வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வந்து யாழ்.மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் மருத்துவ தேவைகளை கவனிப்பதற்காக மத்திய சுகாதார அமைச்சு ஐந்து வைத்தியர்களை நியமித்துள்ளது. யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் விடுத்த வேண்டுகோளையடுத்தே யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ளகப் பியிற்சியை நிறைவு செய்த ஐந்து வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.குடாநாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகின்ற இவ்வேளையில் நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களின் மருத்துவத் தேவைகளைக் கவனிப்பதில் பெரும் நெருக்கடிகள் நிலவுவதாகவும் இதனால் 10 வைத்தியர்களை நியமிக்குமாறு கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்தே, ஐந்து வைத்தியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் ஐந்து வைத்தியர்கள் அடுத்த வாரமளவில் நியமிக்கப்படுவார்களெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் கடமையாற்றுவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் உள்ளகப் பயிற்சிகளை நிறைவு செய்த 230 வைத்தியர்களை மத்திய சுகாதார அமைச்சு நியமிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.