அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

2010: தேசிய மீலாத் விழா காத்தான்குடியில்

hisbulla-mlam.jpg2010ம் ஆண்டுக்கான தேசிய மீலாதுந்நபி விழா காத்தான் குடியில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.தேசிய மீலாதுந்நபி விழாவை 2010ம் ஆண்டு காத்தான்குடியில் நடத்த வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் தெரிவித்துள்ளார். இவ்விழாவை மிகச் சிறப்பாக நடத்த ஜனாதிபதி மிகவும் ஆர்வம் கொண்டுள்ளார்.

சோமாலியாவில் செய்தியாளர் கொலை

சோமாலியாவின் முன்னணி வானொலி நிறுவனங்களில் ஒன்றான ரேடியோ ஷபெல் நிறுவனத்தின் இயக்குநரான முக்தர் முகமது ஹிராபே என்பவர் தலைநகர் மொகதிஷுவில் முகமூடி தரித்த கும்பல் ஒன்றினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சோமாலியாவில் இந்த வருடத்திலே கொல்லப்படுகின்ற ஐந்தாவது பத்திரிகையாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலே அரசாங்க ஆதரவு படைகளுக்கும் எதிரணிக் குழுக்களுக்கும் இடையே தொடர்ந்துவரும் மோதல்களின் பின்னணியில் இந்த கொலை நடந்துள்ளது.

கிளர்ச்சிக் குழுத் தலைவரான ஷேக் ஹசன் தாஹிர் அவெய்ஸ் என்பவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று வெளியான செய்திகள் காரணமாக ஆத்திரம் அடைந்துள்ள அரசாங்க எதிர்ப்பு ஆயுதக் குழுவின் உறுப்பினர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று பிபிசியின் கிழக்கு ஆப்பிரிக்க செய்தியாளர் கூறுகிறார்.

நாட்டில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு மென்மேலும் ஆபத்தான இடமாக சோமாலியா உருவாகிவருகிறது என எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

பிரேசில் கடற்படையால் உடல்கள் மீட்பு

01-air-france.jpgகடந்த வாரம் விபத்துக்குள்ளான ஏர்பிரான்ஸ் விமானத்தில் பயணித்தவர்கள் என்று நம்பப்படும் மூன்று பேரின் உடல்களை மீட்டுள்ளதாக பிரேசில் கடற்படை கூறியுள்ளது. ரியோவில் இருந்து பாரீஸ் சென்ற இந்த விமானத்தில் 228 பேர் பயணித்தனர். இப்போது கண்டு எடுக்கப்பட்ட உடல்களோடு சேர்த்து இதுவரையில் ஐந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தன்னுடைய ஏர்பஸ் தயாரிப்பு விமானங்களில் உள்ள வேகத்தை காட்டும் கருவிகளை மாற்றும் பணியை துரிதப்படுத்தப் போவதாக ஏர் பிரான்ஸ் கூறியுள்ளது. இந்தக் கருவிகளில் பிரச்சனை இருப்பது ஒராண்டுக்கு முன்பாகவே கண்டுபிடிக்கப்பட்டது, எனினும் விபத்து நடைபெறுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த கருவிகளை மாற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

விபத்தை ஆராய்ந்து வருபவர்கள், காணாமல் போவதற்கு முந்தைய நிமிடங்களில், விமானத்தின் உணர்வான்கள் முரண்பட்ட தகவல்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் சகல வசதிகளுடனும் உட்கட்டமைப்பு – பசில்

basil.jpgவட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் பாடசாலை, சுகாதாரம், நீர், மின்சாரம் உட்பட சகல உட்கட்டமைப்பு வசதிகள் வெகுவிரைவில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம். பி. தெரிவித்தார்.

இங்குள்ள மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் கட்டம் கட்டமாக செய்து கொடுத்து வெகு விரைவில் வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முக்கிய எதிர்பார்ப்பாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார். வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் ‘தெற்கின் தோழன்’ என்ற தொனிப் பொருளில் கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரையான ரயில் சேவை நேற்று முன்தினம் ஆரம்பமானது. கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்ற ரயில் தாண்டிக்குளம் சென்றடைந்த பின்னர் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் தாண்டிக்குளம் புகையிரத நிலையத்தில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே பசில் ராஜபக்ஷ எம். பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில்:-

எமது படை வீரர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளும், அர்ப்பணிப்புக்களுமே இன்று யாழ் தேவியை தாண்டிக்குளம் வரை கொண்டுவர முடிந்தது. எமது படை வீரர்கள் மனிதாபிமான நடவடிக்கையை மனிதாபிமான முறையில் முன்னெடுத்தனர். அவர்களது சேவையும், பங்களிப்புக்களும் மிகவும் மகத்துவமானது எனவே அவர்களை என்றும் நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையும் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரையும் புகையிரத சேவைகளை ஏற்படுத்தி கொடுப்பது மாத்திரமின்றி இதுபோன்ற சகல வசதிகளையும் படிப்படியாக செய்து கொடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அது கட்டாயம் வெகுவிரைவில் நிறைவேறும்.

