அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வருடம் முழுவதும் டெங்குக்கு எதிராக யுத்தம் நடத்த வேண்டிய நிலையில் நாடு

dengu_1.gifடெங்கு காய்ச்சலினால் இதுவரை நாடளாவிய ரீதியில் 125 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 ஆயிரம் பேர் பீடிக்கப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வமான தகவல்கள் தெரிவிப்பதாக சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான ரேணுகா ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரேணுகா ஹேரத் இந்த தகவல்களை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

“உத்தியோகபூர்வ தகவல்கள் அவ்வாறிருக்க சுமார் 15 ஆயிரம் பேர் வரை டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருக்கலாமென வைத்தியர்கள் கருதுகின்றனர். இலங்கை வரலாற்றில் எப்போதுமே இருந்திராத வகையில் தற்போது டெங்கு காய்ச்சல் நாடு முழுவதும் பரவியுள்ளது.

எனவே, டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய உடனடி நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு எடுக்க வேண்டும்.

கடந்த 5 மாதங்களாகவே டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. எனினும் 3 மாதங்களுக்கு முன்னரே தடுப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காதது ஏன்?

ஏனெனில் யுத்தத்திலேயே அரசாங்கத்தின் அவதானம் இருந்தது. யுத்தமும் அதன் வெற்றியும் முக்கியமானது தான். எனினும் சுகாதார அமைச்சு தனக்குரிய கடமையில் கவனமாக இருந்திருக்க வேண்டும். அதை உரிய முறையில் செய்யாததால் தான் இன்று டெங்குடன் யுத்தம் செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது.

அதாவது, பொதுமக்கள் பாதுகாப்புச் செயலணியைக் கூட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது வருடத்தின் 365 நாட்களையும் டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தி செயற்பட வேண்டியிருக்கிறது.

இதேநேரம், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பு பெறப்பட வேண்டியது முக்கியம். ஏனெனில், கொழும்பு மாநகர எல்லைப் பகுதிக்குள்லேயே வடிகாலமைப்புகள் சீராக இல்லாமையால் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்பதுடன் குப்பை கூளங்களும் நிரம்பி கிடப்பது இதற்கு சிறந்த உதாரணம்.

எனவே, டெங்கு ஒழிப்புக்கு சுகாதார அமைச்சின் தலைமையில் உள்ளூராட்சி மன்றங்கள், கல்வி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றையும் இணைத்துக் கொண்ட ஒன்றிணைந்த வேலைத் திட்டமொன்று அவசியம். அத்துடன் தோட்டப்புறங்கள் மீதும் இதன் போது கவனம் செலுத்தப்பட வேண்டும்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இனிமேலும் தாமதிக்கும் ஒவ்வொரு நாளிலும் உயிரிழப்புகளும், டெங்கினால் பீடிக்கப்படுபவர்களது எண்ணிக்கையும் அதிகரித்தே செல்லும் என்றார்.

வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த 21 பொலிஸ் நிலையம்

வட மாகாணத்தில் வெகுவிரைவில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் பொருட்டு 21 பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்கிரமரட்ன தெரிவித்தார்.

மன்னார் பொலிஸ் பிரிவில் ஏழு பொலிஸ் நிலையங்கள் தற்பொழுது நிறுவப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் ஆகிய மூன்று பொலிஸ் பிரிவுகளில் 14 பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்கிரமரட்னவின் தலைமையில் நேற்றுக் காலை பொலிஸ் தலைமையகத்திலுள்ள விசேட செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொலிஸ் மாஅதிபர் இங்கு மேலும் தகவல் தருகையில்,

புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட சகல பிரதேசங்களிலும் வெகுவிரைவில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு அங்கமாகவே 21 பொலிஸ் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொலிஸ் பிரிவில் மடு, விடத்தல்தீவு, இலுப்பக்கடவாய், முழங்காவில், சிலாவத்துறை, பண்டிவிரிச்சான் ஆகிய பிரதேசங்களில் ஏழு பொலிஸ் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள 14 பொலிஸ் நிலையங்கள் வெகுவிரைவில் நிறுவப்படும் என்றார். இது தொடர்பாக மாதத்திற்கு ஒருமுறை விசேடமாக கூடி ஆராயப்படுவதாக தெரிவித்த அவர், வட மாகாண செயலணி நிறுவப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

புதிய திட்டத்திற்கமைய பிரதி பொலிஸ் மாஅதிபர் (டி.ஐ.ஜி) ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாங்குள பொலிஸ் பிரிவுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளார் என்றார்.

