அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தாண்டிக்குளம் வரை யாழ்தேவி சேவை – வன்னி மாவட்ட பா. உ. சிவநாதன் கிஷோர்ரும கலந்துகொண்டார்

yaal-devi.jpg‘தெற்கின் தோழன்’ என்ற தொனிப்பொருளில் வவுனியா தாண்டிக்குளம் நோக்கி நேற்றுக்காலை 6.10க்கு புறப்பட்ட யாழ் தேவி ரயில் பகல் 12.00 மணியளவில் தாண்டிக்குளம் ரயில் நிலையத்தை சென்றடைந்தது. 20 வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக தாண்டிக் குளம் வரை யாழ் தேவி ரயில் சென்றுள்ளது.

தாண்டிக்குளத்திலிருந்து காங்கேசன்துறை வரை ரயில் பாதையை அபிவிருத்தி செய் வதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக நிதி சேகரிப்பு நிகழ்வும் நேற்று தாண்டிக் குளம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. போக்குவ ரத்து அமைச்சர் டலஸ் அழ கப்பெரும 1000 ரூபா பெறு மதியான முதலாவது யாழ் – கொழும்பு ரயில் பயண சீட்டை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜ பக்ஷவுக்கு வழங்கினார்.

கொழும்பில் நேற்றுக் காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக மத வழிபாடுகள் நடைபெற்றன. அமைச்சர் டலஸ், லசந்த அழகியவன்ன, திஸ்ஸ கரலியத்த ஆகியோர் ரயிலிலேயே பயணம் செய்தனர்.

நேற்றுக்காலை சுமார் 12.00 மணியளவில் தாண்டிக்குளம் ரயில் நிலையத்தை அண்மித்த போது பாதையின் இரு மருங்கிலும் பாடசாலை மாணவர்கள் தேசியக் கொடியை அசைத்தவாறு ரயிலை வரவேற்றனர். முதல் தடவையாக ரயில் இப்பகுதிக்குள் வருவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

ரயில் வவுனியாவை சென்றடைந்த போது வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டிபிரேமலால் திஸாநாயக்க உட்பட பலரும் ரயில் பயணத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தாண்டிக்குளம் ரயில் நிலையத்தில் விசேட கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர்களான டலஸ் அழகப் பெரும, லசந்த அழகியவன்ன, சுசந்த புஞ்சிநிலமே, திஸ்ஸ கரலியத்த, டக்ளஸ் தேவானந்தா, விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), பிரதி அமைச்சர் லயனல் பிரேமசிறி உட்பட பலரும் கலந்து கொண்டனர். நேற்றைய நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கலந்துகொண்டார்.

போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும கொழும்பு – யாழ் பயணச் சீட்டொன்றையும் கிஷோர் எம். பிக்கு வழங்கினார்.

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான பயணச் சீட்டு 1000 ரூபா பெறுமதியானதுடன் கெளரவ வகுப்பு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வவுனியா ரயில் நிலையத்தில் வைத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை வரவேற்ற போது கிஷோர் எம். பியும் வரவேற்றார். அங்கிருந்து தாண்டிக்குளம் வரையிலும் ரயிலிலேயே அமைச்சர்களுடன் சென்றனர்.

இதனையடுத்து ஓமந்தைக்கு வந்த அமைச்சர்கள் குழுவினர் ஓமந்தை ரயில் நிலையத்திற்கான அடிக்கல்லையும் நாட்டினர். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் ரயில் நிலையத்திற்கான அடிக்கல்லை நட்டதுடன், ரயில் நிலையத்திலேயே மனிதாபிமான கரும பீடம் ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

நேற்று மாலை 3.00 மணிக்கு யாழ்தேவி ரயில் மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்டது. தேசியக் கொடிகளாலும் மலர் மாலைகளினாலும் யாழ் தேவி ரயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள், அமைச் சின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், ரயில்வே பாதுகா ப்பு பிரிவினர், ஊடகவியலாளர்கள், மட்டு, வவுனியா இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர்கள் உட்பட சுமார் 300 பேர் இந்த ரயிலில் பயணம் செய்தனர்.

