில், ‘’தற்போதைய இந்திய மத்திய அரசின் நிலைப்பாடுகளும், செயற்பாடுகளும் எமக்கு ஏமாற்றத்தையே தருகின்றன.

இந்தியாவின் உண்மையான நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில்,  இந்தியாவின் இயற்கையான கூட்டாளிகள் யார் என்பதை அறிவதில் இன்றைய இந்திய அரசு தவறி விட்டது; அது ஈழத் தமிழர்கள் தான்’’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், ’’இந்தியா ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றது. இதனை கண்டு நாம் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். போரை நிறுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை காணும் முயற்சிகள் எதனையும் இந்தியா மேற்கொள்ளவில்லை.  கடந்த சனிக்கிழமை சிங்கள வான்படையின் வானூர்திகள் நான்கு தடவைகள் மக்கள் அதிகமாக வாழும் பாதுகாப்பு வலயத்தின் மீது குண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தின.

பீரங்கி தாக்குதல்களும் கடுமையாகத் தொடர்கின்றன. இந்திய அதிகாரிகளின் கொழும்பு பயணத்தின் பின்னரே இவ்வாறான தாக்குதல்கள் உக்கிர நிலையை எட்டியுள்ளன.  விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தவில்லை, இராணுவத்தினரே படையெடுப்பினை மேற்கொள்ளும் போது மக்களை மனித கேடயங்களாக முன்னால் நகர்த்தி முன்னேறுகின்றனர்.

தமிழ் மக்கள் மீது பல வழிகளிலும் மேற்கொள்ளப்படும் இன அழிப்புக்களின் உண்மைத் தன்மையை அனைத்துலக சமூகம் இப்போது மெதுவாக உணரத் தொடங்கியுள்ளது. தமது மண்ணில் சுதந்திரமாக வாழ்ந்து, தமது தாயகத்தை தாமே அளும் நியாயமான அரசியல் அவாக்கள் எமது மக்களுக்க உள்ளன. அந்த அரசியல் அவாக்களை வென்றெடுப்பதற்கு விடுதலைப் புலிகளையே அவர்கள் தமது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியல் விருப்பத்திற்கான போராட்டம் அவற்றை அவர்கள் அடையாதவரை முடிவுக்கு வராது.  எனவே, இங்கு தமிழ் மக்கள் மனிதப்பேரவலம் ஒன்றை சந்தித்துள்ள இன்றைய வேளையில், உலக சமூகம் உடனடியாத் தலையிட்டு அவர்களைக் காக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை சிவாஜிலிங்கம் எம்.பி’யின் பிரச்சாரம் இந்திய சட்டத்துக்கு எதிரானது: வயலார் ரவி

sivajilingam0.jpgவெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை மத்திய அமைச்சர் வயலார் ரவி, சென்னையில் இன்று  முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30நிமிடங்கள் நீடித்தது. சந்திப்புக்கு பின் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து என்ன பேசினீர்கள்?

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததற்கு வாழ்த்து தெரிவித்தேன். அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். இது ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு, அவ்வளவுதான்.

இலங்கை அரசின் போர் நிறுத்தம் குறித்து?

இந்திய அரசு, இலங்கை அரசுடன் பேசி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. உலக நாடுகளும் இதை வலியுறுத்த வேண்டும் என்று நாங்கள் கூறினோம்.  இதனை ஏற்று உலக நாடுகளும் இலங்கை அரசை வற்புறுத்தியது. இந்தியா மற்றும் உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த போர் நிறுத்தத்தால் இலங்கை தமிழர்களுக்கு மகிழ்ச்சி என்றால் எங்களுக்கும் அதில் மகிழ்ச்சி தான்.

வேறு நாட்டு எம்.பி. இந்தியாவில் தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா?

இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் இந்திய அரசை விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. அவரின் இந்த தேர்தல் பிரச்சாரம் இந்திய சட்ட திட்டத்துக்கு எதிரானது.