இதேவேளை இந்த பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் கீழ் மூன்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (எஸ். எஸ். பி.) நியமிக்கப்படவுள்ளனர்.

மாங்குளம் பொலிஸ் பிரிவில் – துணுக்காய், வட்டுவாக்கல், புலியங்குளம், ஜயபுரம், அக்கராயன் குளம், மல்லாவி, முறிகண்டி ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. ஓமந்தை பிரதேசத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது என்றார்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில், அலம்பில், நெடுங்கேணி, குமுழமுனை, ஒட்டுச்சுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

அத்துடன், கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் பரந்தன், ஆனையிறவு, சாலை ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளன என்றும் பொலிஸ் மாஅதிபர் குறிப்பிட்டார். மிதிவெடிகள் அகற்றப்பட்டவுடன் இதற்கான நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்களான இளங்ககோன், நிமல் மெதிவக, பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அனுர சிறிவர்தன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான ரஞ்சித் குணசேகர, ஐ. எம். கருணாரட்ன, எம். கே. டி. டபிள்யூ. அமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலதா பெரஹர உற்சவம் ஜுலை 22 இல் ஆரம்பம்

kandy-perahera.jpgவருடாந் தம் நடைபெற்று வரும் கண்டி தலதா பெரஹர உற்சவம் எதிர்வரும் ஜுலை மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக ஸ்ரீதலதா மாளிகையின் தகவல் அதிகாரி வொல்வின் லொகுகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜுலை மாதம் 27ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையும் கும்பல் பெரஹரவும்ää ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து 5ஆம் திகதி வரை ரந்தோலி பெரஹரவும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள நான்கு தேவாலயங்களின் நீர்வெட்டு உற்சவத்துடன் பெரஹர நிகழ்வுகள் யாவும் முடிவடையவுள்ளன.

நாட்டிலிருந்து பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் இவ்வருட பெரஹர நிகழ்வுகளைக் கண்டுகளிக்க பெருமளவு பக்தர்கள் கண்டிக்கு விஜயம் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார். 

மிஹிந்தலையில் காணாமல்போன சிறுமி நேற்று சடலமாக மீட்பு – 42 வயது நபர் கைது; தாய்க்குத் தொடர்பு?

மிஹிந் தலை பிரதேசத்தில் காணாமல் போன ஆறு வயது சிறுமி நேற்றுக்காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வர்ஷனிகா லக்ஷானி குணரட்ன என்ற பெயருடைய இந்தச் சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்தே நேற்றுக் காலை 9.00 மணியளவில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

கடந்த 06ம் திகதி சனிக்கிழமை இந்தச் சிறுமி மிஹிந்தலை கசமடாவ பிரதேசத்தில் வைத்து காணாமல் போனதாகவும் இரண்டு தினங்களுக்குப் பின்னர் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சிறுமியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 42 வயதுடைய நபர் ஒருவர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ். எஸ். பி. குறிப்பிட்டார்.

கொலை செய்யப்பட்டுள்ள சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா இல்லையா என்பது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவரென கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பல்வேறு பாலியல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் இராணுவ வீரரொருவரான இச்சிறுமியின் தந்தை இராணுவத்திலிருந்தபோது விடுமுறையில் வந்து மீண்டும் சேவைக்குத் திரும்பாததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்பட்டதுடன் கடந்த பொஸன் போயா தினத்தில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை பெற்று வந்துள்ளார். இச்சம்பவத்துடன் சிறுமியின் தாய்க்கும் தொடர்பிருக்கலாம் என சிறுமியின் தந்தை சந்தேகம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் பற்றிய விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் பிரிவு ஒன்றுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சமரக்கோனின் ஆலோசனைக்கிணங்க மிஹிந்தலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

வடக்கில் தற்காலிக அடையாள அட்டை

election_ballot_.jpgவடக்கில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலை முன்னிட்டு அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்க தேர்தல் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளதோடு யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 417 பேரும் வவுனியா நகர சபை தேர்தலில் வாக்களிக்க 24 ஆயிரம் பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுள் பலருக்கு அடையாள அட்டை இல்லை என அறிவிக்கப்படுவதால் தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமணசிறி தெரிவித்தார்.