நாடு முழுவதும் 48 நீதிமன்றங்கள் அமைக்க அரசு தீர்மானம்

நாடு முழுவதும் புதிதாக 48 நீதிமன்றங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்பொழுது நாட்டில் 250 நீதிமன்றங்கள் உள்ள போதிலும், மேலதிகமாக இவை அமைக்கப்படவுள்ளன.

நீதிமன்ற அதிகார எல்லைகள் கண்காணிப்புக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கமைய, அமைக்கப்படும் 48 நீதிமன்றங்களில், 3 மேல் நீதிமன்றங்களும், 14 மாவட்ட நீதிமன்றங்களும், 18 நீதிவான் நீதிமன்றங்களும், 13 சுற்று நீதிமன்றங்களும் அடங்கும். வடக்கு மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காகவும் இந்நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தங்காலை, மாத்தளை, நுவரெலியாப் பகுதிகளில் இம் மேல் நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றது.  மேலும், புதிதாக அமைக்கப்படவுள்ள 14 மாவட்ட நீதிமன்ற பிரதேசங்களாவன, கெப்பிட்டிகொல்லாவ, கெக்கிராவை, ஹிங்குராங்கொடை, பத்தேகம, கொடபொல, தெல்தெனிய, தம்புள்ளை, வளபபண்ணை, மகியங்கனை, ருவன்வெல்ல, மூதூர், வாழைச்சேனை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களாகும்.

புதிதாக அமைக்கப்படவுள்ள 18 நீதிவான் நீதிமன்றங்களாவன; ஹிங்குராங்கொடை, உடுகம, தெய்யன்தர, கலகெதர, நாவுல, வளப்பண்ணை, ஆனமடுவு, பசறை, பிபிலை, சியமலாண்டுவ, மஹர, மீரிகம, ஜாஎல, பேருவலை, லாகுகல, தெஹியத்தகண்டிய, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களாகும்.

புதிதாக அமைக்கப்படவுள்ள 13 சுற்று நீதிமன்றங்களாவன;  பதவியா, பகமூண, தவளம், அகுணகொளபெலஸ்ஸ, கொத்மலை, ஹங்குராங்கேத்த, ஹல்துமுல்லை, தனமல்வில, அகலவத்தை, பானம, பதியத்தலாவை, குச்சவெளி மற்றும் வேலணை பிரதேசங்களாகும்.

இது தொடர்பான நீதிமன்ற அதிகார எல்லைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையை பிரதம நீதியரசர் சரத்.என். சில்வாவிடம் கையளிக்கும் வைபவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதி நீதியமைச்சர் வி. புத்திரசிகாமணி, மேன்முறையீட்டு நீதிமன்றத் தகவல் சத்திய ஹெட்டிகே உட்பட நீதிபதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

D-Day தினத்தில் கூட்டணிப்படைகள் காட்டிய வீரத்திற்கு அமெரிக்க அதிபர் புகழாரம்

d-day.jpgபிரான் ஸின் வட பகுதியில் அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னாள் இதே தினம் கூட்டணிப் படைகள் காட்டிய வீரம் வரலாற்றின் போக்கையே மாற்றியது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

பிரான்ஸின் நோர்மாந்தி பிராந்தியத்தில் ஒரு சிறிய கடற்கரைப் பகுதியில் நடந்த யுத்தம், இருபதாம் நூற்றாண்டில் காணப்பட்டிருந்த முன்னேற்றங்களோடு பெருமளவில் தொடர்புடையது என்று அவர் குறிப்பிட்டார்.

அந்தக் கடற்கரைப் பகுதியில் கிடைத்த வெற்றி நாஜி ஜெர்மனி மீது கூட்டணிப் படைகள் வெற்றிகொள்ள வழிவகுத்திருந்தது.

D-Day  என்று கூறப்படுகின்ற தினத்தன்று மிக மோசமான மிக உக்கிரமான சண்டைகள் நடந்திருந்த ஒமாஹா கடற்கரையில் அமைந்துள்ள அமெரிக்க போர் வீரர்களின் கல்லறைகளிலிருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா D-Day  நினைவு தின சடங்கில் இதனைத் தெரிவித்துள்ளர்.