எனவே தான் ஏ-9 பிரதான வீதி, மதவாச்சி – மன்னார் வீதி, மன்னார் – பூநகரி வீதி என்று பல முக்கிய வீதிகளை புனரமைப்பதற்கான பணிகளை அரசாங்கம் வேகமாக முன்னெடுத்து வருகின்றது. புகையிரதம், போக்குவரத்து, மின்சாரம், நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசனம், பாடசாலை சுகாதாரம் உட்பட சகல உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளும் ஐந்து மாவட்டங்களிலும் செய்து கொடுக்கப்படும்.

இலங்கையிலுள்ள ஏனைய மாகாணங்களை போன்று சகல வளங்களையும் கொண்ட இந்த மாகாணம் சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யப்படும். நிவாரணக் கிராமம் என்பது சுற்றுலா விடுதியல்ல. சில சில குறைபாடுகள் இருக்கலாம். இதனையும் நிவர்த்தி செய்த வண்ணம் தமது பணிகளை அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் 30 புதிய பாடசாலை கட்டடங்கள் நிர்மாணிக்க திட்டம் – சுசில்

civiling_fleeng3.jpgவட மாகாணத்தில் 30 புதிய பாடசாலைக் கட்டடங்களை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் வவுனியாவில் தெரிவித்தார். மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் இந்தப் புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்தார்.

‘வடக்கின் வசந்தம்’ 180 நாள் வேலைத்திட்டத்துடனேயே பாடசாலைக் கட்டட நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்படுமென்று தெரிவித்த அமைச்சர் பிரேம்ஜயந்த் ஒவ்வொரு பாடசாலைக்கும் தலா 35 இலட்சம் ரூபாய் செலவிடப்படுமென்று தெரிவித்தார்.

இதற்குக் கேள்விப்பத்திரம் கோரப் படாமல், ‘ரேம்’ எனும் அரச சார்பற்ற நிறுவனமொன்றுடன் விரைவில் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வட மாகாணப் பாடசாலைகளினதும், இடம்பெயர்ந்த மாணவர்களினதும் குறை நிறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கு முகமாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசேட மாநாடொன்று நடைபெற்றது.

இதில் வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வல்ட் தற்போதைய நிலைவரத்தை விளக்கினார். இந்த மாநாட்டில் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கல்வி பிரதியமைச்சர் எம். சச்சிதானந்தன் மற்றும் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு ஐந்து கண்காணிப்பு அலுவலகங்களை அமைப்ப தாகக் கூறிய அமைச்சர் பிரேம் ஜயந்த், அதன் செயற்பாட்டுக்கென 30 சைக்கிள்கள், சீ.டி.எம்.ஏ. தொலைபேசி வசதி, ஃபக்ஸ் இயந்திரம், பிரதிபண்ணும் இய ந்திரம் ஆகிய வசதிகளை அடுத்த வாரம் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.

பிரதம நீதிபதியாக மேலுமோர் என் டீ சில்வா.

asoka-de-silva.jpgநீதித் துறையில் இலங்கையில் அதியுயர் பதவியாகிய பிரதம நீதியரசர் பதவியில் இருந்து சரத் என் சில்வா அவர்கள் 7ம் திகதி யூன் மாதம் ஓய்வு பெறும் நிலையில், ஜோசப் அசோக என் டீ சில்வா அவர்கள் புதிய பிரதம நீதியரசராக நியமனம் பெறுகின்றார்.

1971ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையில் தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட இவர், 1972ம் ஆண்டு உச்ச நீதிமன்றில் சட்டத்தரணியாக சத்தியப்பிமாணம் செய்துகொண்டதுடன் இலங்கை சட்டத் துறையிலே பல பதவிகளை வகித்து, 2001 ஆண்டு உச்ச நீதிமன்றின் மேலதிக விசாரணை நீதிபதிகளுக்கான தலைவராக விளங்கியுள்ளார்.

ருவண்டாவில் நிறுவப்பட்டிருந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு அன்றைய ஐ.நா செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களால் அசோக என் டீ சில்வா அவர்கள் நிரந்தர நீதிபதியாக 2004ம் ஆண்டு நியமனம் பெற்று, அங்கிருந்த 16 நீதிபதிகளுள் ஒருவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச சட்டவியலில், விசேடமாக இனஅழிப்பு, படுகொலைகள் போன்றவற்றில் மிகவும் பெயர்போன இவர் இன்று இப்பதவிக்கு நியமனம் பெற்றிருப்பாதானது இலங்கையில் புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினை விவகாரங்களை கையாள்கையில் நீதித்துறை நிமிர்ந்து நிற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: இலங்கைக்கு நேரடி பாதிப்பு இல்லை

sea.jpgவங்காள விரிகுடாவின் வட மேற்கு பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கைக்கு நேரடியான பாதிப்பு கிடையாது என்று வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ். ஆர். ஜயசேகர நேற்றுத் தெரிவித்தார்.