இதன்படி தமது பிரதேச கிராம உத்தியோகத்தரினூடாக தற்காலிக அடையாள அட்டை பெற விண்ணப்பிக்குமாறு தேர்தல் செயலகம் கோரியுள்ளது. சகல தேர்தல்களிலும் அடையாள அட்டை கட்டாயமாக்கப் பட்டுள்ளதோடு தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு,  சாரதி அனுமதிப் பத்திரம், புகையிரத பருவச்சீட்டு, ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, மத குருமார்களுக்கான அடையாள அட்டை என்பன உள்ளவர்களுககு மாத்திரமே வாக்களிக்க அனுமதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் 25 இடங்களில் நாளை மின்வெட்டு

மட்டக் களப்பு மாவட்டத்தில் 25 இடங்களில் 9 மணிநேர மின்வெட்டு நாளை வியாழக்கிழமை அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய மின்சார சபை அறிவித்துள்ளது.

காலை 8.00 மணி முதல் 5 மணி வரை சத்துருக்கொண்டான், மைலம்பாவெளி, ஏறாவூர் நகரம், மீராங்கேணி, சதாம்ஹுசைன் கிராமம், மிச்நகர், செங்கலடி, கொடுவாமடு, இலுப்படிச் சேனை, கரடியனாறு, ஆயித்திய மலை, உன்னிச்சை, கித்துள், மரப்பாலம், உறுகாமம், கொம்மாதுறை, கழுவங்கேணி, மாவடிவேம்பு, சித் தாண்டி, முறக்கொட்டான்சேனை, சந்திவெளி, கோரகல்லிமடு, கிரான், கும்புறுமூலை, கிண்ணையடி ஆகிய 25 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

தேசிய கொடி எரிப்பு-வித்தியாசமான நிபந்தனையுடன் ஜாமீன்

தேசியக் கொடியை எரிக்க முயன்ற தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை  உயர்நீதிமன்றம்  வித்தியாசமான நிபந்தனையுடன் ஜாமீன் அளித்தது.

இந்த அமைப்புகளின் சார்பில், மே 24ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது சிலர் தேசியக் கொடியை எரிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு தமிழரசன் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.

இவர்கள் எட்டு பேருக்கும் உள்ளூர் கோர்ட்டுகளில் ஜாமீன் கிடைக்கவில்லை. இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

வழக்கை நீதிபதி ரகுபதி  விசாரித்தார். பின்னர் வித்தியாசமான நிபந்தனையுடன் அவர்களுக்கு ஜாமீன் அளித்தார். அந்த வித்தியாசமான நிபந்தனை என்னவென்றால், எட்டு பேரும் ஒரு மாதத்திற்கு தங்களது வீடுகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.

ஒரு வாரத்திற்கு, தினமும் 3 மணி நேரம் அனாதை இல்லத்திற்கு சென்று பொது சேவை செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.கொடியை எரிக்க முயன்றவர்களுக்கு அந்தக் கொடியை ஏற்றி வர வேண்டும் என வித்தியாசமான தண்டனை கொடுத்தது நீதிமன்றத்தில் பலரையும் வியப்படைய வைத்தது.

சிவகீதா பிரபாகரன் த.ம.வி.பு. கட்சியிலிருந்து ராஜினாமா

07sivageetha.jpgமட்டக் களப்பு மாநகர சபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மத்திய குழு தலைவரான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் கூடியது.

அக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மாநகர சபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கியும்,தான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைய எடுத்த முடிவு தொடர்பாகவும் விளக்கிய பின்பு ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார்.