ஏ9 வீதியூடாக யாழ். குடாநாட்டுக்கு அதிகளவு பொருட்கள் எடுத்துவர அனுமதி

யாழ்ப்பாணத்துக்கு “ஏ9′ தரை வழிப்பாதையூடாக அதிக பொருட்கள் எடுத்து வருவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. தற்போது வராந்தம் 17 லொறிகளில் மட்டுமே பொருட்கள் எடுத்துவரப்படுகின்றன. இனி வாரத்தில் நாற்பது லொறிகளில் பொருட்களை எடுத்துவர அனுமதிக்கப்படவுள்ளது.  யாழ்ப்பாணத்துக்கு 17 லொறிகளில் பொருட்களை எடுத்துவர ஏற்பாடாகியுள்ளது. இதில் சைக்கில்கள், வாளிகள், உணவுப்பொருட்கள், கூட்டுறவுசங்கத்திற்கான பொருட்கள், மின்சார உபகரணங்கள் எடுத்து வரப்படுகின்றன. பொருட்களை எடுத்துவருபவர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தால் தாராளமாக விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன,

“வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த படையினரே யுத்தத்தில் அதிக உயிர்த்தியாகம் செய்தனர்’

வடக்கு கிழக்கின் யுத்த வெற்றிக்கு உயிர்களை அதிகளவு தியாகம் செய்தவர்கள் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த படையினரே என்று மாகாண கிராமிய கைத்தொழில் அமைச்சர் நெரன்சன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாவத்தகமவில் நடைபெற்ற படையினரைப்பாராட்டிய வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வடமேல் மாகாணத்தில் இருந்து 3 ஆயிரம் படையினர் யுத்தத்தில் தமது உயிர்களைத்தியாகம் செய்துள்ளனர்.

மாவத்தகமவில் 153 இராணுவ வீரர்கள் உயிர் இழந்துள்ளனர். கல்கமுவவில் 600 பேர் உயிரிழந்துள்ளனர். நிக்கவரெட்டிய, ஆனமடுவ போன்ற பிரதேசங்களில் அதிகமான இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள். இதனால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவத்தகம மூவின மக்களும் ஒன்றிணைந்து வாழும் பிரதேசமாகும். ஏனைய பகுதிகளுக்கு ஒற்றுமையை வலியுறுத்திக் காட்டக் கூடிய ஒரு முன் மாதிரியான பிரதேசமாக இந்த பிரதேசம் விளங்குகிறது. சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் இன்று வரை எந்தவிதமான இனப்பாகுபாடுமின்றி வாழ்கிறார்கள் என்றார்.

விவாதத்தை முடித்து கொண்ட பாதுகாப்பு கவுன்சில்

06bankimoon.jpgஐ.நா.  இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தனது கடைசிக் கூட்டத்தை முடித்துக் கொண்டது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். அகதிகள் முகாமிலிருந்து 13 ஆயிரம் பேர் காணாமல் போனது தொடர்பாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது தொடர்பாகவும் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் விளக்கம் தரவில்லை.

இலங்கைப் பிரச்சினை குறித்து பொதுவாகவே அவர் பேசினார்.

ஈழத்தில் நடந்த இறுதிப் போரின்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று விவாதித்தது. இலங்கையில் இடம்பெற்ற போரின் கடைசி நாட்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறித்தும் 13 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் அகதிகள் முகாமில் இருந்து காணாமல் போய் இருப்பது குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நேற்று கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு வந்த அமெரிக்க தூதர் ரோஸ்மேரி டிகார்லோ கூறுகையில், இது சாதாரண கூட்டம்தான். இந்தக் கூட்டத்தின் முடிவில் எந்தவிதமான அறிக்கையும் வெளியிடப்பட மாட்டாது. இலங்கை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எங்களுக்கு தெரிவிக்கவுள்ளனர், அவ்வளவுதான் என்றார்.

இக்கூட்டத்தில் இலங்கை தவிர வட கொரியா குறித்தும் உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதாம். கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தனது ஆலோசகர்களான விஜய் நம்பியார் மற்றும் கிம் வோன் சூ ஆகியோருடன் கலந்து கொண்டார். பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் மிஷல் மோன்டாஸும் அவருடன் சென்றார். நேற்றைய கூட்டத்தில் கூறப்பட்டபடி பான் கி மூன் இலங்கை இனப்படுகொலை தொடர்பாக விளக்கம் ஏதும் தரவில்லை என்று இன்னர் சிட்டி பிரஸ் தெரிவிக்கிறது.