இலங்கை மோதல்கள் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் எச்சரிக்கை

img_canada.jpgவிடுதலைப் புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பிற்கு இலங்கை அரசாங்கம் பதில் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளாவிடின் இன்னும் ஓரிரு தினங்களில் அங்கு குருதிப்பெருக்கு ஏற்படும் என கனேடிய தமிழர்கள் அஞ்சுவதாகத் தெரிவித்த கனேடிய தமிழ் காங்கிரஸ் இது தொடர்பாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்டீபன் ஹர்பருக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.  புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பை ஏற்கும்படி இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ரொறொன்டோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடியன் தமிழ் காங்கிரஸால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக அதன் தலைவர் ஸ்ரீ ரஞ்சன் தெரிவிக்கையில்; புலிகளின் யுத்த நிறுத்தத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென இலங்கை அரசாங்கத்தை கனடா வலியுறுத்த வேண்டும். அரசியல் உறவு மற்றும் பொருளாதார உறவுகளை துண்டிப்பதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும்.

மேலும் கனடா அரசாங்கத்தை, இலங்கைப் பிரச்சினையில் தலையிடும் படி வலியுறுத்தும் படி கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும். கொழும்பை அரசியல் பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துவதன் மூலம் அரசியல் தீர்வுக்கு அதனை இட்டுச்செல்ல வேண்டும். இதுவே தமிழ் மக்களின் விருப்பு என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகளின் படி பாதுகாப்பு வலயத்தில் 6500 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்த கனேடியத் தமிழர் காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை மேலும் தெரிவிக்கையில்; உலகின் வல்லமை மிக்க அமைப்புகளான ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய யூனியன், ஜி8 என்பனவும் ஏனைய அரசாங்கங்களும் அறிக்கைகளை வெளியிட்டனவே தவிர வேறு எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை . இவை அனைத்தும் இலங்கைத் தமிழரைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளன.

கனடா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐ.நா, ஜி8 மற்றும் மேற்கத்திய அரசாங்கங்களின் அறிக்கைக்கு செவிமெடுத்த விடுதலைப்புலிகள் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்பொழுது பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் முடிவிலேயே தங்கியுள்ளது.

இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன்: ஜெயலலிதா

j-j-j.jpg நாமக்கலில் அதிமுக  வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ’’எங்களுடைய சொல்லைக் கேட்கும் புதிய மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அண்மையில் சொல்லி இருந்தேன். 
 
இதற்கு ஒரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்,இந்த அம்மாவுக்கு சர்வதேச சட்டம் தெரியவில்லை.   எப்படி இலங்கையில் தனி ஈழம் அமைக்க முடியும்? இலங்கை என்ன இந்தியாவின் மாவட்டமா? காலனியா?என்று வினவியிருக்கிறார். இதிலிருந்து இவர் தான், விவரம் புரியாத ஒரு மனிதர் என்பது தெரிகிறது.
 
இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது, கிழக்கு பாகிஸ்தான் மீது படையெடுத்து பங்களாதேசுக்கு விடுதலை வாங்கித் தரவில்லையா! இந்திரா காந்திக்கு சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்?

1971 ஆம் ஆண்டு இந்திய – பாகிஸ்தான் போரை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மறந்துவிட்டார் போலும்!   இனவெறியை தடுப்பதற்காகத்தான் இந்தப் போரை இந்திரா காந்தி நடத்தினார் என்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 
 
பிறகு, இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தி இந்திய நாட்டின் பிரதமாக இருந்த போது, இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பவில்லையா? அவருக்கும் சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்?
 
இந்திரா காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி, பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ,
 
ராஜீவ் காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பினாரோ; அதே சர்வதேச சட்டத்தை பின்பற்றித் தான், அதே தர்ம நியாயங்களை பின்பற்றித் தான், நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால்,  இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி அங்கே தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொல்கிறேன்’’ என்று பேசினார்