தனது சுய விருப்பத்தின் பேரிலேயே இந்த முடிவை தாம் எடுத்ததாகவும், யாருடைய அழுத்தமும் இம்முடிவுக்குக் காரணமல்ல என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்த சிவகீதா பிரபாகரன், ஜனாதிபதியைச் சந்தித்து அடுத்த சில தினங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணையவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

லெபனான் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி அபார வெற்றி

election_ballot_.jpgலெப னானில் நடைபெற்ற  பாராளுமன்றத் தேர்தலில் சாத் ஹரிரி தலைமையிலான  கூட்டணி அபார வெற்றியைப்  பெற்றுள்ளது. பாராளுமன்றத்தில் தமது கூட்டணியான 14 மார்ச் முன்னணி தொடர்ந்தும் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்குமென அதன் ஹரிரி தெரிவித்துள்ளார். வேளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின்படி ஹரிரி தலைமையிலான கூட்டணி 128 மொத்த ஆசனங்களில் 71 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஹிஸபுல்லா அமைப்பு 57 ஆசனங்களையே பெற்றுள்ளதுடன் அதன் தலைவர் ஹஸன் நஸ்ருல்லா தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 128 ஆசனங்களில் ஹரிரியின் கூட்டணி 70 ஆசனங்களையும் ஹிஸ்புல்லாஹ் முன்னணி 58 ஆசனங்களையும் கைப்பற்றுமென எதிர்பார்க்கப்பட்டபோதிலும்; வெற்றிபெற்ற அணி எதிர்பார்த்ததைவிட ஒரு ஆசனத்தைக் கூடுதலாக பெற்றுள்ளது.

இங்கு வெற்றி பெற்றவர் தோல்வியடைந்தவர் என எவருமில்லை. லெபனானும் ஜனநாயகமுமே இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதெனத் ஹரிரி தெரிவித்துள்ளார். 30 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த அதேவேளை, 50 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லெபனானின் அதிகாரப்பகிர்வு அரசியல் முறைமையின் கீழ் பாராளுமன்றத்தின் 128 ஆசனங்களும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையில் சரிசமமாகப் பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம்: ஆனந்தசங்கரி

007anandasangaree.jpg“தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பதில் சொல்ல வேண்டும். தமிழர்களின் முதல் எதிரி, தமிழ் தேசிய கூட்டமைப்பே” என ஜனநாயக தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைத் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையைச் சீரழித்து, அவர்களை அநாதைகளாகவும், விதவைகளாகவும், ஊனமுற்றோர்களாகவும் ஆக்கி அகதி முகாம்களுக்குள் முடக்கியுள்ள பாவத்தையும், பழியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்கவேண்டும்.

புலிகளின் பிடியிலிருந்த அப்பாவித் தமிழர்களை விடுவிக்க முயற்சிக்காமல் புலித் தலைமைகளைக் காப்பாற்றவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபட்டது. ஐரோப்பிய யூனியன், ஐ.நா. என்பன எவ்வளவோ வேண்டியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் யுத்தத்தை நிறுத்தும்படி கோரி,பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்கும் புலிகளின் தந்திரத்துக்குத் தாளம் போட்டது.

இதனால் தமிழ் மக்கள் உயிர்களையும் சொத்துக்களையும், இருப்பிடங்களையும், உறவுகளையும் இழந்துள்ளனர். என்றோ ஒருநாள் முகாம்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்பும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறுதலான அணுகுமுறைகளை மக்கள் புரிந்துகொள்வர். புலிகளின் பிடியிலிருந்து நாங்கள் விடுபட்டிருந்தால் இந்த இழப்புக்களைத் தவிர்த்திருக்கலாம் என உணர்ந்து கொள்வர்.

தமிழர்களின் உயிர்களும் உடைமைகளும் காவு கொள்ளப்படுவதற்குக் காரணமாகவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து கொள்ள எவ்வித அருகதையும் கிடையாது. அவ்வாறு இணைந்தால் உயிரிழந்த, காயமடைந்த, அகதிகளாக்கப்பட்ட தமிழர்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, புலிகளை ஏகப் பிரதிநிதிகளாகக் கொண்டோர் குறையாக எடைபோடக்கூடாது. மேயர் பதவிகளுக்காகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காகவோ தமிழ்க் கூட்டமைப்பைப் போல் விலைபோக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தயாரில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு தடியால் தொடுவதற்குக் கூட நாங்கள் தயாரில்லை.

புலிகள் அழிந்துவிட்டதால் புலிகளின் பிரதிநிதிகள் எனக் கூறியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் கெளரவமாக பதவி விலகவேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் ஜனநாயகத்தை காப்பாற்ற ஐந்து வருடம் தனியாக நின்று போராடினேன். இதனால் துரோகி என விமர்சிக்கப்பட்டேன். ஆனால் நான் இன்று சரியான பாதையில் உள்ளேன். அதை நிரூபித்தும் விட்டேன்” என்றார்.