மேலும் நேற்றைய கூட்டம்  ஒரு மேலெழுந்தவாரியான கூட்டம் என்றும், அதிகாரப்பூர்வ கூட்டம் இல்லை என்றும் ஐரோப்பிய கவுன்சில் வட்டாரத் தகவல்கள் கூறுவதாக இன்னர் சிட்டி பிரஸ் கூறியுள்ளது. பிற்பகல் 3.15 மணிக்கு கூட்ட அரங்குக்குள் போன பான் கி மூன், ஜப்பான் தூதர் டகாஷு, இலங்கை தூதர் ஆகியோருடன் மாலை 5 மணியளவில் வெளியில் வந்தார். பான் கி மூனிடம் செய்தியாளர்கள் அகதிகள்முகாமிலிருந்து காணாமல் போனவர்கள் குறித்து கேட்டபோது, போர் பாதித்த பகுதியில் சிகிச்சை அளித்து வந்த டாக்டர்கள் பிடித்து வைத்திருப்பது குறித்து நான் அதிபர் ராஜபக்சேவுடன் பேசியுள்ளேன். இலங்கை வெளியுறவு அமைச்சரிடமும் பேசியுள்ளேன் என்றார்.

அப்போது உடன் இருந்த இலங்கை தூதர், சம்பந்தப்பட்ட டாக்டர்களை சந்திக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு, இலங்கை சட்ட திட்டத்தின்படி அனுமதி தரப்படுகிறது என்றார். அகதிகள் முகாம்களிலிருந்து காணாமல் போன தமிழர்கள்  குறித்தோ, கடைசி நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறித்தோ பான் கி மூன் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

நேற்றைய கூட்டத்தோடு இனிமேல் இலங்கை  தொடர்பாக பாதுகாப்பு  கவுன்சிலில் விவாதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு விட்டது.

வெற்றிடமான 3 எம்.பி.க்களின் இடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் – 9ஆம் திகதி சத்தியப்பிரமாணம்

06arliament.jpgவெற்றி டமாகியுள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் இடங்களுக்கு புதிய எம்.பிக்கள் 3 பேர் நியமிக்கப்படவுள்ளதோடு எதிர்வரும் 9ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது இவர்கள் மூவரும் சத்தியப்பிரமாணம் செய்வார்கள் என ஆளும் கட்சி பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர் அமரசிறி தொடங்கொட,  ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அலிக் அலுவிஹார மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் கே. பத்மநாதன் ஆகியோரின் இடங்களுக்கே இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் அமரசிறி தொடங்கொடவின் இடத்துக்கு ஐ.ம.சு.முன்னணி காலி மாவட்ட பட்டியலில் அடுத்ததாகவுள்ள சமிந்த வீரக்கொடி நியமிக்கப்படவுள்ளதோடு அலிக் அலுவிஹாரவின் இடத்துக்கு மாத்தளை மாவட்ட ஐ.தே.க. பட்டியலில் அடுத்ததாகவுள்ள நந்தமித்ர ஏக்கநாயக்க நியமிக்கப்படவுள்ளார். இதேவேளை,  இலங்கை தமிழரசுக் கட்சி எம்.பி.யான கே. பத்மநாதனின் இடத்துக்கு இதுவரை எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

பொசன் நிகழ்வுகள் இன்று ஆரம்பம்

poson_s.jpgபொசன் நிகழ்வுகள் அநுராதபுரம், மிஹிந்தலையில் இன்று ஆரம்பமாகின்றன. மூன்று தினங்களாக நடைபெறவுள்ள பொசன் நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர மாவட்ட செயலாளரும் பொசன் குழுவின் தலைவருமான எச்.எம்.கே. ஹேரத் தெரிவித்தார்.

பொசன் நிகழ்வுகளை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவையை வழங்க இலங்கை போக்குவரத்துச் சபை இணக்கம் தெரிவித்துள்ளது. இதுதவிர மலசலகூட வசதிகளை வழங்க அநுராதபுரம் மாநகர சபையும் நீர் சுத்திகரிப்பு வேலைகளை மேற்கொள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும்  இணங்கியுள்ளன.

