அமெரிக்க இராணுவத் தளத்தைக்தாக்கி படையினரைக் கொலை செய்யத் திட்டமிட்ட மூன்று அல்பேனிய முஸ்லிம்களுக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சென்ற செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பையளித்தது. இந்த மூன்று முஸ்லிம்களும் சகோரர்களாவர். டேர்டின்டுகா வயது 30, ஷெய்ன்டுகா 29, எல்ஜிவீர்டுகா ஆகியோருக்கே ஆயுட்கால சிறைத் தண்டனையளிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் டிக்ஸ் துறைமுகத்தைத் தாக்க திட்டமிட்டதாகக் கருதி இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இன்னும் இருவர் கெரிஹில் என்ற பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டனர். வியாபார நோக்கில் இவர்கள் அடிக்கடி டிக்ஸ் துறைமுகத்துக்குச் சென்று வந்தனர்.
இதனால் இத் துறைமுகம் பற்றிய பரீட்சயம் இவர்களிடமிருந்தது. இதைக் கொண்டு இவ் வியாபாரிகள் துறைமுகத்தை தாக்கத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. இவர்கள் கைதான பின்னர் இந்தத் தாக்குதல் இன்னும் நடாத்தப்பட வில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அல்பேனிய முஸ்லிம் சகோதரர்கள் நன்கு மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். புனித யுத்தமாக இதைக் கருதும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலையாவார்கள் எனத் தான் நினைக்கவில்லை. குற்றவாளிகளைத் தண்டிக்கும் நோக்கத்துடன் இத் தீர்ப்பை வழங்கினேன்.
மூன்று பிள்ளைகளையும் சிறைக் கைதிகளாகக் காண்பது பெற்றோர்களுக்குப் பெரும் வேதனையளிக்கும் என்பது தனக்குத் தெரியுமென்றும் மாவட்ட நீதிபதி தனது தீர்ப்பின் போது டுகா சகோதரர்களின் பெற்றோர்கள், உறவினர்களிடத்தில் தெரிவித்தார்.
இதன் போது டுகா சகோதரர்கள் சிறைக் கைதிகளின் பச்சை நிற சீருடையை அணிந்து கையில் விலங்கிடப்பட்டுக் காணப்பட்டனர். நீதிவான் தீர்ப்பை வாசிக்கும் போது தாங்கள் அப்பாவிகள் அமெரிக்க உளவுத்துறை மிகத் திறமையாக எங்களை இதில் சிக்கவைத்தது என ஆவேசத்துடன் கூறினர். குற்றவாளிகளுக்குகெதிரான முறைப்பாடுகள் உரிய முறையில் சமர்ப்பிக்கப்பட்டது.
தனது அனுபவத்தில் இவ்வாறு விவரமாகச் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பத்திரிகையைக் கண்டதில்லையென நீதவான் கூறினார். அல்பேனிய மூன்று சகோதரர்களுடன் மேலும் இரண்டு முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டனர்.
இவ்விருவருக்கான தீர்ப்பு நேற்று புதன்கிழமை வழங்கப்படவிருந்தது. இச் செய்தி எழுதப்படும் வரை இது பற்றித் தெரியவில்லை. ஒருவர் ஜோர்தானில் பிறந்தவர். இவர் ஆட்டோ சாரதியாகவும் மற்றவர் துருக்கியில் பிறந்தவர் ஸ்டோர் காப்பாளராகவும் கடமையாற்றியவர்கள்.
அமெரிக்காவின் உளவுத்துறை கைதான ஐவர் அடங்கிய ஒளி, ஒலி நாடாவை சமர் ப்பித்திருந்தது. நூறு மணித்தியாலங்கள் கொண்ட இந் நாடாக்களில் புனிதப் போர் குறித்துத் தீர்மானிக்கப்பட்ட விடயம் புலனாய்வுத்துறையின் முஸ்லிம் அதிகாரி ஓமர் ஊடாகத் தெரியவந்தது.
இந்த ஐந்து பேரும் கைதாகி எட்டு வாரங்கள் சிறையிலிருந்தனர். டுகா சகோதரர்களின் பெற்றோர் எங்கள் குழந்தைகள் பயங்கரவாதிகளா அவ்வாறான பிள்ளைகளைத் தாங்கள் பெற்றெடுக்கவில்லை எனக் கூறினர்.