இருப்பினும் இத்தாழமுக்கம் காரணமாக இலங்கையில் காற்றின் வேகம் அதிகரிக்க முடியும். அத்தோடு கடலும் கொந்தளிப்பாகக் காணப்படும். அதனால் கடலுக்குச் செல்லும் மினவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கையிலிருந்து மிகவும் தூரமான கடற் பிரதேசத்தில் தான் இத்தாழமுக்கம் ஏற்பட்டிருக்கின்றது. அதனால் இத்தாழமுக்கத்தினால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு கிடையாது.

என்றாலும் வடக்கு, கிழக்கு மற்றும் தென் கிழக்கு கடற் பரப்புக்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதுடன், கடல் கொந்தளிப்பாகவும் உள்ளது. இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலயத்திற்கு 60 கிலோ மீட்டர் வரை அதிகரித்துக் காணப்பட முடியும்.

ஆகவே, இப்பிரதேசங்களில் வாழும் மீனவர்கள், கடலுக்குச் செல்வதாயின் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். தற்போதைய காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கலாம். அதனால் கடும் காற்றின் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் நேற்று முன்தினமிரவு முதல் இடையிடையே கடும் காற்று வீசுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன கூறினார்.

ஜனாதிபதி மியன்மாருக்கு விஜயம்

he_speech_ranaviru_.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மியன்மாருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மியன்மாரில் 2008ம் ஆண்டு ஏற்பட்ட நர்க்கிஸ் புயலில் பாதிக்கப்பட்டு மீள புனரமைக்கப்பட்ட கிராமம் ஒன்றை ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கிராமத்தின் நிர்மாணப்பணிகளுக்கென இலங்கை பிக்குமார் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் தொண்டமான் தலைமையில் இ.தொ.கா.குழுவினர் இந்தியா பயணம்

arumugam-thondaman.jpgஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தூதுக்குழுவினர் புதுடில்லி சென்றுள்ளனர். வடக்கு, கிழக்கு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இக்குழுவினர் இந்தியாவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பாதுகாப்புப் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பாக இந்திய அரசின் உயர்மட்டத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தவே இக்குழுவினர் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வியாழக் கிழமை சென்ற இக்குழுவினர் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதேவேளை, இவர்கள் இந்தியத் தலைவர்களையும் சந்தித்துப் பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், இ.தொ.கா. உபதலைவர்களான எம்.மணிமுத்து, செந்தில் தொண்டமான் உட்பட பலர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடு திரும்புவார்கள்.

குடியரசு தலைவர் உரை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது : திருமாவளவன்

07thirumavalavan.jpgகுடியரசுத் தலைவர் உரையில் சேது சமுத்திர திட்டம்,  இலங்கையில் தமிழீழ  மக்கள் படுகொலை உள்ளிட்ட பல விஷயங்கள் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். சிதம்பரம் தொகுதி  எம்.பி.யும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான தொல். திருமாவளவன் இன்று சிதம்பரம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  முன்னதாக சிதம்பரம் சுப்பிரமணிய தெருவில் உள்ள மன்மதசாமி காமுண்டி கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை துவக்கினார்.

தொடர்ந்து அவர் இத்தொகுதிக்கு உட்பட்ட அண்ணாமலை நகர், லால்பேட்டை, காட்டுமன்னார் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று திறந்த வேனில்  வாக்காளர் களுக்கு நன்றி தெரிவித்தார். இதனையடுத்து தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

கடந்த 2ஆம் தேதி எம்.பி.யாக பதவியேற்ற நான், அனைத்து தேசிய  தலைவர்களை நாடாளுமன்றத்தில் சந்திக்கின்ற வாய்ப்பை பெற்றேன். புகழ் பெற்ற நேரு, அண்ணா போன்ற தலைவர்கள் இருந்த நாடாளு மன்றத்தில் மக்களுக்காக வாதாட நான் சென்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது.

ஏழைமக்களுக்கு கூரை இல்லாத வீடு வழங்கப்பட வேண்டும் என்பது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையாகும். தற்போது ஜனாதிபதி உரையில் ஏழை மக்களுக்கு பாதுகாப்பான வீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதனை நான் வரவேற்கிறேன்.

அதே நேரத்தில் ஜனாதிபதி உரையில் சேது சமுத்திர திட்டம், இலங்கையில் தமிழீழ  மக்கள் படுகொலை உள்ளிட்ட பல விஷயங்கள் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.  குறிப்பாக சேது சமுத்திர திட்டம் பற்றி எந்த குறிப்பும் ஜனாதிபதி உரையில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.