இதேவேளை,  பொசன் நிகழ்வுகள் நடைபெறும் மூன்று தினங்களிலும் அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நகரங்கள், பௌத்த விகாரைகள் என்பவற்றை மின் விளக்குகளால் அலங்கரிப்பதற்குரிய ஏற்பாடுகளை இலங்கை மின்சாரசபை மேற்கொண்டுள்ளது. நிகழ்வுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி அநுராதபுரம் பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

மலையகத்தில் இடி, மின்னலுடன் மழை தெலைபேசி, மின்சார உபகரணங்கள் சேதம்

rain.jpgமலை யகத்தில் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இடிமின்னலுடன் கடும் மழை பெய்து வருவதோடு பலத்த காற்றும் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் மின்சார உபரகணங்கள், தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் வானொலிப் பெட்டிகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது மின்சார உபகரணங்கள் மற்றும் தொலைபேசி முதலானவற்றைப் பயன்படுத்துவதில் கவனம் எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அடை மழைபெய்து வருவதால் வரட்சியின் போது வற்றியிருந்த மவுசாக்கலை, காசல் ரீ ,கெனியன், நோட்டன் பிரிட்ஜ், விமல சுரேந்திர நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் விறுவிறுவென உயர்ந்து வருகின்றது. அத்தோடு புதுவெள்ளம் பாய்ந்து வருவதால் நீர்த்தேக்கங்களின் கரையோரத்தில் மீன் பிடிப்பவர்களின் தொகையும் அதிகரித்து வருகின்றது.

நீதியின் முன் அனைத்து இனமும் சமம் : ஓய்வு பெறும் பிரதம நீதியரசர்

06srilanks_chief_judge.jpgநீதியில் சிங்கள பௌத்தம் என ஒன்று இல்லை. எல்லா இனமும் சமயமும் ஒன்று தான். நான் இனவாதியாக இருக்கவில்லை.” இளைப்பாறிச் செல்லும் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்களுக்கு, உகந்த நீதி மற்றும் சமூக கட்டமைப்புகள் மூலம், சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு அளிக்காவிட்டால் தமிழ் மக்களிடையே ஆயுத மோதலுக்குப் பதிலாக மற்றொரு கிளர்ச்சி வெடிக்கும் சாத்தியம் உள்ளது.

சரியான முறையில் தமிழர் உரிமைகள் வழங்கப்படாத பட்சத்தில் மீண்டுமொரு ஆயுத போராட்டத்தை சந்திக்க நேரிடலாம்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நேற்றுடன் விடைபெறுவதை ஒட்டி அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் போதிய ஆய்வோ, யோசனை செய்தோ இயற்றப்படவில்லை. இந்திய அரசமைப்பைப் பார்த்து அந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவுக்கு இது சரியாக இருக்கலாம். இலங்கைக்கு அது ஏற்புடையதல்ல.

பொலிஸ் அதிகாரத்தை பரவலாக்கினால் பொலிஸ் மா அதிபர் அதிகாரம் அற்றவராகவே இருப்பார். மாகாணங்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்துவிட்டு அவர் சும்மா இருக்க வேண்டும்.

இதேபோல் காணி விவகாரமும் உயர்வானது. மொத்தத்தில் 13 ஆவது திருத்தம் பல ஓட்டைகளைக் கொண்டது. இலங்கையில் மாகாணங்களுக்கு சரியான எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. எல்லைகள் வரையறுக்காமல் எதனையும் செய்யமுடியாது.

சரியான முறையில் எல்லைகள் வகுக்க முறையேதும் இல்லை.

நீதியில் சிங்கள பௌத்தம் என ஒன்று இல்லை. எல்லா இனமும் சமயமும் ஒன்று தான். நான் இனவாதியாக இருக்கவில்லை. இலங்கையன் என்றே செயற்பட்டேன். சகல மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படி பாதுகாக்கப்படாவிட்டால் மோதல்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம். நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களை நடமாட அனுமதிக்க வேண்டும். இல்லையேல் சர்வதேசத்தின் கெட்ட பெயரை சம்பாதிக்க வேண்டி வரும்” என்றார்.